அண்ணன் தனுஷ் தனது 2 தம்பிகளையும் ஒரே தங்கை துஷாரா விஜயனையும் தனி ஆளாக இருந்து வளர்த்து வருகிறார். பெண் குழந்தையை கொல்ல நினைக்கும் கிராமத்து மூடத்தனத்திலிருந்து மீட்டு சென்னையில் வந்து மார்க்கெட்டில் இருக்கும் செல்வராகவன் உதவியால் வாழ்ந்து வருகிறார். பெரிய வாகனத்தில் பாஸ்ட் புட் கடை வைத்து இவர்களை வளர்த்து வரும் தனுஷ் மீது பாசத்தைப் பொழிந்து வருகிறார் தங்கை துஷாரா.
காலச்சூழலில் ஒரு தம்பி சந்தீப் கிஷன் ஊதாரியாக குடித்து திரிகிறார். இன்னொரு தம்பி காளிதாஸ் கல்லூரி படித்து பாதியிலேயே விட்டு விடுகிறார். சென்னையில் ஏரியா தாதாக்கள் சரவணன் எஸ்.ஜே.சூர்யா இருவரையும் அடக்க போலீஸ் கமிஷனர் பிரகாஷ் ராஜ் ப்ளான் போட, சரவணன் கும்பலை போட்டு தள்ளுகிறார் ராயன் தனுஷ். அதன் பி்றகு நடப்பதெல்லாம் ரத்தக்களறிதான். குரூர கொலைகள், நயவஞ்சகம், மோசடி என்று படம் முழுவதும் கருப்பு உலத்தை வெளிச்சம் போடும் காட்சிகள்.
ராயனாக தனுஷ் அமைதியான, ஆக்ரோஷமான பார்வையுடன் படம் முழுவதும் வருகிறார். தங்கைக்காக எதையும் செய்யும் அந்த வேகம் நன்றாக இருக்கிறது. நமோ நாராயணனை ஆஸ்பத்திரியில் மிரட்டும் அந்த பார்வை அசத்தல். தம்பிகளை உரிமையோடு அடிக்கும் இடத்திலும், தங்கைக்காக மாப்பிள்ளை பார்க்கும் காட்சியிலும் உருக்கம் காட்டுகிறார். தம்பிகளை கொலை செய்வேன் என்று சொன்ன சரவணன் முன் அதிரடியாக தோன்றும் காட்சியும் கைதட்டல் ரகம். அவருக்கு வேண்டிய ஆக்ஷன் காட்சிகளை எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு பங்கு போட்டு கொடுத்திருப்பது தெரிகிறது.
தனுஷ் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார்கள் காளிதாஸ், சந்தீஷ் கிஷன். அவர்களின் உடல்மொழி, வசன உச்சரிப்பு எதையோ செய்வார்கள் என்று நினைக்க வைக்கிறது. ஆனால் இப்படி செய்வார்கள் என்பதை பார்க்க முடியாத திரைக்கதை. சரவணன் உட்கார்ந்த இடத்திலிருந்து தாதாயிசம் செய்து செத்துப் போகிறார். எஸ்.ஜே.சூர்யா வித்தியாசமான ரோலில் ரசிக்க வைத்திருக்கிறார். உம்மண்ணா மூஞ்சியா இருந்து கொண்டு இடைவேளைக்குப் பிறகு அவதாரம் எடுக்கிறார் துஷாரா விஜயன்.
போலீஸாக வரும் பிரகாஷ்ராஜ் வந்தாலாவது கொலைகளை தடுப்பார் என்று பார்த்தால் தன் பங்கிற்கு பத்து கொலைகளை செய்து குவிக்கிறார். ஒரு தாதாவை அடக்க இன்னொரு தாதாவை நாடுகிறார். திரைக்கதையில் ஏகப்பட்ட ஓட்டைகள். தெலுங்கு படம்பார்த்த உணர்வு ஏற்படுகிறது.ஒரு தொழில்முறை இயக்குனர் எடுக்கும் திரைப்படத்திற்கும் ஹீரோ தான் நடிக்கும் படத்தை இயக்குவதற்கும் வித்தியாசம் தெரிகிறது. பெரிய தாதாவை கூண்டோடு போட்டுவிட்டு கூலாக ஏரியாவை காலி செய்வது அபத்தம். துஷாரா மருத்துவமனையில் எதிரிகளோடு மோதும் இடம், தாதாவோடு தம்பிகள் சேர சரியான காரணம் சொல்லாதது என்று நிறைய குறைகளோடு எடுத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ்.