பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்க எண்களில் பதக்கம் வெல்லும் ஆசையுடன் இருக்கிறது இந்தியா. இதில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுதர வாய்ப்புள்ள சில வீரர்களைப் பார்ப்போம்…
நீரஜ் சோப்ரா (ஈட்டி எறியும் போட்டி):
இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் அதிகபட்ச நம்பிக்கை நீரஜ் சோப்ரா மீதுதான் இருக்கிறது. கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறியும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இரண்டாவது முறை தங்கம் பெறும் நம்பிக்கையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டு, டைமண்ட் லீக் உள்ளிட்டவற்றில் பதக்கங்களை வென்றது அவரது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இந்த ஒலிம்பிக் போட்டியைப் பொறுத்தவரை நீரஜ் சோப்ராவின் ஒரே குறை, அவர் இன்னும் 90 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டியை எறியவில்லை என்பதுதான். அவரது போட்டியாளர்களாக கருதப்படும் ஜெர்மனியின் ஜொஹன்னஸ் வெட்டர், பாகிஸ்தான் வீர்ர் அர்ஷத் நதீம் ஆகிய இருவரும் ஏற்கெனவே 90 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டியை எறிந்திருக்கிறார்கள். இந்த ஒலிம்பிக்கில் அவர்களை நீரஜ் சோப்ரா எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை வைத்துதான் அவரது பதக்க வாய்ப்பு இருக்கிறது.
ரங்கி ரெட்டி, சிராஜ் ஷெட்டி (பாட்மிண்டன்):
பாட்மிண்டன் போட்டியில் ஆடவர்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் ரங்கி ரெட்டி – சிராஜ் ஷெட்டி ஜோடி பதக்கம் வென்று தரும் என்று இந்திய விளையாட்டு ரசிகர்காள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவர்கள் தங்கப் பதக்கம் ஜெயித்திருப்பது இந்த நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதைத் தவிர பிரெஞ்சு ஓபன் மற்றும் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர்களிலும் இந்த ஜோடி தங்கப் பதக்கம் வென்றிருக்கிறது.
பாட்மிண்டன் போட்டியில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களை வென்றிருக்கிறது. ஆனால் அந்த பதக்கங்களை எல்லாம் சிந்து, சாய்னா ஆகிய பெண்களே வென்றிருக்கிறார்கள். அந்த வரலாற்றை மாற்றி எழுதி ஆண்களான நாங்களும் பதக்கம் வென்று காட்டுவோம் என்ற சூளுரையுடன் சென்றிருக்கிறது இந்த ஜோடி. சீனா மற்றும் மலேசியாவின் சவாலைக் கடந்து அவர்களால் அதை அடைய முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அவினாஷ் சாபெல் (ஸ்டீபிள் சேஸ்):
ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்திய ரசிகர்களின் கவனம் அவினாஷ் சாபெல் மீது இருக்கிறது. 29 வயதான அவினாஷ், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஹீட்ஸிலேயே தேசிய சாதனையை முறியடித்தவர். ஆனால் அப்போது இறுதிச் சுற்றை எட்ட இது போதுமானதாக இல்லை. ஆனால் டோக்கியோ ஒலிம்பிஸ் முடிந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் அவினாஷின் அனுபவம் அதிகமாகி இருக்கிறது. ஆற்றலும் கூடி இருக்கிறது.
2022-ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் புகழ்பெற்ற கென்ய வீர்ரான ஹெஜிமொனியை வீழ்த்தி வெள்ளிப்பதக்கம் வென்றார் அவினாஷ். அதே வேகத்தில் இந்த முறை ஒலிம்பிக்கில் குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கத்தையாவது வெல்வார் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை. ஆனால் அதைக் காப்பாற்ற அவர் வலிமையான ஆப்பிரிக்க கண்டத்து வீரர்களை முந்த வேண்டும்.
அமன் ஷெராவத் (மல்யுத்தம்):
இந்த ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒரே வீர்ர் அமன் ஷெராவத். ஆனால் ஒரே வீர்ராக இருந்தாலும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும், 2023-ல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் வென்றவர் என்பதால் இவரது தோள் வலிமை மீதான நம்பிக்கை அதிகமாக இருக்கிறது.
இந்த ஒலிம்பிக்கில் அமனின் மிகப்பெரிய சவால் ஆர்மேனியாவின் ஆர்சென் ஹருட்டுன்யான். அவரை கால் இறுதியில் அமன் சந்திக்க வேண்டியிருக்கும். அவரை மட்டும் கடந்துவிட்டால் அமனுக்கு பதக்கம் நிச்சயம் என அடித்துச் சொல்ல்லாம்.