வயநாடு நிலச்சரிவு தொடர்பான செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்தபோது அறைக்குள் நுழைந்தாள் ரகசியா.
“வயநாடுல பெரிய அளவு கட்டிடங்கள் எல்லாம் இல்லை. பெரும்பாலும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளைக் கொண்ட வீடுகள்தான் இருக்கும். அப்படி இருந்தும் நிலச்சரிவால பலர் பாதிக்கப்பட்டிருக்காங்க. அதேநேரத்துல நம்ம தமிழ்நாட்ல கொடைக்கானல், ஊட்டி மாதிரி மலைப்பகுதிகள்ல பல கட்டிடங்களும் ரிசார்ட்களும் விதிகளை மீறி கட்டப்பட்டு இருக்கு. அந்த இந்த மாதிரி நடந்தா எத்தனை பேர் பாதிக்கப்படுவாங்களோன்னு பயமா இருக்கு” என்றாள் ரகசியா.
“அப்படி எந்த ஆபத்தும் நடக்காதுன்னு நம்புவோம்”
“அதுக்கு நம்ம மக்களும் வனப் பகுதிகள்ல மரங்களை அழிச்சு, கட்டிடங்களை அதிகமா கட்டாம இருக்கணும்.”
“அறிவாலயத்தில் துரைமுருகனைக் கூப்பிட்டு முதல்வர் பேசினதா கேள்விப்பட்டேனே… என்ன விஷயம்?”
“உதயநிதியோட வளர்ச்சிக்கும், அவர் துணை முதல்வர் ஆவறதுக்கும் துரைமுருகன் தடையா இருக்காரோன்னு முதல்வருக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருக்கு. அந்த சந்தேகத்தை நேர்லயே கேட்டுடலாமேன்னுதான் அவர் துரைமுருகனை கூப்பிட்டு பேசியிருக்காரு?”
“சந்திப்புல என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?”
“துரைமுருகன்கிட்ட பேசும்போது, ‘உதயநிதி ஸ்டாலின் வளர்ச்சியை நீங்க விரும்பலையா?’ன்னு நேரடியாவே முதல்வர் கேட்டிருக்கார். அதுக்கு துரைமுருகன், ‘யார் இந்த தவறான தகவலை உங்களுக்கு சொன்னது?… எனக்கு உதயநிதி ஸ்டாலின் வளர்ந்தால் சந்தோஷம்தான். நான் திமுகவில் மாணவர் அணியில் உறுப்பினராக இருந்து படிப்படியாக முன்னேறி இப்போது பொதுச் செயலாளரா நியமிக்கப்பட்டிருக்கேன். நீங்களும் அப்படித்தான் படிப்படியா வளர்ந்தீங்க. ஆனா உதயநிதி ஸ்டாலின் விஷயத்தில் நீங்கள் அவசரப்படற மாதிரி தெரியுது. இந்த அவசரம் தேவையில்லை. கொஞ்சம் நிதானமா செயல்படுங்க’ன்னு சொல்லியிருக்கார்.”
“அப்ப உதயநிதி ஸ்டாலினுக்கு இப்போதைக்கு துணை முதல்வர் பதவி கிடைக்காதா?”
“ஒரு சிலர் அப்படி சொல்றாங்க. ஆனா உதயநிதி தரப்புல கேட்டா, இந்த ஆடி மாசம் போய் ஆவணி மாசம் வந்ததும் துணை முதல்வர் பதவி கிடைக்கும்னு உறுதியா நம்பறாங்க.”
“ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவார்னு நம்பறாங்களா?… திமுகவோட பட்ஜெட் எதிர்ப்பு போராட்டத்துல மாநில அமைச்சர்கள் யாரையும் பார்க்க முடியலையே?”
“முதல்ல அமைச்சர்கள் இந்த போராட்டத்துல கலந்துக்கறதா இருந்தாங்க. ஆனா பிறகு அவங்க இந்த போராட்டத்துல கலந்துகிட்டா ஏதாவது சட்ட சிக்கல் வருமோன்னு யோசிச்சிருக்காங்க. அதனால எம்பிக்கள், எம்எல்ஏக்களை வச்சி இந்த போராட்டத்தை நடத்தி இருக்காங்க. அமைச்சர்கள் இந்த போராட்டத்துல கலந்துக்காட்டியும், அதுக்கு தேவையான ஆட்களை திரட்டற வேலையை பார்த்திருக்காங்க.”
“பட்ஜெட்டுக்கு எதிரா திமுகவோட கூட்டணி கட்சிகள் பெருசா போராடலையே?”
“இதுல திமுக பிரமுகர்களுக்கு கொஞ்சம் அதிருப்தி இருக்கு. முதல்ல அவங்க விடுதலை சிறுத்தைகள்கிட்ட போராட்டம் நடத்த சொல்லி இருக்காங்க. ஆனா அவங்க பாராளுமன்றத்துல நடந்த எம்பிக்கள் போராட்டத்துல மட்டும் இணைஞ்சிருக்காங்க. கம்யூனிஸ்ட் கட்சிகள்கிட்ட சொன்னப்ப, அவங்க ‘இப்ப நாங்க மின் கட்டண உயர்வு போராட்டத்தில் தீவிரமாக இருக்கிறோம்’ன்னு சொல்லி தட்டிக் கழிச்சிருக்காங்க. காங்கிரஸ் கட்சி மட்டும் சும்மா ஒரு போராட்டத்தை நடத்தி இருக்கு. இதுபத்தி திமுக மூத்த தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின்கிட்ட சொல்லி இருக்காங்க.”
“அதிமுக பொதுச் செயலாளர் பதவி விஷயத்துல எடப்பாடிக்கு உயர் நீதிமன்றம் குட்டு வச்சிருக்கே?”
“உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கே அதிமுக பொதுச் செயலாளர் பதவி சம்பந்தப்பட்டது. அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி பொதுச்செயலாளர் என்று பிரமாண பாத்திரம் தாக்கல் செய்யலாம்னு எடப்பாடிகிட்ட உயர் நீதிமன்றம் கேட்டதா செய்தி வெளியானது. ஆனால் அதிமுக வழக்கறிஞர்கள் எடப்பாடியை பொதுச்செயலாளர் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டு விட்டது என்று விளக்கம் சொன்ன பிறகு நீதிபதிகள் அதையெல்லாம் சேர்த்து மனுவாக தாருங்கள்ன்னு சொல்லி இருக்கு. இதுதான் உண்மையில் நடந்தது. ஆனா இதை விளக்கமா சொல்ல அதிமுக ஐடி விங் தவறிடுச்சு. அதுக்காக ஐடி விங் நிர்வாகிகளைக் கூப்டு எடப்பாடி டோஸ் விட்டிருக்கார்.”
“விஜய் கட்சியோட மாநாடு நடக்கப் போகுதுன்னு சொல்லிட்டே இருக்காங்க. ஆனா அதுக்கான முறையான அறிவிப்பு ஏதும் வரவே இல்லையே?”
“அதுக்கு காரணம் இடப் பிரச்சினைதான். தமிழக வெற்றிக் கழகத்தோட முதல் மாநாடு திருச்சியில் நடக்கும்னு சொன்னாங்க. அதுக்காக விடுதலை சிறுத்தைகள் மாநாடு நடத்தின சிறுகானூர்ல மாநாட்டு பந்தல் அமைக்கலாமான்னு புஸ்ஸி ஆனந்த் போய் பார்த்திருக்கார். இந்த விஷயம் கேள்விப்பட்ட ஆளுங்கட்சி அமைச்சர், சம்பந்தப்பட்ட இட்த்தோட உரிமையாளரை அழைச்சு, மாநாட்டுக்கு இடம் தரக்கூடாதுன்னு சொல்லிவிட்டாராம். அதனால இப்ப சேலத்தில் இடம் தேடிக்கிட்டு இருக்காங்க. ஆனா சேலத்துக்கும் அந்த அமைச்சர்தான் ஆளுங்கட்சி பொறுப்பாளர். அதனால இடம் கிடைக்கறது சந்தேகம்தான். மாநாடு நடத்தவே இப்படி அலைய வேண்டி இருக்கேன்னு புஸ்ஸி ஆனந்த் புலம்பறாராம்.”
“விஜய்க்குதான் மக்கள் மனசுல இடம் இருக்குதே?”
“ஆனா அங்க மாநாடு நடத்த முடியாதுல்ல” என்று சிரித்துக்கொண்டே வெளியில் கிளம்பினாள் ரகசியா.