பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார் மனு பாகர். இதன்மூலம் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்த சாதனைக்காக மனு பாகர் கடந்துவந்த பாதையைப் பார்ப்போம்…
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜார் மாவட்டத்தில் 2002-ம் ஆண்டு பிறந்தவர் மனு பாகர். அவரது அப்பா ராம் கிஷண் பாகர் மெர்ச்சண்ட் நேவியில் தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தார்.
மனு பாகர் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெறத் தொடங்கியது தனது 14 வயது முதல்தான். அதுவரை ஹூயன் லங்லாங் என்ற மணிப்பூரி தற்காப்பு கலையில்தான் மனு பாகர் பயிற்சி பெற்று வந்தார். இதைத்தவிர குத்துச்சண்டை, டென்னிஸ் மற்றும் ஸ்கேட்டிங் போட்டிகளிலும் மனு பாகர் தனது சிறு வயதில் ஆர்வம் காட்டி வந்தார். அந்த விளையாட்டுகளில் அவர் தேசிய அளவில் சில பதக்கங்களையும் வாங்கியிருக்கிறார்.
தனது 14 வயதில், துப்பாக்கி சுடுதலில் முழு ஆர்வம் செலுத்தப் போவதாக தனது தந்தையாரிடம் மனு பாகர் கூறியுள்ளார். உடனே அவரது தந்தை, இந்த விளையாட்டுக்கு தேவையான துப்பாக்கி உள்ளிட்ட சில கருவிகளை 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கிக் கொடுத்துள்ளார்.
துப்பாக்கி சுடும் போட்டியில் பயிற்சி பெறத் தொடங்கிய 1 ஆண்டிலேயே அதில் தேர்ச்சி பெற்ற மனு பாகர், 2017-ம் ஆண்டு நடந்த ஆசிய ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் மனு பாகர் வென்ற முதல் பதக்கம் இது.
அதே 2017-ம் ஆண்டில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 9 தங்கப் பதக்கங்களை வென்று குவித்துள்ளார் மனு பாகர். இதனால் தேசிய அளவில் விளையாட்டு ரசிகர்களின் பார்வை மனு பாகர் மீது விழுந்துள்ளது.
2018-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றதால், கடந்த 2021-ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின்போது மனு பாகர் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அந்த போட்டியின்போது மனு பாகரின் துப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டதால், அவரால் சரியாக சுட முடியவில்லை. அதனால் பதக்கம் ஏதும் பெறாமல் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார் மனு பாகர்.
2021 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத்தால் மன உளைச்சலுக்கு ஆளான மனு பாகர், இனி இந்த போட்டியே வேண்டாம் என்று முடிவெடுத்தார். இந்த மனநிலையை மாற்றி அவருக்கு மீண்டும் பயிற்சி அளித்தவர் முன்னாள் துப்பாக்கி சுடும் வீர்ரான ஜஸ்பால் ராணா. அவர் இல்லாவிட்டால் இந்த பதக்கத்தை வென்றிருக்க முடியாது என்கிறார் மனு பாகர்.