பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அனுப்பப்படும் 117 பேரைக் கொண்ட விளையாட்டு வீர்ர்கள் குழுவில் 47 பேர் பெண்கள். எண்ணிக்கையில் ஆண்களைவிட குறைவாக இருந்தாலும் பதக்கத்துக்கான நம்பிக்கையை அதிகம் அளிப்பவர்கள் வீராங்கனைகள்தான். அந்த வகையில் பதக்கத்துக்காக இந்தியா நம்பியிருக்கும் முக்கிய வீராங்கனைகளைப் பற்றி ஒரு பார்வை…
மனு பாகர் (துப்பாக்கி சுடும் போட்டி):
ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் மனு பாகரின் கண்களை வைத்துதான் தங்கத்தை குறிவைக்கிறது இந்தியா. 22 வயதேயான மனு பாகர், 2018-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் மிகக் குறைந்த வயதில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர். அதன் பிறகு பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற மனு பாகர், 2021-ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மட்டும்தான் பதக்கம் வெல்லவில்லை. அந்த குறையை பாரிஸில் தீர்க்க வேண்டும் என்பதுதான் மனு பாகரின் லட்சியம்.
இந்த லட்சியத்தை நிறைவேற்ற தனிநபர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல் மற்றும் குழு பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் என 3 பிரிவுகளுக்கான போட்டிகளில் பங்கேற்கிறார் மனு பாகர். 3 போட்டிகளில் பங்கேற்பதால் ஏதாவது ஒரு போட்டியிலாவது அவர் பதக்கம் வெல்வார் என்பது இந்தியர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பி.வி.சிந்து (பாட்மிண்டன்):
2016 மற்றும் 2021 என்று அடுத்தடுத்து 2 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்தவர் பி.வி.சிந்து. முதல் முறை வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து, அடுத்த முறை வெண்கலப் பதக்கம் வென்றார். இப்படி இரு நிறங்களில் பதக்கம் வென்ற சிந்து, இதுவரை தான் வாங்காத நிறத்தில் இருக்கும் தங்கப் பதக்கத்தை குறிவைத்து பாரிசில் களம் இறங்குகிறார்.
2022-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளின்போது ஏற்பட்ட காயத்துக்குப் பிறகு பாட்மிண்டன் போட்டிகளில் அவர் பெரிதாக சாதிக்கவில்லை. இருப்பினும் பயிற்சியாளரை மாற்றி பிரகாஷ் படுகோனிடம் இப்போது பயிற்சி பெறுவதும், சாதகமான போட்டி அட்டவணை இருப்பதும் சிந்து பக்கம் பதக்கக் காற்று வீசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மீராபாய் சானு (பளு தூக்குதல்):
பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் மீராபாய் சானு. 2016 ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, கடந்த ஒலிம்பிக் போட்டியின்போது காயத்தால் வெளியேறினார். அதன்பிறகு தொடர்ச்சியாக பல போட்டிகளில் காயத்தால் விலகியிருந்த மீராபாய் சானு, இந்த முறை ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
பாரிஸ் செல்லும்முன் செய்தியாளர்களிடம் பேசிய மீராபாய் சானு, “டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நான் அடைந்த காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பயிற்சியாளர் விஜய் சர்மா தான். அவர் என்னை தனது மகளைப் போன்று பார்த்துக் கொண்டார். கடந்த ஒலிம்பிக்கில் நான் தவறவிட்டதை இந்த ஒலிம்பிக்கில் அடைந்தே தீர வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். சொன்னபடி அவர் பதக்கத்தை வென்றுவர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
லவ்லினா போர்கோஹெயின் (குத்துச்சண்டை)
டோக்கியோவில் கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றவர் லாவ்லினா. தனது முதல் ஒலிம்பிக்கிலேயே வெண்கலம் வென்ற அவர், இந்த ஆண்டில் தனது பதக்கத்தின் நிறத்தை மாற்றிக்காட்டும் உறுதியுடன் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது அவரது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.