பிக் பாஸ் ரியாலிடி ஷோவில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பிக் பாஸ் என்ற ரியாலிடி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்சியின் தொகுப்பாளராக கமல்ஹாசன் இருந்து வந்தார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான உடைகளை அணிந்து நிகழ்ச்சியை தொகுப்பது, ஏதாவது ஒரு பிரபலமான புத்தகத்தைப் பற்றி பேசுவது என்று இந்த நிகழ்ச்சியில் கமல் புதுமைகளைச் செய்துவந்தார். அதே நேரத்தில் இந்நிகழ்ச்சியில் கமலின் அரசியல் பேச்சுக்கள் சில சர்ச்சைகளை உருவாக்கி வந்தன
ஒரு சில போட்டியாளர்களுக்கு கமல் சாதகமாக இருப்பதாகவும், அவர் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறப் போவதாக வதந்திகள் வெளியாகி வந்தன ஆனால் அதையும் கடந்து கமல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்புக்கு அவர் ரெட் கார்ட் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மாயா என்ற போட்டியாளருக்கு சாதகமாக நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சிலர், அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த சூழலில் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறுவதாகவும், இந்த முறை தான் தொகுப்பாளராக இருக்கப் போவதில்லை என்றும் கமல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனத்த இதயத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்கிறேன். சினிமா தொடர்பான சில பணிகள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து சில காலம் விலகியிருக்க வேண்டி உள்ளது. நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி. குறிப்பாக விஜய் டிவிக்கும், இந்நிகழ்ச்சிக்காக பணியாற்றிய ஒவ்வொரு ஊழியருக்கும் என் நன்றி. மற்ற சீசன்களைப் போலவே இந்த சீசனும் வெற்றிகரமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.