நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக குறைந்த இடங்களையே கைப்பற்றியதால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் வலிமையான தலைவர்களில் ஒருவர் யோகி ஆதித்யநாத். கடந்த 2017-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பெருவாரியான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்ததில் யோகி ஆதித்யநாத் பெரும் பங்கு வகித்தார். இதைத்தொடர்ந்து அவர் உத்தர பிரதேச மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ம் ஆண்டைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், 2022-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் பாஜக பெரும் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த தொடர் வெற்றிகளால் யோகி ஆதித்யநாத் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக மாறினார். ஒரு கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால், அவருக்கு அடுத்து யோகி ஆதித்யநாத் பிரதமராக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. நரேந்திர மோடி, அமித் ஷாவுக்கு அடுத்ததாக மக்களின் கவனத்தை ஈர்த்த தலைவராக யோகி ஆதித்யநாத் பார்க்கப்பட்டார். அதனாலேயே பிற மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் அவர் பிரச்சாரத்துக்கு போய் மக்களை சந்தித்து பாஜகவுக்காக வாக்கு கேட்டார்.
மற்றொரு புறம் யோகி ஆதித்யநாத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே பனிப்போர் நடப்பதாகவும் பேச்சு எழுந்தது. நாடாளுமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் விரும்பிய வேட்பாளர்களை மோடி நிறுத்தவில்லை. அதற்கு மாற்றாக வேறு சிலருக்கு சீட் கொடுத்தார். அதனால் யோகி ஆதித்யநாத் மோடிக்கு ஆதரவாக பழைய வேகத்தில் பிரச்ச்சாரம் செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக பலத்த அடி வாங்கியது.
மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வென்றது. அகிலேஷ் யாதவின் சமஜ்வாஜி கட்சி 37 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. இந்த தோல்வியால் உத்தரபிரதேச மாநில பாஜகவுக்குள் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் பூபேந்திர சவுத்ரிக்கும் ஆதித்யநாத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்ட்டுள்ளது. பூபேந்ந்திர சவுத்ரி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பூபேந்திர சவுத்ரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தான் தலைவர் பதவியில் இருந்து விலகுவதுபோல் மாநில முதல்வர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரியிருப்பதாக கூறப்படுகிறது.
பூபேந்திர சவுத்ரியைப் போலவே முதல்வர் ஆதித்யநாத்திற்கும், துணை முதல்வர் கேசவ் பிரசாத்திற்கும் இடையிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேசவ் பிரசாத் டெல்லி சென்று பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேசியுள்ளார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, உத்தர பிரதேச அரசியல் சூழல் பற்றி பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் டெல்லியில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.