கேரளாவில் சமீபத்தில் சூரல் மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்திருக்கிறோம். இன்னும் பலபேர் உடல்களை தேடும் பணியில் கேரள அரசும், இந்திய இராணுவமும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சோகத்திலும் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நேற்று நடந்திருக்கிறது.
நிலச்சரிவு நடந்த அன்று இரவு சூரல்மலையில் ஒரு குடியிருப்பில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வீட்டில் தங்கியிருந்த சுஜாதாவும், அவரது பேத்தி மிருதுளாவும் அலறி அடித்து எழுந்து வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். அவர்கள் வெளியே வந்த அடுத்த சில நிமிடங்கள் அவர்கள் தங்கியிருந்த வீடு இடிந்து தரைமட்டமாகியிருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுஜாதா பேத்தி மிருதுளாவை இறுகப்பற்றிக் கொண்டு காட்டுப் பகுதியில் மேடான இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்திருக்கிறார். திரும்பும் திசையெல்லாம் மழையும், சகதியும், மரக்கிளைகளுமாக இருந்த அந்த இரவில் எங்கே கால்வைக்கிறோம் என தெரியாமல் இருவரும் நடந்து மேடான பகுதி நோக்கி சென்றனர். சூரல்மலையில் இருந்து உயரமான பகுதியை நோக்கி சுஜாதவும் அவரின் பேத்தி மிருதுளாவும் நடந்து சென்று காப்பி தோட்டம் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர்.
சில நிமிடங்களில் தாங்கள் நடந்து வந்த பகுதிகளில் வெள்ளமும் சகதியும் பெருக்கெடுத்தது. தொடர்ந்து முன்னேறிய சுஜாதாவும் அவரின் பேத்திக்கும் காத்திருந்தது அதிர்ச்சி. தங்களுக்கு மிக அருகிலேயே 3 யானைகள் நின்றிருந்தன, அதனைக் கண்டு அதிர்ந்த சுஜாதா, பனை மரம் ஒன்றின் கீழ் தனது பேத்தியை பிடித்தபடி யானைகள் முன் மண்டியிட்டுள்ளார். ஏற்கனவே தாங்கள் பெரிய துயரத்தை சந்தித்துள்ளதாகவும், தங்களை தாக்க வேண்டாம் என யானைகளிடம் கெஞ்சியதாக பாட்டி தெரிவித்துள்ளார்.
யானைகள் என்ன நினைத்ததோ தெரியவில்லை அவர்கள் இருவரையும் ஒன்றும் செய்யாமல் அங்கேயே இரவு முழுவதும் நின்று பாதுகாத்திருக்கின்றன. விடிந்து வெளிச்சம் வந்தவுடன் அவர்களை மீட்க மீட்ப்படையினர் வந்ததும் யானைகள் நகர்ந்து அங்கிருந்து சென்று விட்டன.
அவர்களை மீட்ட பாதுகாப்புப் படையினரிடம் இதை சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார் சுஜாதா. பெரும் சோகத்திலும் இந்த நெகிழ்ச்சி சம்பவம் கேட்டவர்களை வியக்க வைத்திருக்கிறது. விலங்குகளுக்கு இயற்கைப் பேரழிவு குறித்த உள்ளுணர்வு முன்கூட்டியே அறிவிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. அதனை உண்ர்ந்து கொண்டுதான் யானைகளும் மண் சரிவு ஏற்படாத இடத்தில் நின்று கொண்டிருந்தன. அடைக்கலமாக வந்த மனிதர்களையும் தாக்காமல் அமைதி காத்திருக்கின்றன என்கிறார்கள்.