பிரசாந்த் அழகான திறமையான பியானோ மாஸ்டர். தனக்கு பியானோ வகுப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பரிதாபம் காட்ட கண் தெரியாதவர் போல் லென்ஸ் வைத்துக் கொண்டு நடிக்கிறார். அப்படி ஒரு நாள் சிம்ரன், கார்த்திக் வீட்டுக்கு பியானோ வாசிக்க போன இடத்தில் கார்த்திக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை பார்த்து விடுகிறார். சிம்ரனுக்கு துணையாக அங்கு போலீஸ் சமுதிரகனியும் இருக்கிறார். ஆனாலும் சமாளித்து விட்டு வீடு வந்து சேரும் அவருக்கு அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.
பிரசாந்திற்கு பார்வை தெரியுமோ என்கிற சந்தேகம் சிம்ரனுக்கு வந்து, போலீஸில் சொல்லி விடுவாரோ என்று சதி செய்து பிரசாந்திற்கு நிஜமாகவே பார்வை போக வைக்கிறார். இந்த நிலையில் போலீஸ் சமுத்திரகனி பிரசாந்தை துரத்த, இன்னொரு பக்கம் கிட்னி திருடும் டாக்டர் கே.எஸ்.ரவிகுமார் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார்.
இவர்கள் அனைவரிடமிருந்தும் எப்படி தப்பிக்கிறார் என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறது அந்தகன் படம். அதை சுருங்கச்சொல்லி அழகுப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் தியாகராஜன்.
பிரசாந்த் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பல கட்டங்களாக காலம் தாழ்த்தி எடுக்கபப்ட்ட படமானாலும் அந்த வித்தியாசம் தெரியாமல் இருப்பது பிரசாந்திற்கே இருக்கும் அழகு. அமைதியான நடிப்பிற்கு இடையே கனவாக வந்து போகும் காட்சியில் ஆக்ரோஷமாக நடித்திருப்பது நல்ல வித்தியாசம். சிம்ரன் சின்னச்சின்ன அசைவுகளில் கோரமுகத்தைக் காட்டுகிறார் மிரட்டல். கார்த்திக் அதே ஸ்டைல் அதே துள்ளல் என்று வந்து சிமரனுக்கு காதல் சொல்லுகிறார். பிரியா ஆனந்த் குளுகுளு என்று வருகிறார் ரொம்பவும் இளமையாக இருக்கும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.
போலீஸாக வரும் சமுத்திரகனி மனைவி வனிதாவுக்கு பயந்து பாத்ரூம் உள்ளே பதுங்கும் இடம் கைதட்டல். வனிதாவும் நிஜ பாத்திரத்தை பிரதிபலிக்கும் பாசத்திற்கு உருகும் அடிதடி பெண்ணாக வந்து அசத்துகிறார்.
கே.எஸ்.ரவிகுமார் கிட்னி திருடும் டாக்டராக வந்து கலகலப்பூட்டுகிறார். திருட்டு லாட்டரி விற்கும் பெண்ணாக சிரிக்க வைக்கிறார் ஊர்வசி. கூடவே யோகிபாபு நல்ல உணர்வு பூர்வமான நடிப்பு. முதல் பாதியில் திகிலூட்டிய திரைக்கதை. இரண்டம் பாதியில் விறுவிறுப்பு, திருப்பம் என்று வேகம் காட்டுகிறது.