“விருந்துக்கு வந்தவங்களை எச்சரிச்சு அனுப்பி இருக்காங்களாம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“யார் விருந்து வச்சா? யாரை எச்சரிச்சா? கொஞ்சம் விளக்கமா சொன்னாதானே தெரியும்?”
“குறிஞ்சி இல்லத்தில் போன வாரம் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த கறி விருந்தைப் பத்திதான் சொல்றேன். நாடாளுமன்ற தேர்தல்ல திமுக 40 சீட்லயும் ஜெயிச்சதால தமிழகத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களையும் இந்த விருந்துக்கு கூப்டிருந்தாங்க. அவங்களைத் தவிர சிறப்பு அழைப்பாளர்களா ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களான அமைச்சர் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதியை மட்டும் கூப்டிருக்காங்க. மத்த அமைச்சர்கள் யாரையும் கூப்பிடலை. இந்த விருந்து நிகழ்ச்சியில பேசின உதயநிதி, ’40 தொகுதியிலும் நமது கூட்டணியை வெற்றி பெறச் செய்ததுக்கு நன்றி. அதே சமயம் உங்கள்ல சிலரோட உழைப்பு 100 சதவீதம் இல்லைங்கிறது எனக்கு தெரியும். யாரெல்லாம் வேலை செய்தார்கள் யார் வேலை செய்யலைங்கிற விவரமும் எனக்கு தெரியும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று விட்டதால் இப்போது அது பற்றி பேசி பலன் இல்லை. ஆனால் இதே வேலையை நீங்க சட்டமன்றத் தேர்தலிலும் செய்தால் விளைவுகள் கடுமையா இருக்கும்’னு எச்சரிச்சு பேசி இருக்கார்.”
“வந்தவங்க வருத்தப்பட்டிருப்பாங்களே”
“ஆமாம். அதை சரி செய்யும்விதமா சரியான விருந்தும் கொடுத்திருக்கிறார். சிக்கன், மட்டன், மீன் என எல்லாவித கறிகளும் கொண்ட ஒரு விருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. வந்தவர்களும் திமுகவின் இப்படி சாப்பாடா என்று வியந்திருக்கிறார்கள். சின்னவர் சின்னவர்தான் என்று புகழ்ந்தும் இருக்கிறார்கள்”
“உதயநிதியோட செயல்பாடுகளைப் பார்த்தா, அவர் கட்சியை முழுமையா கட்டுக்குள்ள கொண்டுவந்த மாதிரி தெரியுதே?”
”அதை நோக்கிதான் போய்க் கொண்டிருக்கிறது. முதல்வர் ஆகஸ்ட் 16ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டது. அவர் வெளிநாடு போன பிறகு கட்சிப் பொறுப்புகளை உதயநிதிதான் பார்த்துப்பார். இப்போதைக்கு 15 நாள் பயணம்னு முடிவு பண்ணியிருக்காங்க. அது நீட்டிக்கப்படலாம்னும் செய்திகள் வருது”
“கூட்டணி கட்சிகள் மேல முதல்வர் ஸ்டாலின் கொஞ்சம் அதிருப்தியா இருக்கறதா கேள்விப்பட்டேனே?”
”ஆமாம்… காங்கிரஸ் கட்சித் தலைவர்களோட சமீபத்திய பேச்சுகள், கம்யூனிஸ்ட் கட்சிகளோட போராட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரோட விமர்சனம் எல்லாம் சேர்த்து முதல்வரை அப்செட் ஆக்கி இருக்கு. அதனால அடுத்த சட்டமன்ற தேர்தல்ல தனிச்சே போட்டியிடலாமான்னு முதல்வர் யோசிக்கறாராம். கட்சியின் மூத்தவர்களும் அப்படிதான் சொல்லியிருக்காங்க. முக்கியமா தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் மீது திமுகவின் அதிருப்தி அதிகரிச்சுக்கிட்டு இருக்கு. செல்வப்பெருந்தகை பேசினது, சிவகங்கைல கார்த்தி சிதம்பரம் பேசுனது என எல்லா ரிப்போர்ட்டும் முதல்வருக்கு போயிருக்கு. அதோட ரியாக்ஷன்தான் சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பொறுப்பை காங்கிரசுக்கு கொடுக்காதது”
“அது என்னது?”
“மாநில சிறுபான்மை நல ஆணையத்தோட தலைவரா காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தப் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. அவரோட பதவிக்காலம் இந்த மாசத்தோடு முடியுது. இந்த முறையும் காங்கிரஸ் சேர்ந்தவருக்குதான் கொடுப்பாங்கனு காங்கிரஸ்காரங்க நினைச்சாங்க. காங்கிரஸ் கட்சிக்காரங்க சிலர் அந்தப் பதவிக்கு முயற்சி பண்ணாங்க. ஆனா முதல்வர் மறுத்துட்டார். அரசியல் சாராத கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த ஜோ அருண் என்பவரை நியமிச்சிட்டார். இது காங்கிரஸ் வட்டாரங்கள்ல அதிர்ச்சியைக் கொடுத்துருக்கு”
“அப்போ கூட்டணி சிக்கல்தானா?”
“பாஜக கூட அதிமுக இல்லன்றதுனால காங்கிரஸ் கட்சி இப்படி ஆட்டம் காட்டுது. அதை கண்டுக்காம விட்டா வழிக்கு வருவாங்கனு முதல்வருக்கு ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கு. அது மட்டுமில்லாம இங்க இருக்கிற காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்த பவரும் இல்லை என்பது திமுகவினருக்கு தெரியும். சும்மா பேசுவாங்க. அவ்வளவுதான், ஆனா அளவுக்கு மீறி பேசுனா செக் வைக்கணும்னு திமுகவினர் முடிவு. மத்ததையெல்லாம் டெல்லில ராகுல் கிட்ட பேசிக்கலாம்னு இருக்காங்க”
“அப்படின்னா சட்டமன்ற தேர்தல்ல அதிமுககூட காங்கிரஸ் போனா அதிமுக கூட்டணி வலுவாகிடுமே?”
“அதுக்கும் வாய்ப்பு கம்மிதான். அதிமுக உள்ள பெரிய போராட்டாமே நடந்துக்கிட்டு இருக்கு. பின்னணில பாஜக இருக்கு. 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்குள்ள அதிமுகவை ஒண்ணாக்கிரணும்னு பாஜக தீவிரமா இயங்கிட்டு இருக்கு”
“அதுக்கு எடப்பாடி ஒத்துப்பாரா”
”எடப்பாடி இல்லாத அதிமுகவை உருவாக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு. ஆனா ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடிதான் அதிமுக தலைவரா வெளில தெரிகிறார். ஓபிஎஸ்க்கு முன்பிருந்த மதிப்பு இல்லை. எடப்பாடியை வைத்துக் கொண்டே எல்லோரையும் சேர்க்கணும்கிறதுதான் பாஜகவின் ஐடியா. நடக்குதானு பார்க்கலாம்”
”எடப்பாடி சைட்ல என்ன பேசிக்கிறாங்க?”
“திமுக கூட்டணிலருந்து மற்ற கட்சிகள் வரும்கிறதுல எடப்பாடி அணிக்கு பெரிய நம்பிக்கை இல்லை. ஏன்னா அந்தக் கூட்டணி அகில இந்திய அளவுல இருக்கு, அத்தனை சீக்கிரம் உடையாதுனு எடப்பாடி சொல்லியிருக்கிறார். ஆனா திமுகவை பயம் காட்ட நம்மை பயன்படுத்திப்பாங்கனும் சொன்னாராம். அதே நேரத்துல பாஜகவுக்கும் தமிழ்நாட்டுல நம்மைவிட்டா ஆள் கிடையாது. நம்மகிட்டதான் வந்தாகணும்னு ஹேப்பியா பேசியிருக்கிறார்”
”ரொம்பதான் கான்ஃபிடண்டா இருக்கார் எடப்பாடி”
’ஆமாம். எத்தனை அரசியல பார்த்தவரு. ஓபிஎஸ், சசிகலா யாரையும் சேர்த்துக்கிற ஐடியாவுல அவர் இல்லை. பார்ப்போம் எப்படி போகுதுனு”
“அப்ப சசிகலா நிலை?”
“இப்போதைக்கு சசிகலாவுக்கு சொல்லிக்கற மாதிரி எந்த முன்னேற்றமும் இல்லை. தினகரன்கூட அவரோட அழைப்பை ஏற்க தயாரா இல்லை. தன்னோட அமமுக கட்சியை வலுப்படுத்தவும், சென்னையில கட்சிக்கு சொந்தாமா ஒரு பெரிய கட்டிடம் கட்டவும் அவர் திட்டமிட்டு இருக்கார்.”
“வெங்கய்ய நாயுடு பிறந்த நாளை சென்னையில் கிராண்டா கொண்டாடி இருக்காங்களே?”
“தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு பாலமா வெங்கய்யா நாயுடு செயல்படுவார்னு பாஜக தாலைவர்கள் நம்பறாங்க. அதனால அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கறாங்க. ஆனா இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துக்கலை பார்த்தீங்களா?”
“அவர் ஏன் கலந்துக்கலை?”
“அதிமுக கூட்டணி அமைஞ்சா, தான் தலைவர் பதவியல இருக்க மாட்டோம்னு அண்ணாமலைக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. அதனாலதான் அவர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கலைன்னு சொல்றாங்க. அதே நாள்ல மடிப்பாக்கத்தில் நாடார் சங்கம் நடத்தின ஒரு நிகழ்ச்சியில அண்ணாமாலை கலந்துகிட்டார்.”
“விஜய்யோட கட்சி பத்தி ஏதாவது அப்டேட் இருக்கா?”
“முதல்ல மத்த கட்சிக்காரங்களை தன் கட்சியில சேர்க்காம ரசிகர்களை வச்சு கட்சி நடத்தலாம்னு விஜய் நினைச்சிருக்கார். ஆனா இப்ப அந்த முடிவு மாறி இருக்கு. மற்ற கட்சிகள்ல அதிருப்தியில் இருக்கும் தலைவர்களிடம் பேசுங்கள் நாம் சேர்த்துக் கொள்வோம் அவர்கள் அனுபவம் நமக்கு உதவும்னு கட்சிக்காரங்க்கிட்ட சொல்றாராம்”
“அப்ப அவரும் மத்தவங்க ரூட்லயே போறாரா?”
“என்ன செய்யறது? உலகம் உருண்டையாச்சே…” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.