அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், இத்தேர்தலில் தனக்கு பதிலாக துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிட ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் ஞாபக மறதி பிரச்சினையால் ட்ரம்புக்கு எதிரான விவாத்ததில் அவர் தடுமாறியது, ஜனநாயக கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் ட்ரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவமும், பைடன் மீதான எதிர்ப்பு அதிகரிக்க காரணமாக இருந்தது.
ஜோ பைடன் விலகல்
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து வ்கிலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க அதிபராக நான் பணியாற்றுவது எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம். இருந்தாலும் நான் தேர்தலில் இருந்து விலகுகிறேன். எஞ்சி உள்ள எனது பதவிக்காலத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன். இது ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் சார்ந்து நான் எடுத்துள்ள முடிவு. இது குறித்து விரைவில் விரிவாக பேசுவேன்.
கடந்த 2020-ல் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டதும் துணை அதிபர் வேட்பாளராக நான் தேர்வு செய்தது கமலா ஹாரிஸை தான். அதிபர் தேர்தலில் இருந்து நான் தற்போது விலகியுள்ள நிலையில் இம்முறை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அவருக்கு எனது முழு ஆதரவை வழங்க விரும்புகிறேன். நம் கட்சியினர் அனைவரும் ஒன்று கூடி ட்ரம்பை வீழ்த்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த கமலா ஹாரிஸ்?
1964-ம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவின் ஓக்லாந்தில் பிறந்தவர் கமலா ஹாரிஸ். இவரது இயற்பெயர் கமலா தேவி. கமலா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஹாரீஸ், ஜமைக்காவைச் சேர்ந்தவர். தாய் சியாமளா சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். சிறுவயதில் இவர் அடிக்கடி சென்னை பெசண்ட் நகரில் உள்ள தனது தாத்தா கோபாலகிருஷ்ணனின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். கமலா ஹாரீசுக்கு 7 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டனர். கமலா ஹாரிஸின் தாத்தாவுக்கு சொந்த ஊர் துலசேந்திரபுரம் (Thulasendrapuram) அந்த ஊருக்கும் சிறுவயதில் கமலா ஹாரிஸ் வந்துள்ளார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்ற கமலா ஹாரிஸ் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். வழக்கறிஞரான இவர் 2004 முதல் 2011-ம் ஆண்டு வரை சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரலாக பணியாற்றினார். பின்னர் 2011 முதல் 2016ம் ஆண்டு வரை கலிபோர்னியா மாகாணத்தில் அட்டார்னி ஜெனரலாகவும் இருந்தார்.
2012-ம் ஆண்டில் தீவிர அரசியலில் நுழைந்த இவர், 2016-ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் இருந்து அமெரிக்க செனட் சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமெரிக்க செனட் சபைக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வானது அதுவே முதல் முறை.
கமலா ஹாரிசின் கிராமத்தில் உற்சாகம்
செனட் சபையில் நடந்த விசாரணைகளில் துல்லியமான கேள்விகளால் பலரது கவனத்தையும் ஈர்த்தார். குறுகிய காலத்திலேயே ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்த கமலா ஹாரிஸ், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகவும் தன்னை முன்னிறுத்திக் கொண்டார். ஆனால் அப்போது ஜோ பைடனை மீறி இவரால் அதிபர் பதவிக்கான வேட்பாளராக முடியவில்லை. இருப்பினும் கமலா ஹாரிஸின் ஆற்றலைப் பார்த்து வியந்த ஜோ பைடன் அவரை துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக்கினார். இப்போது அதிபர் பதவிக்கான தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலைகியதைத் தொடர்ந்து, இவர் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் ஆவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அவரது பூர்வீக கிராமமான துலசேந்திரபுரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கமலா ஹாரிஸின் தாத்தா குடும்பத்தினர் 1930-களில் அந்த கிராமத்தில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.