சுட்டீஸ்களின் ஃபேவரைட்டான கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுவதாக இணையத்தில் தகவல்கள் வேகமாகப் பரவி வருகிறது. #RIPCartoonNetwork என்னும் ஹேஷ்டேக் வைரலாகியுள்ளது. Cartoon Network மூடப்படுகிறதா? உண்மை என்ன?
1990களில் குழந்தைகளின் விருப்பமான சேனல் என்றால் அது கார்ட்டூன் நெட்வொர்க்தான். அந்த காலத்தில் சிறுவர்களின் பொழுதுபோக்காக இருந்த ஒரே சேனல். டாம் அண்ட் ஜெர்ரி, பென் 10, டீன் டைட்டன்ஸ், பவர் பஃப் கேர்ள்ஸ், பாப்பாய் எனப் பலரின் ஃபேவரைட் கார்ட்டூன் தொடர்கள் இந்த சேனலில்தான் வெளியாகி குழந்தைகளை டீவி முன்பு கட்டிப்போட்டன.
ஸ்மார்ட் டிவி, யூடியூப் போன்றவை பிரபலமடைந்த பின்பு கார்ட்டூன் நெட்வொர்க் குழந்தைகளிடம் கவர்ச்சியை இழந்தது. இதனால், அவ்வப்போது கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகுவது வழக்கம். பின்பு மறுப்பு வரும்.
இந்நிலையில், தற்போதும் அப்படியொரு செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதனுடன் ‘#RIPCartoonNetwork’ என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் இருக்கிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் வெளியிடவில்லை. இதனால் உண்மையிலேயே கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.
அனிமேஷன் ஒர்க்கர்ஸ் இக்னைடட் என்ற என்ற எக்ஸ் பக்கம், கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறது என்று ஒரு அனிமேஷனை வெளியிட்டுள்ளது. இதிலிருந்துதான் கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுவதாகத் தகவல்கள் இணையத்தில் பரவின. ஆனால், உண்மையில் சேனல் மூடப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
நடந்தது என்னவென்றால், அனிமேஷன் ஒர்க்கர்ஸ் இக்னைடட் என்பவர்கள் தொழில் துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ‘RIPCartoonNetwork’ என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பதிவிட்டிருக்கின்றனர். இது கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுவதாக மாறிவிட்டது.
தற்போது கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.