No menu items!

ஜெயிலுக்குப் போனா திருந்திடுவாங்களா? – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு

ஜெயிலுக்குப் போனா திருந்திடுவாங்களா? – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு

சிறைவாசிகளிடையே சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தரும் பல முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் நீதி அமைப்பும், சீர்திருத்த நிறுவனங்களும் குற்றவாளிகளின் நடத்தைகளைச் சீர்திருத்தவோ அல்லது மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவோ இல்லை என்றும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

தேவை இல்லாவிட்டாலும் பழக்கத்தில் திருடும் திருடர்கள்

சென்னைப் பல்கலைகழகத்தின் குற்றவியல் துறை சார்பில், கடந்த ஏப்ரல் மே மாதங்களில், புழல் மத்திய சிறை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகள் 173 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில், “குற்றவாளிகள் சிறார்களாக அல்லது இளைஞர்களாக இருக்கும்போது குற்றங்களைச் செய்ய ஆரம்பித்து நீண்ட காலமாக குற்றங்களைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். தண்டனைகள் எந்த வகையிலும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னைப் பல்கலைகழக ஆய்வு மாணவி பி.ஷாரோன், “இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மத்திய சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்ட 100 கைதிகளிடம் நேர்காணல் நடத்தினேன். அவர்களில் 81% பேர் திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தனர்.

நான் சந்தித்த விசாரணைக் கைதிகளுக்கு நாள் முழுவதும் செய்வதற்கு என்று வேலைகள் கிடையாது. எனவே முழு நாளும் அவர்கள் சுற்றி இருப்பவர்களுடன் பேசியபடிதான் கழிக்கின்றனர். அப்படி பேசிப் பழகியதில் ஒரு பைக் திருடுபவரும், ஒரு செல்போன் திருடுபவரும் நண்பர்களாகி, சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஒன்றாக இணைந்து திருடியுள்ளனர்.

பட்டறையில் வேலை பார்த்த ஒரு இளைஞர், லாரி போன்ற பெரிய வாகனங்களின் பாகங்களை எடுத்து, யாருக்கும் தெரியாமல் சிலருக்கு கத்தி செய்து கொடுத்ததாக கூறினார்.

சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், “கூகுள் மேப் பார்த்துக்கொண்டு நடப்பவர்களிடம்தான் சுலபமாகத் திருட முடியும். செல்போன், சட்டை மேல் பாக்கெட்டில் இருந்தாலும் சுலபமாகத் திருடிவிடலாம்” என்று கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் 600 செல்போன்களை தான் திருடியுள்ளதாகக் கூறும் அவர், சில நேரங்களில் திருட வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்கிறார்; சில நேரங்களில் திருடும் எண்ணம் இல்லாவிட்டாலும், கைக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் செல்போன்கள் மாட்டுவதால் பழக்கத்தில் திருடுவதாகக் கூறுகிறார். இதில் ஈடுபடுவதற்கு வேகமாக ஓடுவது ‘அவசியமான திறன்’ என்று அவர் கருதுகிறார்.

மற்றொரு இளைஞர், ஒரு நாள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையில் பார்த்த ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். தொலைபேசியில் யாரோ அழைத்ததால் வண்டியை ஓரமாக நிறுத்திப் பேசிக் கொண்டிருந்தார். லிஃப்ட் கேட்டவரும் கீழே இறங்கி நின்றுள்ளார். அவர் பேசி முடிப்பதற்குள், லிஃப்ட் கேட்டவர், அவரது கண் முன்னே அந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். தனது வாகனத்தைத் தொலைத்த சோகத்திலும் கோபத்திலும் இருந்தவர், அன்று மாலையே மற்றொருவரின் இரு சக்கர வாகனத்தை இதே போன்று திருடியுள்ளார். தற்போது 100 இரு சக்கர வாகனங்களைத் திருடியுள்ளதாகக் கூறுகிறார் அவர். “முதல்முறை சிறைக்குச் சென்றுவரும்போது தான் கஷ்டமாக இருந்தது. அதன்பின் பழகிவிட்டது,” என்றார் அவர்.

முதுகலை ஆய்வு மாணவர் நல்லப்பு நிஹாரிகா, “குற்றம் நிரூபிக்கப்பட்ட 71 பேரில் 55 பேர் ஏற்கனவே உடைமை சார்ந்த வழக்கில் ஈடுபட்டவர்கள். தண்டனை பெற்ற பிறகும் குற்றச் செயலில் ஈடுபட்ட 157 பேரில், 46% பேர் 10-க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் உடைமை குற்றங்களைச் செய்துள்ளனர், 38% பேர் மீது இரண்டு முதல் நான்கு வழக்குகள் உள்ளன. விசாரணைக் கைதிகளிலும் வாடிக்கையான குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கிய போதிலும், குற்றம் சாட்டப்பட்ட பலர் கணிசமான காலம் விசாரணைக் கைதிகளாக இருந்துள்ளனர். பதிலளித்த மொத்த நபர்களில் 37% பேர் 90 நாட்களுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக இருந்தனர் என்பது முடிவுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. மேலும் 37% பேர் 31-90 நாட்கள் சிறையில் இருந்திருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

சிறையை பாதுகாப்பான இடமாக கருதும் ரவுடிகள்

இந்த ஆய்வு முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிறை கைதிகளின் மறுவாழ்வுக்காக தற்காலிக இல்லங்கள் நடத்தி வரும், டி.என்.பி.சி ப்ரிசன் மினிஸ்ட்ரி என்ற அமைப்பின் செயலாளர் ஏ.ஜேசுராஜா, ‘ஆதரவற்ற பலர் சிறையை ஒரு பாதுகாப்பான இடமாகக் கருதுகின்றனர். தொடர்ந்து திருடி வந்த 28 வயது இளைஞர் ஒருவர், பொன்னேரி சப்-ஜெயிலில் அடிக்கடி தண்டனை அனுபவித்து வந்தார். அவர் ஏன் தொடர்ந்து குற்றங்களைச் செய்கிறார் என்று விசாரித்த போது, அவருக்கு குடும்பமோ வீடோ இல்லை என்பது தெரிய வந்தது. சிறைக்கு வந்தால் மூன்று வேளை உணவும், பாதுகாப்பான இடமும் கிடைக்கும் என்பதால் எத்தனை முறை வெளியே சென்றாலும், மீண்டும் உள்ளே வருவதற்கு வழி தேடுவார். சில நேரங்களில், காவல்துறையினர் அவர் மீது வேறு சிலரின் வழக்குகளைப் பதிவதும் உண்டு.

பொதுவாக, ஆதரவற்ற சிறுவர்கள், சிக்கலான உறவுகள் கொண்ட பெற்றோர்களின் பிள்ளைகள் ஆகியோரே மீண்டும் மீண்டும் குற்றங்களைச் செய்கிறார்கள். இது போன்ற சிறார்கள் தான் ரவுடிகளின் கையில் சிக்கிக் கொள்கின்றனர். சிறார்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களைக் குற்றச் செயலில் ஈடுபடுத்துகிறார்கள். நாளடைவில் சிறார்கள் குற்றம் செய்யப் பழகிவிடுகின்றனர். மாதம் ரூ.15,000-க்கு வேலை கிடைத்தாலும், அந்தப் பணம் தனக்கு ஒரே நாளில் கிடைத்து விடும் என்று நினைத்து அவர்கள் வேலைக்குச் செல்வதில்லை,” என்கிறார் ஜேசுராஜா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...