உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம். நாளை (ஜூலை 12-ம் தேதி) மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் செண்டரில் நடைபெறவுள்ள இந்த திருமணத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்…
ஆனந்த் அம்பானியின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த முகேஷ் அம்பானி மொத்தமாக ஒதுக்கியுள்ள தொகை 1,500 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. தனது மகள் இஷா அம்பானியின் திருமணத்துக்கு முகேஷ் அம்பானி செலவு செய்த்தை விட (800 கோடி ரூபாய்) இது 2 மடங்கு அதிக தொகையாகும். இதில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்காக மட்டும் அவர் 1,200 கோடி ரூபாயைச் செலவு செய்துள்ளார்.
திருமணம் நடக்கவுள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ச்ஷன் செண்டரின் மொத்த பரப்பளவு 1,03,012 சதுர மீட்டர்.
அனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேர், போரிஸ் ஜான்சன், தான்சானியா அதிபர் சமினா சுலுகு ஹசன், கிம் கார்டிசன், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட 7 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை அழைத்துச் செல்ல 3 ஃபால்கன் -2000 ஜெட்டுகள் மற்றும் 100 தனியார் ஜெட்டுகளை அம்பானி குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜஸ்டின் பீபருக்கு 10 மில்லியன் டாலர் (83 கோடி ரூபாய்) சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
திருமணத்துக்காக வாராணசியின் பிரபல காஷி சாட் பண்டார் நிறுவனத்தில் இருந்து விருந்தினர்களுக்காக ஃபாஸ்ட் புட் ஐட்டங்கள் தயாரித்து பரிமாறப்படுகிறது. இதில் டிக்கி, தக்காளி சாட், பாலக் சாட், சன்னா கச்சோரி, குல்ஃபி உள்ளிட்டவை அடங்கும். சில மாதங்களுக்கு முன் காசி சென்ற முகேஷ் அம்பானியின் மனைவி, தானே இந்த உணவு வகைகளை ருசித்துப் பார்த்து இந்த உணவு வகைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.
ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெறவுள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் பகுதியில் உள்ள பிரதான ஹோட்டல்களில் அறைகளுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக பயண, ஹோட்டல் இணையப்பக்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்தை முன்னிட்டு பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் ஜியோ வேல்டு சென்டருக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் 12-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று மும்பை போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அந்த சாலைகள் மும்பை மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சாலைகள் என்பதால் மும்பை போலீசாரின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.