கைலாசா நாடு எங்கே அமைந்திருக்கிறது என்பதைப் பற்றி குரு பூர்ணிமா நாளன்று அறிவிப்பதாக நித்யானந்தா அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, கரீபியன் தீவு, பசுபிக், தென் அமெரிக்கா உள்ளிட்ட 7 இடங்களில் கைலாசாவுக்கு சொந்தமான இறையாண்மை பிரதேசங்களும், சுயாட்சி பிரதேசங்களும் இருப்பதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நித்யானந்தாவின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
தற்போது, நித்தியானந்தாவின் யூ டியூப் பக்கத்தில் வெளியிடப்படும் வீடியோக்கள் ஒன்றின் மூலம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடலோரப் பகுதிகள், மலைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு புவியியல் அம்சங்களை உள்ளடக்கிய, உலகம் முழுவதும் உள்ள இறையாண்மை கொண்ட மற்றும் தன்னாட்சி பிரதேசங்களில் ‘கைலாசா’ இருப்பதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைலாசா பல நாடுகளுடன் பரஸ்பர உறவுகளை ஏற்படுத்தியிருப்பது , சர்வதேச சமூகத்தில் அதன் அங்கீகாரத்தை குறிக்கிறது என்றும் கைலாசா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைலாசா தற்போது 149 நாடுகளில் உள்ள 108-க்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கி வருகிறது. ஆண் சந்நியாசிகளுக்கான இருப்பிடம் ராமகிருஷ்ண மடத்தின் அடிப்படையிலும், பெண் சந்நியாசிகளின் இருப்பிடம் சாரதா மடத்தின் அடிப்படையிலும், திருமணமானவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள ஆரோவில் போன்ற இருப்பிடமும் அமைக்கப்படுகிறது.
கல்விக்கான குருகுலம், நித்யானந்தா இந்து பல்கலைக்கழகம், தொழில் செய்வதற்கான இந்து உலக வர்த்தக மையம் அமைக்கப்படுகிறது. இதன் ஆன்மிக மற்றும் நிர்வாக மையமாக அமையும் மஹாகைலாசாவில்தான் நித்யானந்தா வசிக்கப்போகிறார்.
கைலாசாவில் உணவு, தங்குமிடம், உடை , மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம். ராணுவமோ, காவல் துறையோ கைலாசத்தில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கைலாசாவில் வரி விதிப்பு முறை இல்லை. இந்து வர்த்தக மையத்தின் மூலம் கிடைக்கும் வருமானமும், உலகம் முழுவதிலிருந்தும் கிடைக்கும் நன்கொடையும் கைலாசாவை நடத்த பயன்படுத்தப்படும்.