பெருவாரியான இந்தியர்களின் சிறுவயது நினைவுகளில் இருக்கும் விஷயங்களில் ஒன்று Camlin பென்சில். சிறுவயதில் தங்கள் பள்ளிப் பிராயத்தில் இந்த பென்சிலைப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு. காம்லின் பென்சில் மட்டுமின்றி, கேம்லின் ஜியாமெண்ட்ரி பாக்ஸ் போன்ற சில தயாரிப்புகளும் பள்ளிக்காலங்களில் மறக்க முடியாத விஷயம். இன்றும் பலரது மனதில் நிறைந்திருக்கும். இந்த காம்லின் பென்சிலைத் தயாரிக்கும் நிறுவனத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்திய அதன் தலைவரான சுபாஷ் தண்டேகர் கடந்த திங்கள்கிழமை இரவு காலமானார்.
1931-ம் ஆண்டில் முதன்முதலாக தனது தயாரிப்பைத் தொடங்கியது. திகம்பர் பரசுராம் தண்டேகர் என்பவர் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் தண்டேர்கர் அண்ட் கோ என்ற பெயரில் இயங்கிய இந்நிறுவனம் பென்சிலை மட்டும் தயாரித்து வந்தது. 1960-களில் சுபாஷ் தண்டேகர் இந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகுதான் பல்வேறு ஸ்டேஷனரி பொருட்களையும் தயாரிக்கும் நிறுவனமாக இது மாறியது. நிறுவனத்தின் பெயரும் கேம்லின் என மாற்றப்பட்டது.
1974-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள தாராபூர் எனும் இடத்தில் மரத்தால் ஆன ஸ்கேல்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார் தண்டேகர். இது அப்பகுதி மக்களின் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், இந்திய ஸ்டேஷனரி சந்தையில் கேம்லின் நிறுவனத்தின் இடைத்தையும் அசைக்க முடியாத இட்த்துக்கு எடுத்துச் சென்றது.
இப்போது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேம்லின் நிறுவனம், 1998ல் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது. இந்த நிலையில் 2011ல் ஜப்பான் Kokuyo சுமார் 51 சதவீத பங்குகளை வாங்கியது. தற்போது தண்டேகர் குடும்பத்தைச் சேர்ந்த சுபாஷ் தண்டேகர் தலைமையில் கேம்லின் இயங்கி வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கான ஸ்டேஷனரி பொருட்களை தயாரித்து வழங்குவதுடன், அவர்களின் சிந்தனையை தூண்டி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகளை கேம்லின் நிறுவனம் நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்களுக்காக இவர்கள் நட்த்திவரும் ஓவியப் போட்டியில் ஒருமுறை 48.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். கின்னஸ் சாதனையிலும் இப்போட்டி இடம்பெற்றது. இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டவர் தண்டேகர். மகாராஷ்டிரா சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவராகவும் 1992-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டுவரை இருந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் தண்டேகர், திங்கள்கிழமை இரவு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர், கேம்லின் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழில் துறை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சுபாஷ் தண்டேகரின் மறைவையொட்டி மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “மாநிலம் ஒரு தாத்தாவை இழந்துவிட்டது. அவர் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்து அவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றினார். தொழிலாளர்களுக்குக் கௌரவம் கிடைக்க வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தினார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.