தமிழ் சினிமாவில் பெரிய தலைகள் பலர் முயன்றும் முடியாத ஒரு ப்ராஜெக்ட்டாக இருந்த படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக எடுக்க புரட்சித் தலைவரும், மிகப்பெரும் கமர்ஷியல் ஹீரோவுமான எம்.ஜி.ஆரால் கூட எடுக்க முடியாமல் போனது. ஒரு வழியாக மணிரத்னம் ‘பொன்னியின் செல்வனை’ திரைப்படமாக எடுத்து இரண்டு பாகங்களாக வெளியிட்டு, தனது மெட்ராஸ் டாக்கீஸ் கல்லாவை நிரப்பி கொண்டார்.
இதே போன்ற பிரச்சினையைச் சந்தித்து கொண்டிருக்கும் ஒரு கதை ‘குற்றப்பரம்பரை. முதலில் பாரதிராஜா, அடுத்து பாலா, இப்போது சசிகுமார். இவர்கள் மூவராலும் ‘குற்றப்பரம்பரையை’ எடுக்க முடியாமல் போயிருக்கிறது. என்ன காரணம்? மூவராலும் ஏன் முடியாமல் போனது?
அதென்ன குற்றப்பரம்பரை?
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி நடைபெற்ற போது, ஒரு சில குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் ‘குற்றப்பரம்பர சட்டம்’. 1871-ல் அக்டோபர் 12-ம் தேதி இந்த சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டுவந்தது. பிறகு சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டு இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டம் பல திருத்தங்களுக்கு உள்ளாகி, இறுதியில் குற்றப்பரம்பரைச் சட்டம் [1924 ஆண்டு 6-வது திருத்தம்] என இந்தியா முழுவதும் ஒரே சட்டமாக அமல் படுத்தப்பட்டது.
இந்த சட்டம் சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையாக பாய்ந்த நிலையில், 1920-ம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் போராட்டம் வெடித்தது. கைரேகைச் சட்டத்தை எதிர்த்து அதாவது குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களில் ஆயுதமின்றி போராடியவர்களை அடக்குவதற்காக ஆங்கிலேய அரசு துப்பாக்கிச்சூட்டை நடத்தியது. இதில் ‘மாயாக்காள்’ என்ற பெண் உட்பட மொத்தம் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த போராட்டம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ரத்தினகுமார் பல தரவுகளைச் சேகரித்து வைத்திருந்தார். இந்த தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கதைதான் ‘குற்றப்பரம்பரை’. தனது ஆஸ்தான எழுத்தாளர், வசனகர்த்தா ரத்தினகுமார் கூறிய கதையை அடிப்படையாக வைத்து குற்றப்பரம்பரை எடுக்க முதன் முதலாக கிளம்பியவர் ’இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.
இதைத் தொடர்ந்து, தேனியில் தொடக்கவிழா நடந்தது. அடுத்து உசிலம்பட்டி அருகில் இருக்கும் கிராமமான பெருங்காமநல்லூரில் குற்றப்பரம்பரை பட பூஜையும் கோலாகலமாக நடந்தது. ஆனால் பாரதிராஜா, ‘குற்றப்பரம்பரை’ எனது கனவுப்படம் என்று சொன்னாரே தவிர, அதை திரைப்படமாக்கும் முயற்சியில் அவரால் அடுத்தக்கட்டத்திற்கு நகர முடியவில்லை.
ஒரு கட்டத்தில் பாரதிராஜாவுக்கே தனது கனவு திரைப்படம் பற்றிய வேகம் குறைந்துப்போனது. இந்த சூழலில்தான் பிரபல எழுத்தாளர் வேல ராம மூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து ‘குற்றப்பரம்பரை’யை இயக்கப் போவதாக இயக்குநர் பாலா அறிவித்தார்.
அதுவரையில் இந்த டைட்டிலை கிடப்பில் போட்டிருந்த பாரதிராஜா, அதெப்படி பாலா குற்றப்பரம்பரையை எடுக்கலாம் என கர்ஜித்தார். இதனால் 2016-ல் பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால் பாரதிராஜாவைப் போல பாலாவும் கொஞ்ச நாட்களில் குற்றப்பரம்பரையை மறந்து போனார்.
இப்படியொரு பின்னணியைக் கொண்ட ‘குற்றப்பரம்பரை’ கதையை வெப் சிரீஸ் ஆக எடுக்க தயாரானார் சசிகுமார். இதை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்காக பாரதிராஜாவிடம் இருக்கும் ‘குற்றப்பரம்பரை’ பெயரை நாங்கள் பயன்படுத்தலாமா என வேல்ராஜ், சசிகுமார் தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் முரண்டுப் பிடித்தாலும், தனது வயது ஆகிவிட்ட காரணத்தாலும் இனி இயக்குவது என்பது எந்தளவிற்கு சாத்தியம் என தெரியாததாலும் ‘குற்றப்பரம்பரை’ பெயரை விட்டுக்கொடுத்தார் பாரதிராஜா.இதனால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘குற்றப்பரம்பரை’ எடுக்க தயாரானார்கள். இதில் மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சத்யராஜ், பாகுபலி புகழ் ராணா டகுபதி, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் உட்பட பலர் நடிக்க இருப்பது முடிவானது.
சசிகுமார் மீண்டும் இயக்குநராக களமிறங்குகிறார் என்ற எதிர்பார்பு உண்டானது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அக்டோபரில் ஷூட்டிங் தொடங்கவில்லை. அடுத்து நவம்பர் என்றார்கள். அப்போது படப்பிடிப்பு தொடங்கவில்லை.
இன்றைய தேதி வரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. மீண்டும் என்ன பஞ்சாயத்து?
குற்றப்பரம்பரையை இணையத்தொடராக எடுக்கப் போகிறோம் என வேல்ராஜ் தரப்பில் சொல்லப்பட்டதுமே, பேராசிரியர் ரத்தினகுமார் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார். இதனால் முதலில் அவரை சமாதானம் செய்துவிட்டு வாருங்கள், அதன்பிறகு மற்றவற்றைப் பேசி கொள்ளலாம் என சசிகுமார் கூறிவிட்டார்.
இதனால் ரத்தினகுமாரை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டிய சூழலுக்கு தயாரிப்பாளர் தரப்பு தள்ளப்பட்டது. ஆனால் ரத்தினகுமார் தரப்பில் இருந்து ஒன்றும் நடக்கவில்லை. ஏழெட்டு மாதங்கள் ஆன போதிலும் அந்த வழக்கில் முன்னேற்றம் இல்லை.
இப்படி பஞ்சாயத்து இருப்பதை கொஞ்சம் தாமதமாகதான புரிந்து கொண்டிருக்கிறது டிஸ்னி+ ஹாட்ஸ்டார். இந்த ஒடிடி நிறுவனம்தான் குற்றப்பரம்பரையை தயாரித்து ஸ்ட்ரிமிங் செய்ய திட்டமிட்டு இருந்தது. குற்றப்பரம்பரை எடுப்பது அவ்வளவு சுலபமில்லை என்ற முடிவுக்கு வந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தயாரிப்பிலிருந்து ஒதுங்கிவிட்டதாம்.
இதனால் வேல்ராஜ் தரப்பிலிருந்து பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறுகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ஒடிடி தரப்பு மசிந்து கொடுக்கவே இல்லையாம்.
இதனால் குற்றப்பரம்பரை என்பது மீண்டும் ஒரு கனவுப் படமாகவே நீடிக்கிறது. மாயாக்காளின் அருள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது போல…