ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி, தினமும் தன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் சில யோகாசனங்களை அனிமேஷன் படத்துடன் போட்டு விளக்கி வருகிறார். பிரதமர் மோடியையே மாடலாக வைத்து அந்த அனிமேஷன் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு மோடி கற்றுக்கொடுத்த சில யோகாசனங்கள்…
பத்ராசனம்:
‘பத்ர’ என்ற வடமொழி சொல்லுக்கு ‘புனிதமான’ என்றும் ‘கருணையுள்ள’ என்றும் பொருள் உண்டு. பத்ராசனம் என்றால் புனிதமான ஆசனம், கருணையான ஆசனம்.
பத்ராசனம் மூலாதார சக்கரத்தை தூண்டி படைப்பாற்றல் திறனை வளர்க்கிறது. மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர உதவுகிறது. குறிப்பாக, சிறுநீரகம், கர்ப்பப்பை ஆற்றல்களை வளப்படுத்தி மறுஉறுபத்தியை ஊக்குவிக்கிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்ப்பதுடன் ஆண்களின் விந்தணுக்கள் பெருக்கத்தை தூண்டுவதால் இது கருணையுள்ள ஆசனம் என்று கூறப்படுகிறது.
செய்வது எப்படி?
1 தரையில் உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக நீட்டி கைகளை பக்கவாட்டில் வைக்க வேண்டும்.
2 இரண்டு கால்களையும் பக்கவாட்டில் மடக்க வேண்டும். உள்ளங்கால் பாதங்கள், இரண்டும் ஒன்றுடன், ஒன்று சேர்ந்தவாறு கால்களை மடக்கி வைக்க வேண்டும்.
3 இரண்டு கால்களையும் (கைகளை கும்பிடுவது) போல் பரப்பி வைக்க வேண்டும்.
4 இரண்டு கைவிரல்களை கோர்த்தவாறு கூப்பி வைத்த கால்விரல்களை பிடித்துக் கொள்ள வேண்டும்.
5 முதுகை நிமிர்த்தி நேராக உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
6 இரண்டு கால் தொடைகளையும் மேலும், கீழும் வண்ணத்துப்பூச்சி சிறகை ஆட்டி பறப்பது போல் ஆட்டிக் கொண்டே தரையை தொட முயற்சிக்கவும்.
எச்சரிக்கை:
கர்ப்பிணி பெண்கள் நெற்றியை தரையில் வைக்கக் கூடாது. கைகளால் கால்களை பற்றி அமர்ந்தாலே போதுமானது. தீவிர முட்டி வலி, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
பாதஹஸ்தாசனம்
இந்த ஆசனம் செய்து வந்தால் வயிற்று உள் உறுப்புகள் நன்கு இயங்கும். முதுகுவலி வராது. முதுகுத்தண்டு திடப்படும். அதிக எடை, தொப்பை குறையும்.
செய்வது எப்படி?
ஒரே நேர்கோட்டில் நேராக நிற்க வேண்டும். குதிகால்கள் இணைந்து இருக்க வேண்டும். மூச்சை நன்றாக உள் இழுத்துக்கொண்டு, இரு கைகளையும் பக்கவாட்டில் தோள் மட்டத்துக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும். உள்ளங்கை தரையை நோக்கி இருக்க வேண்டும். கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்த வேண்டும்.மூச்சை வெளியேற்றியபடியே, உடம்பை கீழ்நோக்கி வளைத்து, நெற்றி முழங்காலை தொட, கைகளை பாதங்களுக்கு பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இது ஆசனத்தின் உச்ச நிலை. பின், இதுவரை செய்தது போலவே, படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பலாம். இயலும் வரை செய்யலாம்.
அர்த்த சக்ராசனம்
உடம்பை சக்கரம் போல பின்பக்கமாக வளைக்கும் ஆசனம் ‘சக்ராசனம்’. அதில் பாதி அளவுக்கு வளைப்பதால் இதற்கு ‘அர்த்த சக்ராசனம்’ என்ற பெயர்.
செய்வது எப்படி?
- கால்களை நேராக வைத்து நிமிர்ந்து நில்லுங்கள்.
- கைகளை இடுப்பின் மீது வையுங்கள்.
- மூச்சை உள்ளே இழுத்தபடி, பின்புறம் வளையுங்கள்
- வளைந்த பிறகு மூச்சை மெதுவாக விட்டுவிட்டு, அந்த நிலையிலேயே சிறிது நேரம் இருக்கவும்.
- வளைந்த நிலையிலேயே மூச்சை மெல்ல இழுத்துவிடலாம்.
- மூச்சை வெளியேற்றியபடி மேலே வரவும்.
எச்சரிக்கை:
இடுப்பு, முதுகில் பெரிய பிரச்சினை கொண்டவர்களும் உயர் ரத்தஅழுத்தம், மூளை தொடர்பான வியாதிகள் கொண்டவர்களும் இதைச் செய்ய வேண்டாம். பெப்டிக் அல்சர், குடலிறக்க நோய் கொண்டவர்கள் இதைத் தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்கள் இதைச் செய்ய வேண்டாம்.
திரிகோணாசனம்:
செய்வது எப்படி?
1.திரிகோணாசனம் செய்வதற்கு முதலில் நாம் இரு கால்களையும் பிரித்து நேராக நிற்க வேண்டும். இப்போது 2 கால்களிலும் உங்கள் உடல் எடை சமமாக இருத்தல் வேண்டும்.
2.அடுத்தாக இடக் கையை மெதுவாக மேலே உயர்த்தி, வலக் கையால் கால்களை தொட வேண்டும். கைகளும் நேர்கோட்டில் வருமாறு மெதுவாக தரையில்இறக்க வேண்டும்.
3.பின் மறுபுறத்தில் இருந்து அதே போன்று செய்து இடக் கையை கீழே எடுத்து, வலக் கையை மேலே எடுக்க வேண்டும். இவ்வாறு முதல் இரண்டு நாட்களுக்கு 25 முதல் 50 வரை செய்ய ஆரம்பித்து பின் தினமும் 100 முறை செய்யலாம்.