கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 150 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதலமைச்சரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயநாட்டில் என்ன நடந்தது?
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் வயநாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று (30.07.2024) அதிகாலை 2 மணி மற்றும் 4.30 மணிக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளால், வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்குள்ள வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள் சில நொடிகளில் மண்ணுக்குள் புதைந்து போயின. இதுவரையான மீட்புப் பணிகளில் உயிரிழந்த 150 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என கேரள முதலமைச்சரின் செய்தித் தொடர்பாளர் பி.எம்.மனோஜ் உறுதி செய்துள்ளார். காணாமல் போன 98 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 192 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்து வந்த 350 குடும்பங்கள் வசித்து வந்தனர் என கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர், தோட்டத்தில் வேலை முடித்து, அதன் அயர்ச்சியில் வீடுகளில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 3,069 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். “வயநாடு நிலச்சரிவு, கேரளா இதுவரை கண்டிராத மிகப் பெரிய இயற்கை பேரழிவு” என்று விவரித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த 28 வயதான காளிதாஸ் என்பவரின் உடல் நண்பகலில் மீட்கப்பட்டது. நேற்று மாலை வயநாடு சூரல்மலையில், நீலகிரி மாவட்டம் அய்யங்கொல்லி பகுதியை சேர்ந்த கல்யாண்குமார் என்பவரின் உடல் மீட்கப்பட்டது. 60 வயதான இவர், அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
மீட்புப் பணிகளில் ராணுவம்
கனமழை, நிலச்சரிவு காரணமாக, மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவத்தினரும் பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பாதுகாப்புப் படையினருக்கு உதவி செய்ய 200 -க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விமானப்படை உதவியுடன் வான்வழியாக மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு உதவிகள் தேவைப்படும் மக்கள் 1077 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைக்கலாம் என்று அறிவித்துள்ளது வயநாடு மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு.
மேலும் மாவட்ட அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04936 204151 என்ற எண்ணுக்கும், 9562804151, 8078409770 என்ற அலைபேசி எண்களுக்கும் மக்கள் அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்படும் கேரளா
பெருமழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளம், நிலச்சரிவுகள், உயிரிழப்புகள் என இத்தகைய சூழ்நிலையை கேரள மாநிலம் சந்திப்பது இது முதல்முறையல்ல. குறிப்பாக 2018ஆம் ஆண்டு, கடவுளின் தேசம் தண்ணீரில் மிதந்தது. ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழையும் வெள்ளமும் கேரளத்தைப் புரட்டிப்போட்டது. கேரளாவின் வயநாடு, இடுக்கி, கண்ணூர், திரிச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 483 பேர் உயிரிழந்தனர். 1924ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் இது என்று விவரிக்கப்பட்டது. கிட்டதட்ட இரண்டு லட்சம் பேர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
அடுத்த வருடமும் (2019) மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் தொடர்ந்தன, இயற்கையின் கோர தாண்டவத்தை சமாளிக்க முடியாமல் திணறியது கேரளா. 2019 ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் வயநாடு, மலப்புரம், கண்ணூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இரண்டே நாட்களில் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 121 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து 2020, 2021 ஆகிய வருடங்களிலும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டது கேரளா. இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.