நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், “பேசியதற்காக கைது செய்வீர்களா? நானும் பேசுகிறேன் என்னை கைது செய்வீர்களா?” என ஆவேசமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
என்ன பேசினார் சாட்டை துரைமுருகன்
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன். இவர், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் நடிகை குஷ்பு குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தஞ்சாவூர் போலீஸாரால் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இனிமேல் யார் குறித்தும் அவதூறு பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் இவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியிருந்தது. அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். அதிலிருந்தும் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், தற்போது மீண்டும் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யபப்ட்டுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. முன்னதாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த 8ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனிடையே, இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர்கள் குறித்து, குறிப்பாக மறைந்த முன்னாள் முதலவர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன்படி, திருச்சி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். குற்றாலத்தில் இருந்து சாட்டை துரைமுருகன் திருச்சிக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட உள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நானும் பேசுவேன் – சீமான் கண்டனம்
சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “சாட்டை துரைமுருகன் குற்றாலம் போகவில்லை. அவரது ஊரில் அடுத்த வாரம் திருவிழா. அதற்காக போனவர்தான்.
31 நாட்களில் 131 கொலை நிகழ்ந்துள்ளது; தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னரே இது தெரிய வருது. மரக்காணம், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து எவ்வளவு பேர் மரணம்? இதற்கு பிறகும் விக்கிரவாண்டியில் நேற்று கள்ளச்சாராயம் குடித்து எத்தனை பேர் பாதிப்பு? புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு எப்படி சாராயம் வருது? எங்க வண்டிகளை எத்தனை இடத்தில் சோதனை போடுகிறீர்கள்? அதை மீறி எப்படி வரும்? கொலைகாரர்கள், சாராய ஆலை அதிபர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால் கொலையை எப்படி தடுக்க முடியும்? கள்ளச்சாராயத்தை எப்படி தடுக்க முடியும்? இவர்கள் மீது எல்லாம் பாயாத வழக்கு, சட்டம், கைது பேசியதற்காக துரைமுருகனை கைது செய்வதா?
எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்தீர்கள்? என்னைவிட பேசிவிட்டாரா துரைமுருகன்? அதிகாரத்தில் இருக்கிற பவர்புல் கிங்தானே நீங்க… என்னையை கைது செய்யுங்க பார்க்கலாம்? என்னை சுற்றி இருக்கிறவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுப்பதுதானே… சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதியை எங்கே அவதூறு செய்து பேசினார்? அவர் பாடியது ஏற்கனவே இருந்த பாட்டுதானே? எழுதினவன், பாடினவனை விட்டுவிட்டு எடுத்து பாடியவரை ஏன் கைது செய்றீங்க? நானும் அதே பாட்டை இதோ பாடுகிறேன்…. இப்ப நான் பாடிட்டேன் என்னை கைது செய் பார்ப்போமே.. நீ புள்ள பூச்சிய பிடிச்சு விளையாடுவ.. தேள், பாம்பு, நட்டுவாகளியை பிடிச்சு விளையாடேன்..
நாங்க பேசினால் அவமதிப்பா? முன்னாள் முதல்வர் கருணாநிதியை பேசவே கூடாதா? திமுகவினர் பேசாத பேச்சா பேசுகிறோம்? முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி இப்போதைய முதல்வர் ஸ்டாலின் பேசியதை எல்லாமேடுத்து அனுப்பட்டா? நீங்க பேசுவது கருத்துரிமை; நாங்க பேசினால் அவமதிப்பா? முடிந்தால் என்னை கைது செய்யுங்களேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.