No menu items!

எச்சரிக்கை: மூளையைத் தின்னும் அமீபா – தமிழ்நாடு உஷார்!

எச்சரிக்கை: மூளையைத் தின்னும் அமீபா – தமிழ்நாடு உஷார்!

மூளையைத் தின்னும் அமீபாவால் கேரளாவில் 3 பேர் பலியான நிலையில், இந்த நோய் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Naegleria fowleri எனப்படும் மூளையைத் தின்னும் அமீபாக்கள் இந்திய மக்களை இப்போது அச்சுறுத்தி வருகிறது. கேரளாவில் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்திருப்பதே இதற்கு காரணம்.

கோழிக்கோட்டைச் சேர்ந்த 14 வயதான மிருதுல், கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தக்‌ஷினா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகியோர் இந்த அமீபா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மூளை திசுக்களை அழித்து மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த அமீபா தொற்று ஏற்பட்டவர்களில் 97%க்கும் அதிகமானோர் இறந்துபோவதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் (சிடிசி) கூறுகிறது. 3 பேர் இந்த அமீபாவால் உயிரிழந்த நிலையில், இதைப்பற்றி மிக அதிகமானோர் வலைதளங்களில் தேடியுள்ளனர்.

மூளையைத் தின்னும் அமீபா என்றால் என்ன?

மூளையைத் தின்னும் அமீபாவை Naegleria fowleri என்று அழைக்கிறார்கள். இந்த அமீபாக்கள் வெப்பமான ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவை என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள ஏரி, ஆறு, நன்கு பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும் ஒரு உயிரியை அமிபா என அழைக்கிறோம். இதுபோன்ற நீரில் மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாக மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் செல்கின்றன. மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு நீர் பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று ஏற்படும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த அமீபாக்கள் மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைத்தொடர்ந்து இந்த தொற்று நிகழ்ந்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டு, மரணம் நிகழ்கிறது. அந்த வகையில்தான் கேரளாவில் இப்போது 3 பேர் Naegleria fowleri அமீபாக்களால் இறந்துள்ளனர்.

அமீபா தாக்கியதற்கான அறிகுறிகள்:

தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி ஆகியவை இந்த அமீபா தாக்கியதற்கான ஆரம்ப அறிகுறிகள். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 7 நாட்களுக்குள் கோமா நிலைக்கு சென்றுவிடுவதாகவும், 18 நாட்களுக்குள் இறந்துவிடுவதாகவும் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கேரளாவில் 3 பேர் உயிர் இழந்த்தைத் தொடர்ந்து இந்நோய் குறித்த பயம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

தமிழக அரசு எச்சரிக்கை:

மூளையைத் தின்னும் அமீபா தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும், அறிகுறிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும். சந்தேகத்திற்குரிய பாதிப்பு உள்ளவர்களை உடனடியாக மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...