No menu items!

தோனிதான் காரணம்! – எதைச் சொல்கிறார் அஸ்வின்?

தோனிதான் காரணம்! – எதைச் சொல்கிறார் அஸ்வின்?

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 744 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர் ‘ஐ ஹேவ் தி ஸ்டிரீட்ஸ் – எ குட்டி கிரிக்கெட் ஸ்டோரி’ ( I Have the Streets – A Kutti Cricket Story) என்ற பெயரில் தன் கிரிக்கெட் அனுபவங்கள் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பை சென்னையில் நேற்று அவர் நடத்தினார். அப்போது அஸ்வின் கூறியதாவது:

இந்த புத்தகத்தை எனது வாழ்க்கை வரலாறு என்று அழைக்க வேண்டாம். வாழ்க்கை வரலாற்றை எழுதும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. இந்த புத்தகத்தில் நான் எனது கிரிக்கெட் அனுபவங்கள் சிலவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

நான் இன்று கிரிக்கெட்டில் ஓரளவு வளர்ந்ததற்கு காரணம் ஸ்ட்ரீட் கிரிக்கெட்தான். ஆரம்ப காலங்களில் தெருக்களில் விளையாடித்தான் நான் எனது கிரிக்கெட் திறமையை வளர்த்துக்கொண்டேன். தெருவில் கிரிக்கெட் ஆடும்போது ஆஃப் சைடில் அடிக்கும் ரன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். இப்போது நான் ஆஃப் சைடில் ரன்களைக் குவிப்பதற்கு அது முக்கிய காரணமாக இருக்கிறது. நான் கிரிக்கெட்டில் ஓரளவு வளர்ந்ததில் என் அப்பா ரவிச்சந்திரனுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

2008-ம் ஆண்டுவரை எம்.எஸ்.தோனிக்கு என்னைத் தெரியாது. தோனியின் கவனத்தைக் கவர என்ன செய்வது என்று யோசித்தேன். அவரது விக்கெட்டை வீழ்த்துவதுதான் அதற்கான வழி என்று தெரிந்துகொண்டேன். எப்படியாவது அவரது விக்கெட்டை எடுக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். இந்த சூழலில் அப்போது நடந்த சாலஞ்சர் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவருக்கு பந்துவீசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த போட்டியில் தோனியை போல்ட் ஆக்கி அவரது விக்கெட்டைக் கைப்பற்றினேன். அதன்பிறகு அவரது கவனம் என் மீது விழுந்தது.

தோனி ஒரு வீரருக்கு அவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கொடுக்க மாட்டார். அந்த வீரரால் சிறப்பாக செயல்பட முடியுமா என்று சந்தேகப்படுவார். அதனால் தாமதமாகத்தான் வாய்ப்பு கொடுப்பார். அப்படி கொடுக்கப்பட்ட வாய்ப்பில் அந்த வீரர் சிறப்பாக செயல்பட்டால் தோனியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிவிடுவார். அதன்பிறகு அவ்வளவு லேசில் அந்த வீரரை தோனி கைவிட மாட்டார்.

இது என் விஷயத்த்தில் உண்மையாகிப் போனது. தோனி என் மீது நம்பிக்கை வைத்து பல வாய்ப்புகளை வழங்கினார். சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் டையில் முடிந்தது. வெற்றியாளரை தேர்ந்தெடுக்க சூப்பர் ஓவர் வீசவேண்டி வந்தது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சூப்பர் ஓவரை யார் வீசப் போகிறீர்கள் என்று கேட்டார் தோனி. நான் கையை உயர்த்தினேன்.

நான் கேட்டபடி அவர் எனக்கு சூப்பர் ஓவரை தந்தார். ஆனால் அந்த ஓவரில் நான் 22 ரன்களை விட்டுக்கொடுத்தேன். போட்டியில் நாங்கள் தோற்றோம். தோனி என்னைத் திட்டுவார் என்று நினைத்தேன் ஆனால் தோனி திட்டவில்லை. என்னை அழைத்து, ‘உன்னிடம் திறமை இருக்கிறது. ஆனால் நீ அதை சரியாக பயன்படுத்தவில்லை’ என்று மட்டும் கூறினார்.

அந்த போட்டியில் சொதப்பினாலும் அடுத்த போட்டியில் மிக முக்கியமான 17-வது ஓவரை வீசும் வாய்ப்பை எனக்கு தோனி வழங்கினார். முந்தைய போட்டியில் தோனி சொன்னதைப்போல் என் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி பந்து வீசினேன். எனக்கு அந்த ஓவரில் 2 விக்கெட்கள் கிடைத்தன. அந்த தொடரின் சிறந்த வீரனாகவும் நான் தேர்தெடுக்கப்பட்டேன். அதற்கு தோனியின் அறிவுரையும், ஆதரவும் முக்கிய காரணம்.

இவ்வாறு ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...