தமிழ்நாட்டில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் அதிகரிக்கிறது. அதன்படி, யாருக்கு எவ்வளவு அதிகரிக்கும்? பார்க்கலாம்…
அன்றே சொன்ன வாவ் தமிழா
தமிழ்நாட்டில் 1 ஜூலை 2024 முதல் மின்சார கட்டணம் உயர்த்தப்படும் என்று சென்ற மாதமே எழுதியிருந்தோம் (https://wowtam.com/4-shocking-information-the-increase-in-electricity-rates-from-july-1-is-true/26670/).
இந்நிலையில், மின் கட்டணத்தை 4.83% உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று (ஜூலை 15) அறிவித்துள்ளது. மேலும், இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மின்சார கட்டண உயர்வு குறித்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பில், பூஜ்யம் முதல் ஒவ்வொரு படிநிலை வரையிலும் மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் எந்த அளவுக்கு உயர்த்தப்படுகிறது என்ற விவரம் தரப்பட்டுள்ளது. அதன்படி,
வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் 20 காசு முதல் அதிகபட்சம் 55 காசுகள் வரை உயர்த்தப்படுகிறது.
0 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ஆக இருந்த கட்டணம், 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.80-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
401 யூனிட் முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 30 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 6.45-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
501 யூனிட் முதல் 600 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.8.55-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
601 யூனிட் முதல் 800 யூனிட் வரை, ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 40 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.9.65-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
801 யூனிட் முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20-ஆக இருந்த மின்சாரக் கட்டணம், 50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.10.70-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1000 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட் ரூ.11.25-ஆக இருந்த மின்சாரக்கட்டணம், 55 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.11.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 9.35ல் இருந்து ரூ.9.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில்வே, ராணுவ வீரர் குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
100 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டணம் கிடையாது. அவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. இந்த வகையில் சுமார் ஒரு கோடி மின் நுகர்வோர் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 50 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் ரூ. 9.70ல் இருந்து ரூ.10.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குடிசை, குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.95 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
காட்டேஜ் மற்றும் மைக்ரோ இண்டஸ்ட்ரீஸ்-க்கு , 0 முதல் 500 யூனிட்களுக்கு, ரூ.4.60-ஆக இருந்த மின்கட்டணம் 20 காசுகள் அதிகரித்து, ரூ.4.80-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தப்படும் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.65-ஆக இருந்த மின்கட்டணம் 30 காசுகள் அதிகரித்து, ரூ.6.95-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.7.65ல் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், வழிபாட்டுத் தலங்கள், தொழில் துறையினருக்கான மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வழிபாட்டு தலங்களுக்கான 0 முதல் 120 யூனிட்டுகளுக்கு ரூ.5.90-ஆக இருந்த மின்கட்டணம், 30 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.6.20-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக காத்திருந்து அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளுக்கான மக்களின் பரிசு என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை, சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள். உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டித்துள்ளார். மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி மின் கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துகிறது என்றும் திமுக அரசை சாடியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாகவே மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை அரசு நிறுத்தி வைத்திருந்தது என்று பாமக குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வு விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் அரசின் கண்ணசைவுக்கு செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டிய அவர், “கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.