No menu items!

வங்கதேச புரட்சி – இந்தியாவின் தலைவலி!

வங்கதேச புரட்சி – இந்தியாவின் தலைவலி!

வங்கதேசத்தில் நடந்த திடீர் புரட்சியால் ஆட்சியை இழந்திருக்கிறார் பிரதமர் ஷேக் ஹசீனா. புரட்சியால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அச்சத்தால், அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கிறார். இந்தியாவும் அவரை பாதுகாத்துள்ளது.

உயிருக்கு ஆபத்து என்றதும் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வர முக்கிய காரணம் அவருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுதான். ஷேக் ஹசீனாவின் அப்பா ஷேக் முஜிபுர் ரஹ்மான், இந்தியாவுக்கு நெருக்கமான நண்பர். வங்கதேசம் உருவாக முஜிபுர் ரஹ்மான் போராடியபோது, அவருக்கு தோள் கொடுத்தது இந்தியா. பிற்காலத்தில் முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவில் சில காலம் தங்கி இருந்திருக்கிறார் ஷேக் ஹசீனா. அதன் பிறகுதான் அவர் ஆட்சியைப் பிடித்துள்ளார். ஆட்சியைப் பிடித்த பிறகும், தனக்கும் தனது அப்பாவுக்கும் உதவி செய்த இந்தியாவை மறக்காமல் இருந்திருக்கிறார் ஷேக் ஹசீனா. தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார்.

இந்த அளவுக்கு இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்த ஷேக் ஹசீனா, வங்க தேசத்தில் ஆட்சியை இழந்திருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.

ஆட்சி மாற்றத்தால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

வங்கதேச அரசியலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 2 கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் ஒன்று ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி. மற்றொன்று கலிதா ஜியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி. இந்த இரு கட்சிகளில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இந்தியாவுக்கு ஆதரவான கட்சி. வங்கதேச விடுதலைக்காக பாடுபட்டவரும், ஷேக் ஹசீனாவின் அப்பாவுமான முஜிபுர் ரஹ்மானுக்கு இந்தியா அக்காலத்தில் உதவியதே இதற்கு காரணம். அதே நேரத்தில் கலிதா ஜியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடுடன் கூடிய கட்சி.

வங்கதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஷேக் ஹசீனாவின் ஆட்சி நடைபெற்று வந்ததால், அந்நாட்டை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அச்சம் ஏதும் இல்லாமல் இந்தியாவால் இருக்க முடிந்தது. இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே சுமார் 4000 கிலோமீட்டர் தூரத்துக்கான எல்லைப்பகுதி இருக்கிறது. வங்கதேச எல்லை வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதை தடுக்க, ஷேக் ஹசீனா அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அத்துடன் வங்கதேசத்தில் பதுஙி இருந்த உல்ஃபா தலைவர் அரவிந்த் ராஜ்கோவா மற்றும் பல பிரிவினைவாத தலைவர்களை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது இதனாலேயே இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் நல்ல உறவு இருந்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டுக்கு வங்கதேசத்தை சிறப்பு விருந்தினராக அழைக்கும் அளவுக்கு நல்லுறவு வலுவாக இருந்தது.

இந்த நட்புறவின் காரணமாக இரு நாடுகள் இடையேயான வர்த்தகமும் சிறப்பாக இருந்தது. தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக வங்கதேசம் மாறியது. 2020-21-ம் நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையே 10.78 பில்லியன் டாலருக்கும், 2021-22-ம் நிதியாண்டில் 18.14 பில்லியன் டாலர் அளவுக்கும் வர்த்தகம் உச்சத்தை எட்டியது. இந்தியாவுக்கு சாதகமான ஷேக் ஹசீனா அரசு ஆட்சியில் இருந்தது அதற்கு முக்கிய காரணம்.

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், அந்நாட்டின் அரசியல் பாதை எப்படி போகும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவி கலிதா ஜியா, உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். அவருக்கு பதில் கட்சியை ஏற்று நடத்துபவர்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

பங்களாதேஷ் தேசியவாத கட்சி ஆரம்பத்திலிருந்தே இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையை கொண்டது. அக்கட்சியின் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருபவர்களாக இருக்கிறார்கள். புதிய அரசில் அந்த கட்சியின் கை ஓங்கினால், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தியா – வங்கதேச எல்லை வழியாக தீவிரவாதிகள் நுழைவது அதிகரிக்கும். இது இந்திய எல்லை பாதுகாப்பு படையின் பணிச்சுமையை அதிகரிக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்தில் ஆதிக்கம் செலுத்த சீனா நீண்ட நாட்களாக திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் ஷேக் ஹசீனா அரசு அதற்கு சம்மதிக்காமல் இருந்து வந்தது. இப்போது ஷேக் ஹசீனாவின் ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ள நிலையில் சிட்டகாங் துறைமுகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த மீண்டும் முயற்சிக்கலாம்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்திருக்கும் நிலையில் இவையெல்லாம் இந்தியா சந்திக்கும் பிரச்சினைகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...