மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி முதல் நபராக டெல்லி சாலையோர வியாபாரி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இவை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
ஜீரோ எஃப்ஐஆர்:
இந்த சட்டங்களில் பல முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. குறிப்பாக பழைய சட்டங்களில் குற்றம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில்தான் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்படும். ஆனால், புதிய சட்டங்கள் மூலம் எந்த காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். இது ஜீரோ எஃப்ஐஆர் என்று சொல்லப்படுகிறது. அதேபோல புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் அந்த வழக்குகளில் முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற அம்சங்கள் இருக்கின்றன.
இன்று அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களின் முக்கிய அம்சங்கள் வருமாறு…
பாரதிய நியாய சன்ஹிதா 2023:
இந்திய தண்டனைச் சட்டம் 1860-க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டத்தில் தேசதுரோகம் என்ற அம்சம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்து கொலை செய்வதுற்கு மரண தண்டனை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023:
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, கால வரையறைக்குள் விசாரணை மற்றும் வாதங்கள் நடத்தப்பட வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்வது இந்த சட்ட்த்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவரின் வருமானம் மற்றும் சொத்துகளை இணைப்பதற்கான புதிய அம்சமும் இந்த சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
பாரதிய சாக்ஷியா 2023:
இந்திய சாட்சிகள் சட்டம் 1972-க்கு மாற்றாக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சிகளில், மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள், மின்னஞ்சல்கள், சர்வர் பதிவுகள், கணினி, மடிக்கணினி, குறுஞ்செய்திகள், இணையதளங்கள், சம்பவம் நடந்த இடத்தின் சான்றுகள், அஞ்சல்கள், சாதனங்களில் உள்ள செய்திகள் ஆகியவை அடங்கும். வழக்கு ஆவணம், முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை மற்றும் தீர்ப்புகள் டிஜிட்டல்மயாக்கப்பட வேண்டும் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காகித ஆவணங்களைப் போலவே டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆவணங்களும் சட்ட அங்கீகாரம், மதிப்பு, அமலாக்கத்தன்மை பெறும்.
முதல் வழக்கு:
இன்று அமலுக்கு வந்த பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டப்பிரிவு 285-ன் கீழ் டெல்லி ரயில் நிலைய மேம்பாலத்தின் நடைமேடையில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை வைத்திருந்த வியாபாரி மீது முதல் வழக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள எஃப்.ஐ.ஆரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் பீகார் மாநிலம் பார்ஹ் பகுதியைச் சேர்ந்த பங்கஜ் குமார். இவர், பிரதான சாலையின் அருகே ஒரு வண்டியில் புகையிலை மற்றும் தண்ணீரை விற்றதாகவும், அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீஸ் அதிகாரி, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள வண்டியை அகற்றுமாறு அவரிடம் கூறியபோது, அகற்றமறுத்து தகராறில் ஈடுபட்டதாகவும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.