ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களைப் பெற்றுத்தந்த விளையாட்டு ஹாக்கி. இதுவரை 8 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 12 பதக்கங்களை இந்தியா வென்றிருக்கிறது. கடந்த முறை டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. அந்த வரிசையில் மேலும் ஒரு பதக்கத்தை வெல்லும் லட்சியத்துடன் பாரிஸ் நகருக்கு புறப்பட்டிருக்கிறது இந்திய அணி.
கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் அணியின் கோல்கீப்பரான ஸ்ரீஜேஷ். கிரிக்கெட்டில் தோனி எப்படியோ அந்த அளவுக்கு ஹாக்கி விளையாட்டில் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் ஸ்ரீஜேஷ்.
ஸ்ரீஜேஷுக்காக பதக்கம் வெல்வோம்
இந்த ஒலிம்பிக் போட்டியுடன் தான் ஓய்வுபெறப் போவதாக ஸ்ரீஜேஷ் கூறியிருப்பதால், அவருக்காகவே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வீர்ர்கள் இருக்கிறார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், “பாரிஸ் ஒலிம்பிக் எங்களுக்கு முக்கியமான தொடர். இதில் பதக்கம் வென்று அதை இந்திய ஹாக்கியின் ஜாம்பவான்களில் ஒருவரான பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம். 2016 ஜூனியர் உலகக் கோப்பையில் நாங்கள் பட்டம் வென்ற போது அவரது ஆலோசனைகள் உதவியது. அதை நான் இன்னும் மறக்கவில்லை. நிச்சயம் அவருக்காக நாங்கள் மீண்டும் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் முக்கிய வீர்ர்கள்
கோல்கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு அடுத்த்தாக இந்திய அணி பெரிதும் நம்பியிருப்பது கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கைத்தான். பெனாலிடி கார்னர்களை கோலாக மாற்றும் அவரது ஆற்றல் இந்திய அணிக்கு பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவருக்கு இது மூன்றாவது ஒலிம்பிக் போட்டி என்பதால் அதுவும் அணிக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரைப் போல் மிட் பீல்டர்களான மன்பிரீத் சிங், ஹர்திக் சிங் ஆகியோரும் முக்கிய வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
கடினமான பிரிவில் இந்திய அணி
இந்த ஒலிம்பிக் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி கடுமையான போட்டியைக் கொண்ட பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா இடம்பெற்றுள்ள பிரிவில் நியூஸிலாந்து, அர்ஜெண்டினா, ஆயர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தடைகளைக் கடந்து இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.