3 வித அழைப்பிதழ்கள்:
திருமணத்துக்கு விருந்தினரை அழைப்பதற்காக 3 விதமான அழைப்பிதழ்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. மிகப் பிரபலமான விஐப்பிக்களுக்கு, கடவுளின் வெள்ளிச்சிலைகளைக் கொண்ட பிரம்மாண்டமான அழைப்பிதழும், பிரபலங்களுக்கு சில ஆயிரம் ரூபாய் விலைமதிப்புள்ள வேறு வகை அழைப்பிதழும், உறவினர்களுக்கு கொடுக்க கலைநயமிக்க இன்னொரு விதமான அழைப்பும் அச்சடிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழ்களைப் பெற்றவர்கள், திருமணத்தில் பங்கேற்கிறோமா, இல்லையா என்பதைப் பற்றி இமெயில் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த இமெயிலின் உறுதியாக கலந்துகொள்வதாக பதிலளித்தவர்களுக்காக சிறப்பான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2 கோடி ரூபாய் கைக்கடிகாரம்:
திருமணத்துக்கு வந்திருந்த ஷாரூக் கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட 25 முக்கிய விருந்தினர்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை ரிட்டர்ன் கிஃப்டாக முகேஷ் அம்பானி வழங்கியுள்ளார். Audemars Piguet வகையைச் சேர்ந்த இந்த ஆடம்பரமான கடிகாரங்கள் இந்த திருமணத்துக்காகவே விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர சில விஐபிக்களுக்கு 1 கோடி ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சர்களும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வெள்ளி நாணயங்களும் திருமணத்தை முன்னிட்டு சிறப்பு பரிசுகளாக வழங்கப்பட்டுள்ளன.
நட்சத்திரங்களின் நடனம்:
தன் மகள்கள் திருமணத்திலேயே அமைதியாக இருந்த ரஜினிகாந்த், ஆனந்த் அம்பானி திருமணத்தில் நடனம் ஆடியது எல்லோரையும் வியக்க வைத்தது. மற்ரொரு புறம் பாலிவுட் பாட்ஷாஅக்களான ஷாரூக் கான், ரன்பீர் கபூர், விக்கி கவுஷால் ஆகியோர் ‘சைய்ய… சைய்ய…’ பாடலுக்கு நடனமாடி விழாவில் கலகலப்பூட்டினார்கள். ஆலியா பட், காத்ரினா கைஃப், கவுரி கான் ஆகியோர் அவர்களின் நடனத்தை ரசித்து உற்சாகப்படுத்தினர்.
நிதா அம்பானியின் 500 கோடி நெக்லஸ்:
இந்த 3 நாள் திருமண நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் உடைகள் மற்றும் நகைகள் பலரையும் கவர்ந்தன. குறிப்பாக வரவேற்பு நிகழ்ச்சியின்போது, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதக் கற்கள் பதித்த நெக்லஸை அணிந்திருந்தார் நிதா அம்பானி. பல விருந்தினர்களின் பார்வை இதன் மீதுதான் இருந்தது. அதே போல் சுப் ஆசிர்வாத் நிகழ்ச்சியில் தன் பேரக் குழந்தைகள் அனைவரின் பெயர்களையும் பொறித்த ரவிக்கையை அணிந்து வந்திருந்தார் நிதா அம்பானி. இது விழாவுக்கு வந்தவர்களை பெரிதும் கவர்ந்தது. அபு ஜானி சந்தீப் கோஸ்லா என்பவர் இந்த ரவிக்கையை வடிவமைத்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை 67.5 கோடி ரூபாய். நிதா அம்பானிக்கு போட்டியாக பல்வேறு பாலிவுட் நடிகைகளும் உடைகளை அணிந்திருந்தனர். இதில் அதிதி ராவ் அணிந்துவந்த உடையின் மதிப்பு 2.25 லட்ச ரூபாய். 1.28 லட்ச ரூபாய் மதிப்புள்ள சேலையை அணிந்து சுப் ஆசிர்வாத் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ராஷ்மிகா மந்தனா.
ரஹ்மானின் இசை நிகழ்ச்சி:
ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் ஸ்ரேயா கோசல், சங்கர் மகாதேவன், சோனு நிகாம் உள்ளிட்ட நட்சத்திர பாடகர்கள் பங்கேற்றனர்.
மருத்துவ, பாதுகாப்பு ஏற்பாடுகள்:
திருமணத்துக்கு வந்தவர்களில் யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜியோ வேர்ல்ட் சென்டரில் சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, நிறுத்தப்பட்டிருந்தன. மருத்துவ குழுக்களைத் தவிர, தனியார் பாதுகாப்பு படையும் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் பணியாற்றிய ஊழியர்கள், பாதுகாப்பு படையினர், விழா ஏற்பாட்டாளர்களின் கைகளில் அவர்களின் பணியைக் குறிக்கும் வகையில் பல்வேறு வண்ணங்களில் பட்டைகள் கட்டப்பட்டிருந்தன.