மலையாள திரையுலகமே கொதித்துப் போயிருக்கிறது. திரையுலகினர் மட்டுமல்லாமல் பொது மக்களும் நடிகர் ஆசிப் அலிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். என்ன நடந்தது என்பதுதான் அடுத்தடுத்த சுவாரஸ்யம்.
சில நாட்களுக்கு முன்பாக நடிகர் மம்முட்டி எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரை சந்தித்துப் பேசியதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். எம்.டி.வாசுதேவனின் பிறந்த நாளில் ஒரு கலைஞராக தனது வாழ்த்துகளை தெரிவிக்க அவரது இல்லத்திற்கே சென்று மரியாதை செய்திருந்தார் மம்முட்டி. இதன் பின் வாசுதேவன் நாயரின் சிறுகதைகளை படமாக்கியிருக்கும் தகவல் பரவியது. அவரது சிறுகதைகளை தொகுத்து 9 எபிசோடுகளாக இணையதள தொடராக தயாரித்திருக்கிறார்கள்.
இதன் ட்ரைலர் வெளியீடும் விழா கொச்சியில் நடைபெற்றது. இந்த தொடரின் ஒவ்வொரு பகுதியையைம் மலையாளத்தில் பிரபலமான ஒரு இயக்குனர் இயக்கியிருந்தார்கள். ட்ரைலர் வெளியீட்டு விழா மேடையில் மம்முட்டி உள்பட மலையாளத்தில் புகழ்பெற்ற படைப்பாளிகள், கலைஞர்கள் பலரும் அமர்ந்திருந்தார்கள். மேடையில் இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் இருந்தார். இவர் பல படங்களுக்கு இசையமைத்து விருதுகளையும் வாங்கியிருக்கிறார். ஆதாமின்ட மகன் அபு என்ற படம் தழிழிலும் வெற்றிபடமாக அமைந்தது. இவர் மலையாளத்தில் இயக்குனர் ஜெயராஜ் இயக்கிய ஒரு கதைக்கு இசையமைத்திருந்தார்.
விழா மேடையில் அவருக்கு நினைவுபரிசு கொடுக்க பிரபல நடிகர் ஆசிப் அலியை அழைத்தார்கள். அவரும் நினைவு பரிசை கையில் எடுத்துக் கொண்டு மேடையில் வந்தார். அப்போது ரமேஷ் நாராயணன் ஆசிப் அலியை அங்கேயே இரு என்பது போல கையால் சைகை செய்து காட்டி விட்டு, எனக்கு இயக்குனர் ஜெயராஜ்தான் நினைவுபரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னார். மேடையில் இருப்பவர்கள் கொஞ்சம் அதிர்ந்து போய் பார்க்க, ஆசிப் அலியோ அலட்டிக்கொள்ளாமல் சிரித்துக் கொண்டே நின்றார். அங்கு வந்த ஜெயராஜ் கையில் பரிசைக் கொடுக்க அவரும் ரமேஷ் நாராயணன் கையில் விருதைக் கொடுத்தார். விருதை வாங்கிய அவர் ஜெயராஜிடம்தான் நான் விருது வாங்கினேன் என்பதுபோல் கையை காட்டினார். அவரின் இந்த செயல் மேடையில் இருந்த பலரையும் தர்மசங்கடத்திற்குள் ஆழ்த்தியது. மேடையில் தான் அவமதிக்கப்பட்டும் சிரித்துக் கொண்டே நின்ற ஆசிப் அலியை பலரும் பாராட்டியதோடு அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
இது அப்போதைக்கு முடிந்து போன விஷயமாக இருந்து விடும் என்று நினைத்த விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்களும், பொது மக்களும். இப்போது பொது வெளியில் ஆசிப் அலிக்காக வாய்ஸ் கொடுத்து வருகிறார்கள். அனைத்து தொலைகாட்சி விவாதங்களிலும் ஆசிப் அலிக்கு ஆதரவாக பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது மலையாள திரையுலகம் முழுவதும் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது.
ஆசிப் அலியை மத ரீதியான கண்ணோட்டத்துடன் பார்த்து அவரை அவமதித்தது பெரிய தவறு என்று கேரளா முழுக்க குரல் எழுந்திருக்கிறது. இது குறித்து ஊடகத்தினர் ஆசிப் அலியிடம் கேட்டபோது, இது போல எனக்கு பல இடங்களில் நடந்துள்ளது. நான் அதையெல்லாம் பெரிதாக நினைக்கவில்லை. நீங்களும் இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டா,ம். என்று பெருந்தன்மையோடு சொல்லியிருக்கிறார்.
ஆனால் இந்த விஷயத்தை மலையாள அறிவு ஜீவிகள் அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. மலையாள சினிமா மட்டும்தான் கடந்த காலங்களில் எந்தவித காழ்ப்புணர்ச்சிக்கும் இடம் கொடுக்காமல், சர்ச்சைகளுக்கு ஆளாகாமல் இருந்து வந்திருக்கிறது. இதை பிரேம் நஷீர் காலத்திலிருந்து கடைபிடித்து வந்திருக்கிறார்கள்.
வைக்கம் முகமது பஷீர், பாசில் என்று பலரும் எந்தவித மத மாச்சரியங்களுக்கு ஆளாகாமல் படைப்புகளைக் கொடுத்து வந்தனர். அவருக்கு உரிய மரியாதையை கேரளா மண் கொடுத்து வந்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக மலையாள சினிமா நிறம் மாறத்தொடங்கியிருக்கிறதோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இதனை ஆரம்ப நிலையிலேயே முறியடிக்க வேண்டும் என்று மூத்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்தினர் ஓரணியில் திரள வேண்டும் என்பது கேரள மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் ஆசிப் அலிக்கு போன் செய்திருக்கிறார். ஆசிப் அலி போன் சுவிட்ச் ஆப் செய்ப்பட்டிருந்தது.