இந்தியாவின் சார்பில் விண்வெளிக்குச் செல்ல சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரோ, நாசா இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்துக்கு அமெரிக்காவின் ஆக்ஸிஓம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய, ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட விமானப்படை விமானிகள் குழுவில் இருந்து இளம் வீரரான குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் விண்வெளிப் பயணம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், இவருக்கு மாற்றாக அனுப்ப குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ண நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்கான பயிற்சியை இந்த வாரம் தொடங்குகின்றனர்.
விண்வெளிக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுபான்சு சுக்லாவைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்…
குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா, 1985-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் பிறந்தார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடந்த சமயத்தில் சுபான்சு சுக்லாவுக்கு 14 வயது. போர்க் கதைகளால் ஈர்க்கப்பட்ட அவர், விமானப் படையில் சேர விரும்பினார்.
லக்னோவில் உள்ள மாண்டீஸ்வரி பள்ளியில் படித்த சுபான்சு சுக்லா, கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி இந்திய விமானப் படையில் இணைந்தார். தனது குடும்பத்தில் இருந்து பாதுகாப்பு படையில் இணைந்த முதல் நபர் சுபான்சு சுக்லா.
தற்போது ஃபைட்டர் காம்பேட் டெஸ்ட் பைலட்டாக இருக்கும் சுபான்சு சுக்லா, Sukhoi-30MKI, Mig-21, Mig-29, An-32, Dornier, Hawk, மற்றும் Jaguar ரக விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இவர் 2,000 மணி நேரத்தும் அதிகமாக விமானங்களை இயக்கியுள்ளார்.
சுபான்சு சுக்லாவின் மனைவி காம்னா ஒரு பல் மருத்துவர். அவருக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
விண்வெளிக்கு செல்வதில் ஆர்வம் கொண்ட சுபான்சு சுக்லா, இதற்கான திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் சேர விரும்ப்னார். இத்திட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ள கடந்த 2018-19ம் ஆண்டில் விண்ணப்பித்தார். கொரோனா காலகட்டத்தில் ரஷ்யாவுக்கு சென்ற சுபான்சு சுக்லா, இதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார்.