பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா துப்பாக்கி சுடுதலில் இரு வெண்கலப் பதக்கம் வென்ற மனுபாக்கரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக தவவல் பரவி வருகிறது. உண்மை என்ன?
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை மனு பாக்கர் வென்று தந்தார். துப்பாக்கி சுடுதலில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவிலும், கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவிலும் இரு வெண்கல பதக்கங்களை மனு பாக்கர் வென்றார். அதே போல ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி கைப்பற்றினார். தொடர்ந்து, ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
அரங்கில் ஒரு பக்கத்தில் நீரஜ் சோப்ராவும் மனு பாக்கரும் நின்று சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் நின்று கொண்டிருந்த பாணி மற்றும் பேசிய விதம் ஆகியவற்றை வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அதோடு, மனு பாக்கரின் தாய் சுமேதா, நீரஜ் சோப்ராவுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்.
இந்த வீடியோவை வைத்து தனது மகளுக்கு அவர் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனவும், ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவரை பேசி முடிக்க முயற்சி செய்கிறார் எனவும் நெட்டிசன்கள் வேடிக்கையாக கூறி வருகின்றனர். இந்தியாவில் ஒரு ஆணும் பெண்ணும் சிரித்து பேசினால் காதல், திருமணம் என பேசும் வழக்கம் இருக்கிறது” என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், மனுபாக்கரின் தந்தை, இன்னும் தனது மகள் திருமண வயதை எட்டவில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “மனு இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கிறது. எனவே இப்போது அவளது திருமணத்தைப் பற்றி சிந்திக்கவில்லை” என்று கூறினார்.
மேலும், தனது மனைவியும் நீரஜ் சோப்ராவும் பேசும் வீடியோவுக்கு பதிலளித்த ராம் கிஷன், மனு பாக்கரின் தாய் நீரஜ் சோப்ராவை தனது மகனைப் போலவே நடத்துகிறார் என்று கூறினார்.
நீரஜ் சோப்ராவின் மாமாவும் திருமணம் குறித்த வதந்திகள் குறித்து பேசி உள்ளார். “நீரஜ் பதக்கத்தைக் கொண்டு வந்த போது, முழு நாடும் அதைப் பற்றி அறிந்தது. அதேபோல், அவர் திருமணம் செய்து கொண்டால், அனைவருக்கும் தெரிந்துவிடும்” என்றார்.
நீரஜ் சோப்ரா மனு பாக்கர் ஆகிய இருவரும் அரியானாவைச் சேர்ந்தவர்கள். ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஆவார். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேபோல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலப்பு பிரிவிலும் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை மற்றும் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.