ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த விமர்சனங்களில் படத்தை ஆதரிப்பவர்கள் அளவுக்கு அதிகமாக புகழ, விமர்சிப்பவர்கள் மிகக் கடுமையாக தாக்கி வருகின்றனர். இதற்கு நடுவே பாராட்டு – விமர்சனம் ஆகிய இரண்டையும் சரிவிகிதமாக கலந்து ஒரு விமர்சனத்தை எழுதியுள்ளார், பிரபல எழுத்தாளரான பட்டுக்கோட்டை பிரபாகர்.
தனது முகநூல் பக்கத்தில் இப்படத்தை பற்றி பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியுள்ள விமர்சனம்…
நிறைகளை முதலில் சொல்லிவிடுகிறேன்.
நேர்மை தவறுபவர்களை நாட்டில் தட்டிக் கேட்பதற்கு முன்பு வீட்டில் தட்டிக்கேட்க வேண்டும் என்கிற மையக் கரு சிறப்பானது. அப்படி நேர்மையாகச் செய்ய இன்றைய இளைஞர்கள் முன்வந்தால் அதன் விளைவுகளும், மன உறுதியை உடைத்து ஏற்படுத்தும் பாதிப்புகளும் எப்படி இருக்கும் என்பதைக் காட்டியதில் மிகையற்ற எதார்த்தம்.
தாத்தா மியூசியத்திலிருந்துதான் பேசுகிறார் என்று பின்னணியில் முதல் தேசியக் கொடியைப் பார்த்து கண்டுபிடிப்பதும், பிராஸ்த்தெட்டிக் மேக்கப் போட்டால் வெளியேற முடியாத வியர்வை ஓரிடத்தில் தேங்கி வீக்கமாகக் காட்டிக் கொடுத்துவிடும் என்கிற தகவலுமாய் ஆங்காங்கே தென்படும் புத்திசாலித்தனம்.
காலண்டர் பாடலின் லொக்கேஷன் அருமை, ஒவ்வொரு ஃபிரேமும் பளிங்கு.
ஜீரோ க்ராவிட்டி இடத்தில் மிதந்தபடி கொலை செய்யும் புதுமை. அங்கே மிதக்கும் தண்ணீர்த் துளிகளைக்கொண்டு செய்தி எழுதுவதும் புதுமையே.
படம் முழுதுமே ரசிக்கவைக்கும் முக்கியமான விஷயம் ரவிவர்மாவின் துல்லிய, அழகுணர்ச்சியுடன் கூடிய ஒளிப்பதிவு.
யூ டியூப் நடத்தும் இளைஞர்கள் காமன் மேன் கேரிகேச்சருடன் வழங்கும் சமூக சீர்கேடுகளின் குறும்படங்களுடன் கூடிய துவக்க இருபது நிமிடங்கள் அட என்று கவர்ந்த அம்சங்கள்!
கலை இயக்குனர் படம் முழுதும் பிரமாதமாக உழைத்திருக்கிறார்.
சித்தார்த், ஜெகன் மற்றும் நண்பர்கள் துடிப்பாய் நடித்திருக்கிறார்கள்.
இப்போது குறைகளைப் பார்க்கலாம்…
தனது முந்தைய படங்களின் பல ஹைலைட்டான விஷயங்களை மிக அதிகமாக திரைக்கதையில் மீண்டும் பயன்படுத்தியிருப்பது.
யூ டியூப் இளைஞர்கள் எல்லோர் குடும்பத்திலும் நேர்மையற்றவர்கள் இருப்பதும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும்போது இருந்த உறுதிப்பாடு சித்தார்த் அம்மா இறந்த பிறகு மொத்தமாக எல்லோருக்குமே குலைந்து போவதும் செட்டப்பாக அமைந்திருக்கிறது.
இந்த ஒரு பார்க்கிங் டாக்ஸ் சொன்னாலே மில்லியன் கணக்கில் எல்லோரும் கம் பேக் இண்டியன் என்பதும், இவர்கள் சொன்னதும் எல்லா மில்லியனும் ரிவர்ஸ் கியர் போட்டு கோ பேக் இண்டியன் என்பதும் சமூக ஊடகங்களைத் தொடர்பவர்களை ஆட்டு மந்தைகளாகக் காட்டும் விமரிசனம்.
போதாததற்கு கழிவறையில் கிறுக்குபவர்களோடு சமூக ஊடகங்களில் எழுதுபவர்களை ஒப்பிடும் மேட்டிமை மனப்பான்மையுடன் கூடிய வசனம்!
இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியா வருவதற்கு சொல்லும் அர்த்தமில்லாத காரணம்! நோய் நல்லா முத்தினப்பறம் மருந்து கொடுத்தாதான் வேலை செய்யும் என்பது என்ன லாஜிக்?
தாத்தா கொலை செய்யும் நபர்கள் சமூகத்திற்கு என்ன கேடு செய்தார்கள் என்று காட்டிவிட்டுக் கொன்றால்தானே இவர் கொல்லப்பட வேண்டியவர்தான் என்று நமக்குத் தோன்றும்.
ஒவ்வொரு கொலையையும் ஆரம்பித்துவைத்துவிட்டு ஏன் தெரியுமா என்று பிறகு ஆவணப்படம் போல விவரிப்பதும், இப்போது நான் செய்திருக்கும் வர்மத் தாக்கு என்ன வகை, இதனால் என்ன விளைவு ஏற்படுமென்றால் என்று முழம் முழமாய் பாடமெடுப்பதில் கொலையின் பதட்டம் டோட்டலி மிஸ்ஸிங்.
அந்த விளைவுகளில் காமெடியோ, பயமோ இல்லாமல் குரூரமாக இருக்கிறது.
கமலின் நடிப்பு விதவிதமான தோற்றங்களுக்குள் ஒளிந்துகொண்டு அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது.
அனிருத்தின் பின்னணி இசைக்கு நடுவில் இந்தியனில் ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட இசையைப் பயன்படுத்தியிருப்பது ஆறுதலாக இருக்கிறது.
கிளைமாக்ஸ் சேஸ் என்பதை சே……….ஸ் என்றுதான் குறிப்பிட வேண்டும். வெளியே போய் க்யூவில் நின்று பாப்கார்ன் வாங்கிக்கொண்டு திரும்பினாலும் சேஸ் முடிந்திருக்காது. அதன் நடுவில் சட்டைக் கழற்றி பேர் பாடி மேனுவல் ஃபைட் எல்லாம் தாங்க முடியவில்லை.
தாத்தாவைக் கொலை வெறியோடு துரத்தும் ஆயிரக்கணக்கானோர் யார் என்றால் லஞ்சம் வாங்க முடியாதோர் சங்கத்தைச் சேர்ந்தவர்களாம். வாட்ஸ் ஆப் குரூப்பில் அவர்கள் செய்திகள் பகிர்ந்துகொள்கிறார்களாம். வாட் ஈஸ் திஸ்?
கிளைமாக்சில் மாஜிஸ்ட்ரேட்டிடம் நெடுமுடி வேணு தன் மகன் உயிரைக் காப்பாற்ற தாத்தாவை அரெஸ்ட் செய்யாமல் விடச் சொல்லிக் கெஞ்சுவதும், அதை அவரும் ஏற்பதும் அபத்தத்தின் உச்சம்.
தன் மகன் தப்பு செய்தாலும் கொல்லும் சல்யூட் அடிக்க வைத்த இந்தியன் அத்தனைக் கொலைகள் செய்துவிட்டு மாட்டியபிறகு தப்பிச் செல்ல பேரம் பேசி புறப்பட்டுச் செல்லும்போது..அந்தப் பாத்திரம் மதிப்பிழந்து விடவில்லையா?
ரமணா படத்தின் கிளைமாக்சில் நானே தப்பு செய்தாலும் என்னையும் மன்னிக்காமல் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது அந்தப் பாத்திரத்தின் கம்பீரம் புல்லரிக்க வைத்ததே..
இதிலும்கூட..
அந்த மாஜிஸ்ட்ரேட்,”யாரும் நேர்மை தவறக்கூடாது என்பதே வாழ்வின் கொள்கையாக வைத்திருக்கும் இந்தியன் தாத்தா நான் நேர்மை தவறுவதையும் விரும்ப மாட்டர்” என்று சொல்லியிருந்தால்?
இயக்குனரும் நண்பருமான ஷங்கர் அவர்களுக்கு அன்புடன் சில வார்த்தைகள்:
ஆறு வருட எதிர்பார்ப்பு இது!
ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன் போன்ற தரமான படங்களின் மூலம் நீங்களே ஏற்படுத்திய எதிர்பார்ப்புதான் இது.
உங்கள் படங்களில் வசூல்ரீதியான வெற்றியை சந்திக்காத படங்களும் வெகு சிலதான்.
கே.பாலசந்தர் படம், பாரதிராஜா படம், கே.பாக்யராஜ் படம், எல்லாம் ஒரு பிராண்ட் சார். அவர்களுக்குப் பிறகு ஷங்கர் படம் என்பதும் ஒரு பெரிய பிராண்ட்.
உலகம் முழுதும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் துடிப்பில் எப்போதும் உங்கள் படங்கள் உண்டு.
ஜென்ட்டில்மேனில் முதல்வரை கோர்ட்டுக்கு அழைத்தவர் நீங்கள். காதலனில் கவர்னரையே வில்லனாகக் காட்டியவர். முதல்வனில் முதல்வரை லைவ் பேட்டியில் காரசாரமாக கேள்விகள் கேட்டவர்.
நதிகள் கலக்கும் இடம் கடல் என்பது உலகறிந்த விஷயம்! கார்ப்பரேட்டுகளும், பெரிய பிஸ்னெஸ் மேன்களும் அரசியல் தொடர்பில்லாமல் ஒரு தவறும் செய்ய முடியாது என்பது பாப்பாக்களுக்கும் தெரியும். அப்படியிருக்க மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அரசியல்வாதி என்கிற ஒரு திசைப் பக்கமே இந்தியன் தாத்தா திரும்பவில்லையே..
இந்தப் படம் குறித்து எக்கச்சக்கமான எதிர்மறை விமரிசனங்கள் பார்த்தபோது பலரைப் போல நானும் கமலின் அரசியல் நிலைப்பாடுதான் காரணமோ என்று நினைத்தேன். ஒருவேளை..அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அது மட்டும் காரணமில்லை.
மக்குப் பிள்ளையிடம் ஏன் செண்டம் வாங்கவில்லை என்று கேட்கமாட்டார்கள். செண்டமாக வாங்கும் பிள்ளை பாஸ் மார்க் மட்டும் வாங்கினால் கேட்கத்தான் செய்வார்கள். விரட் கோலி, தோனியிடம்தான் கடைசி ஓவரிலும் சிக்ஸர் எதிர்பார்ப்பார்கள்!
கம் பேக் ஷங்கர்!
இந்தியன் 3 மீது நம்பிக்கை ஏற்படுத்துகிறது படத்தின் அற்புதமான ட்ரைலர்.