இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்ப்பில்லாத ஒரு ராஜாங்கத்தை பாஜக நடத்திவந்தது. பாஜகவினரை தவிர யாருடைய குரலும் அங்கே அதிகம் எழவில்லை. காங்கிரஸ் கட்சியினர் எப்போதாவது குரல் கொடுத்தாலும், அதற்கு பதிலடியாக முற்காலத்தில் காங்கிரஸ் செய்த ஏதாவது ஒரு தவறைப் பற்றிச் சொல்லி அவர்களின் வாயை பாஜகவினர் மூடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் பாஜகவின் அந்த ஆளுமை இந்த நாடாளுமன்றத்தில் மிஸ் ஆகிறது.
இதற்கு முக்கிய காரணம் இருவர். ஒருவர் ராகுல் காந்தி. மற்றொருவர் அகிலேஷ் யாதவ். நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 237 எம்பிக்களை பெற்ற பிறகு அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு, ஆளும் பாஜகவை தனது விவாத திறமையால் திக்குமுக்காடச் செய்து வருகிறார் ராகுல் காந்தி. தேர்தலுக்குப் பிறகான முதல் நாடாளுமன்ற கூட்ட்த் தொடரில், “பாஜக ஒன்றும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல” என்று பேசிய ராகுல் காந்தி, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசும்போது, “மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜுனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார். தற்போதைய 21-ம் நூற்றாண்டில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 6 பேர் புதிய சக்கரவியூகத்தை அமைத்துள்ளனர்” என்று பேசி அதிரடி காட்டியுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியாக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அவர் பேசியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ராகுல் காந்தியின் இந்த பேச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்குர், “சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள். இந்த அவையிலேயே முன்னாள் பிரதமர் ஆர்ஜி-1 (ராஜீவ் காந்தி) ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்ததை சபாநாயகருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்” என்றார்.
ராகுல் காந்தியின் ஜாதி குறித்து அனுராக் தாக்குர் பேசியது அவையில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்த, “சாதி தெரியாத ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி பேசுவதாக நான் கூறியிருந்தேன். ஆனால் யாருடைய பெயரையும் கூறவில்லை” என்றார்.
அனுராக் தாக்குருக்கு பதிலளித்து பேசிய ராகுல் காந்தி, “ஆதிவாசிகள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்னைகளை யார் எழுப்பினாலும், துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. போராடும் மக்கள் இப்படிப்பட்ட அவமானங்களைக் எதிர்கொள்வார்கள். நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னை அவமானப்படுத்துங்கள். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.
சாதிவாரி கணக்கெடுப்பைப் பற்றி நான் பேசுவதால் அவர்கள் என்னை அவமதிக்கிறார்கள். அர்ஜுனனைப் போல என்னை எவ்வளவு அவமானப்படுத்தினாலும், எனது இலக்கில் நான் கவனமாக உள்ளேன். ஆனால், மறந்துவிடாதீர்கள், நாங்கள் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம்” என்றார்.
ராகுல் காந்தி இப்படி கூறினாலும், அவரது ஜாதி பற்றி பேசியதற்கு அனுராக் தாக்குர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
ராகுல் காந்தியின் தொடர்ச்சியான பேச்சுகள் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தி வரும் அதே நேரத்தில் பப்பு என்று முத்திரை குத்தி கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியை ஒதுக்கி வைத்திருந்த வடநாட்டு மீடியாக்களும் அவருக்கு சமீப காலமாக அதிக முக்கியத்துவம் வழங்கி, அவரது பேச்சுகளை ஒளிபரப்பி வருகிறது. அதை ஒட்டிய விவாதங்களையும் நடத்தி வருகின்றன.
இப்படி ஒரு பக்கம் ராகுல் காந்தி மத்திய அரசை வறுத்தெடுக்க, மறுபக்கம் சமஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் பாஜகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார். ராகுல் காந்தி ஜாதி விவகாரம் முதல், அக்னிபாத் திட்டம்வரை நேருக்கு நேர் நின்று பாஜகவினரிடம் கேள்விகளை எழுப்பி வருகிறார் அகிலேஷ் யாதன். இந்த இருவர் கூட்டணி பாஜகவுக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகிறது.
இந்த சிக்கலை சமாளிக்கவே பாஜக திணறிவரும் நிலையில், “இப்பவே இப்படி திணறுறீங்களே… வயநாடு இடைத்தேர்தலில் ஜெயித்து பிரியங்கா காந்தியும் விரைவில் நாடாளுமன்றம் வரப் போகிறார். அவரை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.