டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஹீரோக்களாக உயர்ந்திருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் அவர்களை பணமழையில் குளிப்பாட்டி இருக்கிறது.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மொத்தமாக 125 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்திருக்கிறது பிசிசிஐ. உலகக் கோப்பை போட்டியில் ஆடிய வீர்ர்கள், ஆடாமல் வெளியில் இருந்த ரிசர்வ் வீரர்கள், பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட உடனிருந்த மற்றவர்களுக்கும் இந்த தொகை பிரித்து வழங்கப்பட உள்ளது.
ஆளுக்கு ரூ.5 கோடி:
இதன்படி இந்திய அணியில் ஆடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி ரூபாய் பிரித்து வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் ஆடாமல் இருந்த, அதேநேரத்தில் ரிசர்வ் வீர்ர்களாக அணியுடன் பயணித்த சுப்மான் கில், ரிங்கு சிங் உள்ளிட்ட ரிசர்வ் வீர்ர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. பயிற்சியாளர் ராகுல் திராவிட் உள்ளிட்ட அணியுடன் பயணித்த மற்ற ஊழியர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் பிரித்து வழங்கப்பட உள்ளது.
தனி விமானத்தில் வரும் வீரர்கள்:
உலகக் கோப்பையை வென்ற இந்திய வீர்ர்கள் முதலில் நேற்று பார்படாஸில் இருந்து கிளம்பி, நியூயார்க் சென்று பின்னர் அங்கிருந்து மும்பைக்கு விமானத்தில் வருவதாக இருந்தது. ஆனால் பார்படாஸில் வீசிய சூறாவளியால் நேற்று அவர்கள் கிளம்ப முடியவில்லை. இதனால் இன்று அவர்கள் அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
இந்திய வீர்ர்கள் அனைவரும் நாளை (ஜூலை 2) டெல்லிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் இந்திய கிரிக்கெட் வீர்ர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
517 சிக்சர்கள்:
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 517 சிக்சர்கள் பறக்க விடப்பட்டுள்ளன. இதன்மூலம் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட தொடராக இந்த உலகக் கோப்பை சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2021 உலகக் கோப்பையில் 405 சிக்சர்களை அடித்ததுதான் சாதனையாக இருந்தது.
இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த நிகோலஸ் பூரன், அதிகபட்சமாக 17 சிக்சர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் 16 சிக்சர்களையும், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 15 சிக்சர்களையும் விளாசியுள்ளனர். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 15 சிக்சர்களை அடித்துள்ளார்.
முக்கிய சாதனைகள்:
இந்த உலகக் கோப்பை தொடரில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான சில சாதனைகள்:
லீக் முதல் இறுதி ஆட்டம்வரை ஒரு ஆட்டத்தில்கூட தோற்காமல் ஒரு அணி சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுதான் முதல் முறை. இந்த சாதனையை இந்தியா படைத்துள்ளது.
உலகக் கோப்பை வரலாற்றிலேயே ஒரு ரன்கூட அடிக்காத வீர்ர் தொடர் நாயகன் விருது பெறுவதும் இதுதான் முதல் முறை. இந்த தொடரின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பும்ரா ஒரு ரன்னைக்கூட அடிக்கவில்லை.
உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக விக்கெட்கள் விழ காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். அவர் இந்த தொடரில் 13 கேட்ச்களைப் பிடித்ததுடன், ஒரு ஸ்டம்பிங்க்கும் செய்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக மெய்டன்கள் வீசப்பட்ட உலகக் கோப்பை இதுவாகும். இதில் மொத்தம் 44 மெய்டன்கள் வீசப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2012-ல் 21 மெய்டன்கள் வீசப்பட்டதே சாதனையாக இருந்த்து.