சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் யோகாசனத்தில் ஈடுபட்டார்.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 10-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு காஷ்மீரில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
முதலில் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கரையில் மோடி யோகாசனம் செய்வதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அவரால் பொதுவெளியில் யோகாசனம் செய்ய முடியவில்லை. அதற்கு பதிலாக டால் ஏரிக்கரை அருகே உள்ள ஒரு உள்ளரங்கில் யோகாசனம் செய்தார். அவருடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீர்ர்கள் உள்ளிட்ட சுமார் 7 ஆயிரம் பேர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.
யோகா பற்றி உலகத் தலைவர்கள் விசாரிப்பார்கள் – மோடி
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “யோகா தினத்தில் நாட்டு மக்களுக்கும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா செய்து வரும் மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் வெளிநாட்டில் இருக்கும்போது, உலகத் தலைவர்கள் என்னிடம் யோகா பற்றி விவாதிக்கிறார்கள். 10-வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வேளையில், யோகாவை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதேபோல, டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை சிறப்பு யோகா நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்திலும் சர்வதேச யோகா தினம் களைகட்டியது.
யோகா செய்ய கோவைக்கு வந்த ஆளுநர்
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் சேர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி யோகாசனம் செய்தார். முன்னதாக, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆதியோகி முன்பு காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடத்தப்பட்ட நிகழ்வில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) எனப்படும் துணை ராணுவப்படை வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தினர் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த யோகா நமஸ்காரம், நாடி சுத்தி, சாம்பவி முத்ரா உள்ளிட்ட யோக பயிற்சிகளை கற்றுக் கொடுத்தனர்
யோகாசனம் – சில தகவல்கள்:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனத்தைப் பற்றிய சுவாரஸ்யமான நில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்…
யோகாசனம் இந்தியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உடற்பயிற்சி முறை. கி.மு.1500-ல் எழுதப்பட்ட ரிக் வேதத்தில் யோகாசனத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
1890-ம் ஆண்டில் மேற்கத்திய நாடுகளில் யோகாசனம் அறிமுகம் ஆனது. மேற்கத்திய நாடுகளில் யோகாவைப் பரப்பியதில் சுவாமி விவேகானந்தருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 1893-ம் ஆண்டில் சிகாகோவில் நடந்த சமய மாநாட்டில் விவேகானந்தர் பேசிய பிறகு, அங்குள்ளவர்களுக்கு யோகாசனம் மீது மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது.
யோகா பாயிற்சி மேற்கொள்ளும் ஆண்கள் யோகி என்றும், பெண்கள் யோகினி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைப்பதில் யோகாசனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
யோகாசனத்தை முறையாக பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் முன் செய்ய வேண்டும். தவறான முறையில் யோகாசனம் செய்தால் உடலில் காயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு, சர்க்கரை, ரத்தக் கொதிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் இதய நோய் வராமல் தடுக்கலாம்.
உலகளாவிய அளவில் 30 கோடிக்கும் மேற்பட்டோர் யோகாசனங்களைச் செய்து வருகிறார்கள்.
8.7 சதவீதம் அமெரிக்கர்கள் யோகா பாயிற்சி செய்கிறார்கள்.
30 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் யோகாசனம் மிகப் பிரபலமாக உள்ளது.
யோகாசனத்தை தீவிரமாகச் செய்தால் 3 மாதாங்களில் 3.5 கிலோ வரை எடையைக் குறைக்கலாம்.
சர்வதேச அளவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகாசனப் பயிற்சி மையங்கள் உள்ளன.
ஆண்களை விட பெண்களே அதிக அளவில் யோகாசனத்தில் ஈடுபடுகிறார்கள். யோகாசனம் செய்பவர்களில் சுமார் 72 சதவீதம் பேர் பெண்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு எதிரானது என்ற கருத்தால் மலேசியாவில் யோகாசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் சுமார் அரை மணிநேரம் யோகாசனம் செய்த பிறகு, 5 நிமிடங்களாவது ஓய்வெடுப்பது அவசியம்.
நம் உடலில் உள்ள 8 சக்தி மையங்களுக்கு யோகாசனம் புத்துணர்ச்சி அளிக்கிறது.
பாரம்பரிய முறையில் 84 வகையான யோகாசனங்கள் உள்ளன.
மிக நீண்ட நேரம் யோகா செய்தவர் என்ற கின்னஸ் சாதனையைச் செய்தவர் கனடா நாட்டின் யாஸ்மின் ஃபுகாடோவ்ஸ்கா காவ். இவர் தொடர்ந்து 32 மணி நேரங்களில் 1,008 வகையான யோகாசனங்களைச் செய்து இந்த சாதனையை படைத்துள்ளார்.