குருசேத்ர போர் நிறைவு நாளில் அசுவத்தமாவுக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் வாக்குவாதம் மோதல் நடக்கிறது. கிருஷ்ணர் அசுவத்தமாவை சபித்து நினைவிழக்கச் செய்கிறார். அடுத்த கலியுகம் வரைக்கும் உடற் காயங்கள் ஆறாமல் நடப்பதை பார்த்துக் கொண்டே வாழவும், உலகைக் காக்க அடுத்து பிறக்கப்போகும் குழந்தையை காப்பாற்றவும் ஆணையிடுகிறார்.
படம் 2800 காலகட்டத்திற்கு செல்கிறது. கங்கையே வறண்டு போன பூமி. ஊழித்தாண்டவம் ஆடி தொழில்நுட்ப காலமும் துருபிடித்துப் போன கட்டம். மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்து வாழ்ந்து வரும் நிலையில் ஒரு தனி கிரகம் மட்டும் வளம் கொழித்து வாழ்ந்து வருகிறது.
அந்த கிரகத்தில் இருக்கும் சுப்ரீம் லீடர் கமல்தான் மனிதர்களை ஆட்டி வைக்கிறார். கலியுக அவதாரத்தில் வரப்போகும் உயிரை சுமக்கும் பெண்களைத் தேடிக்கொண்டிருக்கிறார். அவரிடம் மாட்டிக்கொண்ட தீபிகா படுகோனேவையும் அவர் வயிற்றில் வளரும் கடவுள் அவதாரத்தையும் அசுவத்தமா எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படம்.
பூமியை வஞ்சிக்கும் விஞ்ஞான தொழில் நுட்ப உலகத்தின் விஞ்ஞானமும் நவீனமும் கலந்த மாபியாவாக கமலஹாசன் இரண்டே காட்சிகளில் வந்து படத்திற்கு வலு சேர்க்கிறார்.
அமிதாப்பச்சன் அசுவத்தமாவாக வந்து ஆஜானுபாகுவான தோற்றத்தில் கம்பீரமாக நிற்கிறார். ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் அவரது இளைமை தோற்றத்தை வைத்து உடல் முழுவதும் துணி சுற்றிய தோற்றமே மிரள வைக்கிறது. இடைவேளைக்கு பிறகு அதகளம் பண்ணுகிறார் அமிதாப். அவரது பங்கு படத்தை ரசிக்க வைக்கிறது.
பிரபாஸ் 2800 காலகட்டத்தின் இரும்பு நகரத்தின் இளைமை துள்ளல் இளைஞனாக வருகிறார். அடிப்பதும், ஜாலி பண்ணுவதுமான பாத்திரம். அவர் யார் என்பதை அமிதாப்புடன் மோதும் போது காட்டும் இடம் கைதட்டல். தீபிகா கல்கி அவதாரத்தை கருவில் சுமக்கும் தாயாக வந்து மனதில் நிற்கிறார்.
இவர்களுடன் அர்ஜூனனாக விஜய்தேவரகொண்டா, பிரம்மானந்தம், பசுபதி, ராம்கோபால் வர்மா, எஸ்.எஸ்.ராஜமவுலி, ஷோபனா என்று சில காட்சிகளே வரும் இடங்களில் கூட முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
விஞ்ஞானம் வளர்ந்து பூமியின் பாரம்பரியத்தைக் காப்பாற்றாமல் மனிதன் தன் சுய லாபத்திற்காக பயன்படுத்த அனுபதித்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் ? அங்கும் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் காப்பாற்ற சிலர் என்ன முயற்சி எடுப்பார்கள் என்பதையும் கலந்து செய்த திரைக்கதை நாக் அஸ்வினுக்கு நன்றாக கைக்கொடுத்திருக்கிறது.
காட்சிகள் எல்லாம் பிரமாண்டம். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான செட் என்று வியக்க வைக்கிறது. அமிதாப்பும், பிரபாசும் மோதும் காட்சிகள் நல்ல இடம். ஒவ்வொரு ப்ரேமிலும் படக்குழுவின் உழைப்பு கண்களில் தெரிகிறது. முதல் பாதியில் அரை மணிநேரம் எதுவும் புரியாமல்; நகர்கிறது. இந்த இடம் பலவீனம். பணத்திற்கு பதில் யூனிட் என்கிறார்கள் அது எப்படி பறிமாற்றம் செய்யப்படுகிறது என்பது காட்டப்படவில்லை. இன்னொரு கிரகத்தில் தண்ணீரை எடுத்து மனிதர்கள் எப்படி வசதியாக வாழ்கிறார்கள் என்பதையும் காட்டியிருப்பது சமகால குறியீடாக தெரிகிறது.
வழக்கமாக இந்தியப் படங்களில் வரும் பாடல் காட்சி இதில் வருவது அபத்தம். இசை சந்தோஷ் நாராயணன். கிராபிக்ஸ் குழு கடுமையாக உழைத்திருக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சியில் கமல் அடுத்த பாகத்திற்கு அச்சாரம் போடுவது இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
கல்கி – இதிகாசமும் இயந்திரமும் சேர்ந்து செய்த கலவை.