நோயல் நடேசன்
சன் கரடி (Sun bear) எனப்படும் சிறிய கரடி தென்கிழக்காசியா எங்கும் இருந்தாலும் தற்போது பல நாடுகளில் அரிதாகவே உள்ளது. காரணம் அவற்றின் பித்தப்பைகள். இது சீனா மருத்துவ துறையில் உபயோகிப்படுவதால் பல கரடிகள் கொல்லப்படுவதற்கு கடத்தப்படுகின்றன. நான் லாவோஸ் சென்றபோது இப்படிக் கடத்தப்பட்ட பல கரடிகள் வனப்பாதுகாப்புத் துறையினரால் மீடகப்பட்டிருந்ததை கண்டேன்.
மலேசியாவில் போர்னியோ வனத்திலும் சன் கரடிகள் குறைந்து வருகிறது என அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள். நாங்கள் சென்ற இடத்தில் ஒரு காட்டில் பாலம் போல் அமைத்திருந்தார்கள். கீழே காட்டில் கரடிகள் நிற்பதை பார்க்கும் வகையிலும் மேலே உல்லாசப் பிரயாணிகள் செல்லும் வகையிலும் அந்த பாலங்கள் அமைக்கப்பட்டிந்தன.
சிறிய உடலுடன் கருமையான நிறங்கொண்ட சன் கரடிகள் பெரும்பாலும் மரங்களில் வசிக்கும். தேவைக்கு மட்டும் நிலத்திற்கு வரும். நான் அவற்றைப் பார்த்தபோது அதில் ஒன்று என்னைக் கூர்ந்து பார்த்தது. எனது பக்கத்தில் நின்ற அவுஸ்திரேலிய பெண், “எங்கள் வீட்டு லபிரடோர்போல் இருக்கிறது” என்றார்.
“நாய், சீல், கரடி மூன்றும் ஒரே குடும்பத்திலிருந்து மூன்று கிளைகளாக கால ஓட்டத்தில் பிரிந்தவை. ஒன்று நீரிலும், மற்றது வனத்திலும், நாய்கள் வீட்டிலும் வாழுகிறது” என்றபோது நம்பிக்கையற்று என்னைப் பார்த்தார். தொடர்ந்து அவர்களிடம், “இன்னொரு ஒற்றுமை மூன்றும் அதிக மோப்ப சக்தி கொண்டவை” என்றேன்.
அதற்குமேல் அந்த பெண்ணிற்கு விளக்க அவசியமில்லை என அங்கிருந்து நகர்ந்தேன்.
காலையில் நதியில் செல்லும்போது பறவைகள் உலகம் தெரிந்தது. அதில் மலேசியாவின் தேசியப் பறவை என்னைக் கவர்ந்தது. போர்னியோவில் எட்டு வைகையான ஹோன்பில் எனப்படும் இருவாச்சி பறவைகள் வாழ்கின்றன. அதில் இரண்டு வகையானவையே என்னால் பார்க்க முடிந்தது. ஒன்றை மட்டும் என்னால் படம் பிடிக்க முடிந்தது. பறவைகளைப் படம் பிடிக்கும் திறமை என்னிடம் குறைவு. மேலும் பலரோடு செல்லும்போது பொறுமையாகப் படம் எடுக்க முடியாது.
ரைனோசரஸ் இருவாச்சியே (Rhinoceros Hornbill) மலேசியன் ஐந்து ரிங்கெட்ரில் உள்ளது. இவைகளது அலகுகள் பெரிதானவை. அதற்குமேல் ஒரு கொம்பு போன்ற அமைப்பு உள்ளது விசித்திரமானது. அத்துடன் இருவாச்சி பறவைகளின் முதல் இரண்டு கழுத்தெலும்புகள் இந்த பெரிய அலகுகளை அசைக்கக் கூடியதாக ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அலகுகளைவிட இவைகளின் வாழ்க்கையும் விசித்திரமானது.
ஆண் மிகவும் கஷ்டப்பட்டு பெண் இருவாச்சிக்குக் காதல் தூண்டில் போடும். பெண் இருவாச்சி காதலை ஏற்க அதிக காலம் கடத்தும். அதற்குத் தன்னையும் குஞ்சுகளையும் ஆண் குருவியால் காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கை உருவாக வேண்டும். அதன் பின் வாழ்க்கை முழுவதும் (கிட்டத்தட்ட 30 வருடங்கள்) ஒன்றாக இணைந்து வாழ்வன.
இந்த இருவாச்சிப் பறவைகளுக்குக் கூடு கட்டத் தெரியாது. இனப்பெருக்க காலத்தில் குஞ்சு பொரிக்கப் பெரிய மரப்பொந்து வேண்டும். காட்டில் பெரிய மரங்களை வெட்டும்போது இந்த இருவாச்சிகள் அருகிவிடும். அதுவே இப்பொழுது போர்னியோவில் நடக்கிறது.
பெண் பறவை, பொந்தில் தனது இறகுகளை உதிர்த்து மெத்தை போகலாக்கி அதில் முட்டையிடும். ஆண் குருவி அந்தப் பொந்தின் வாசலை எச்சியாலும் மண்ணாலும் கலந்து சிறிய துளையை மட்டும் விட்டு வைத்து விட்டு மிகுதியை அடைத்துவிடும். குஞ்சை வளர்க்கும் காலத்தில் பெண் இருவாச்சி தனது மரப்பொந்தை விட்டு வெளிச்செல்லாது. அதாவது கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆண் பறவையே உணவு தேடிக் கொண்டு வந்து பெண்ணையும் குடும்பத்தையும் பாதுகாக்கும். பெண் இருவாச்சி, குஞ்சுகளது மலங்களை, ஆண் தனது அலகுகளால் சுத்தப்படுத்தும். குஞ்சுகள் வளர்ந்து இறகு முளைத்து வெளியேறத் தயாராகியதும் ஆணும் பெண்ணுமாகப் பொந்தின் வாசலை அலகால் உடைத்து பெரிய வாசலை உருவாக்கும்.
இருவாச்சிகள் விசித்திரமான பறவைகள் மட்டுமல்ல, கனிகளை உணவாக உண்டு, அதன் விதைகளை தங்கள் மலத்தின் மூலம் பரப்பி, காட்டு மரங்களை தூர இடங்களுக்கு பதியம் போடுகின்றன. வனத்தை உருவாக்குவதும் இதை அதைப் பாவிப்பதும் என முக்கிய பங்கை வகிக்கும் பறவைகளாக்க கருதப்படுகின்றன. பெரிய மரங்களைத் தேடி வாழும் இருவாட்சிகள், நமக்குக் காட்டை உருவாக்கி வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது.
நாம் ஆண், பெண் சார்ந்த இலக்கியங்கள் படைத்து சமூகத்தின் ஒழுக்கத்தை வலியுறுத்தும் முன்பே அவை ஒன்றாக இணைந்து வாழ்வது, வருங்கால சந்ததிகளை எப்படிப் பாதுகாப்பது என நமக்குப் பாடம் சொல்லுகின்றன.
பரிணாமத்தின் உச்சிக் கிளையில் வாழும் நமது பங்கு, அவைகளைப் பாதுகாப்பதிலே உள்ளது. அவைகளைப் பாதுகாப்பது மூலம் நாம் புவியையும் நமது வருங்கால சந்ததிகளையும் பாதுகாக்கிறோம்.
போர்னியோத் தீவு டூர் – 1 படிக்க…
https://wowtam.com/5-flying-dutchman-kinabatangan-river/27122/