பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு சென்னை பெரம்பூர் சடையப்பன் தெருவில் உள்ள தன் வீட்டின் அருகே மர்ம நபர்களால் அரிவாள், பட்டா கத்திகளால் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆர்ம்ஸ்ட்ராங், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் சென்னையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை தொடர்பாக 8 பேர் போலீஸில் சரண் அடைந்துள்ளனர்.
கொலை நடந்தது எப்படி?
பெரம்பூரில் கொலை நடந்த இடத்தில் ஆம்ஸ்ட்ராங் புதிதாக வீடு கட்டி வந்தார். அங்கு தனக்கு இருந்த வீட்டை இடித்து அவர் இந்த வீட்டை கட்டிவந்தார். பெரம்பூரில் வீடு கட்டும் பணிகள் நடப்பதால் தற்காலிகமாக அவர் அயனாவரத்தில் குடி பெயர்ந்துள்ளார். இருப்பினும், தினமும் மாலையில் பெரம்பூருக்கு வந்து தனது புதிய வீடு கட்டுமான பணியை பார்வையிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், நேற்று வீட்டின் கட்டுமான பணியை பார்வையிட பெரம்பூர் பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கு தனது நண்பர்களுடன் அவர் பேசிக்கொண்டு இருந்தபோது உணவு டெலிவரி செய்ய வந்தவர்களைப் போல் வந்த சிலர் அவரை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். ஆம்ஸ்ட்ராங்குடன் பேசிக்கொண்டிருந்த அவரது நண்பர்களும் இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டனர். படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், கிரீம்ஸ் ரோடில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங்க் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரிய பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்துள்ளனர்.
கொலைக்கான காரணம் என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து பலவித யூகங்கள் இருக்கின்றன.
“ஆருத்ரா என்கிற நிதி நிறுவனம், 1,09,255பேரிடம் ரூ.2,438 கோடி வரை ஏமாற்றியது அல்லவா… ஏமாந்த சிலருக்கும் அந்த நிதி நிறுவனத்துக்கும் இடையில் நின்று பணத்தை பெற்றுத் தந்தார் ஆம்ஸ்ட்ராங். இந்த விவகாரத்தில் அவருக்கும் ஆற்காடு சுரேஷ் என்ற ரவுடிக்கும் மோதல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு, பட்டினப்பாக்கம் கடற்கரையில் வைத்து ஒரு கும்பலால் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் இருக்கிறார் என்று அப்போதே கூறப்பட்டது.
தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எட்டு பேர் சரணடைந்துள்ளனர். இவர்களில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும் இருக்கிறார். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்க அவரது தம்பி பாலு சில கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்திருக்கிறார் என்று இப்போது கூறப்படுகிறது.
போலீஸார் சொல்வது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையும் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவும் மூன்று தடவை எச்சரிக்கை விட்டிருந்தது. அதுதொடர்பாக அவரை அலெர்ட்டாக இருக்கும்படியும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரும் அதை தான் பார்த்துக்கொள்வதாக கூறியிருந்தார்.
கடந்த சில தினங்களாக ஆம்ஸ்ட்ராங்கை ஒரு டீம் கண்காணித்து வந்திருக்கிறது. அந்த டீம்தான் இந்தக் கொடூர கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கை அணுகுவது அத்தனை எளிது அல்ல. அவரைச் சுற்றி எப்போதும் ஒரு டீம் இருக்கும். மேலும் அந்த டீமில் உள்ளவர்களும் ஆயுதங்களுடன் தான் இருப்பார்கள். அதையெல்லாம் அறிந்த ஒரு குழுதான் ஆம்ஸ்ட்ராங்கைக் கண்காணித்து, அவரை நேரம் பார்த்து போட்டுத் தள்ளியிருக்கிறது” என்கிறார் அந்த அதிகாரி.