குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களில் ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரலாம் என கூறப்படுவதால், குவைத்தில் பணியாற்றுபவர்கள் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்தது எப்படி?
குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் மேங்காஃப் பகுதியில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில், குவைத் நேரப்படி நேற்று 4.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள ஒரு சமையலறையில் தீப்பிடித்து, பின்னர் தீ மளமளவென கட்டிடத்தின் பல பகுதிகளுக்கும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டபோது, ஒரே நிறுவனத்தில்தான் வேலை செய்யும் 160 தொழிலாளர்கள் கட்டடத்தில் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் 53 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் தீக்காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில், அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். அவர்களில் தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர்களும் இருந்துள்ளனர். அடையாளம் காணப்பட்டுள்ள உடல்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாடு, கேரளாவில் இருந்து குவைத்தில் வேலை பார்ப்பவர்கள் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
தீ விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த நபர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் 5ஆவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென அருகில் இருந்தவர்கள் கதவை தட்டி அழைத்தார்கள். நான் வெளியே வந்து பார்த்த போது வெறும் கரும்புகையாக இருந்தது. என் பார்வைக்கு ஏதும் தெரியவில்லை, என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால், என் அறையின் கதவை தட்டியவர்கள் உயிர் பிழைக்க வேறு பகுதிக்கு ஓடிவிட்டார்கள். அதனால், அருகே இருந்த அறையில் இருந்தவர்களது கதவை நாங்கள் தட்டவில்லை. எங்கள் வீட்டின் சன்னல் சற்று பெரிதாக இருந்ததால் அதன் வழியாக எங்கள் அறையில் தங்கியிருந்த 4 பேரும் தப்பித்துவிட்டோம். ஆனால், எங்கள் அறையின் அருகே இருந்தவர்களின் அறையில் உள்ள ஜன்னல் மிகச்சிறியது, அதனால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தில் இருந்து மூன்று கட்டிடடங்கள் தள்ளி தங்கியுள்ள நௌஃபல் என்பவர் செய்தி நிறுவனங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் மூன்று கட்டிடங்கள் தள்ளி தங்கியுள்ளேன். கட்டிடத்தின் ஜன்னல்களில் இருந்து அடர்ந்த கரும் புகை வெளியேறியதை காண முடிந்தது. விபத்துக்குள்ளான கட்டிடத்தில் இருந்தவர்களும் நாங்களும் ஒரே எண்ணெய் நிறுவனத்தில்தான் வேலை செய்கிறோம். கட்டடத்தில் இருந்த பெரும்பாலானோர் இந்தியர்கள். குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த நேரத்தில் கட்டிடத்தில் யார் இருந்தார்கள், யார் இல்லை என்று சொல்வது கடினம். எண்ணெய் நிறுவனத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஷிப்ட் முறையில் வேலை செய்கிறார்கள். அதிகாலை 1.30 மணியளவில் வேலைக்குச் சென்ற ஏழு பேர் கொண்ட குழு உள்ளது. அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள், அவர்கள் முழு அதிர்ச்சியில் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் வசிக்கும் தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்த மணிகண்டன், விபத்து குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “குவைத்தில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், பெரும்பாலானோர் இரவு நேரப் பணிக்கு செல்வார்கள். வேலையை முடித்துவிட்டு அதிகாலை குடியிருப்புக்கு திரும்பி வந்தவர்களில் சிலர் உணவு சமைத்துள்ளனர். கட்டிடத்தின் அடித்தளத்தில் சமையலறை உள்ளது. அப்போது சமையலறையில் பற்றிய தீ, கட்டுக்கடங்காமல் மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது, அதிகாலை நேரம் என்பதால் அறைகளில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மூச்சுத்திணறி இறந்துள்ளனர். சிலர் தப்பிக்க நினைத்து மாடிகளில் இருந்து குதித்ததால் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்” என்று கூறினார் மணிகண்டன்.
தமிழர்கள் ஐந்து பேர் உயிரிழப்பு
தீ விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்றுள்ள கேரள முஸ்லிம் கலாசார மையத்தின் (கேஎம்சிசி) குவைத் பிரிவுத் தலைவர் ஷர்புதீன் கோனெட்டு, “தீயில் இறந்த அல்லது காயமடைந்தவர்களின் உடல்களை நாங்கள் இன்னும் தேடி வருகிறோம். அடித்தளத்தில் இருந்து ஆறு மாடி கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் பல உடல்களை அடையாளம் காண முடியவில்லை. தற்போதைய நிலவரப்படி, குறைந்தது 11 இந்தியர்கள் இறந்துள்ளனர் மற்றும் இருவர் மோசமான நிலையில் உள்ளனர். உடல்களை அடையாளம் காண சிலருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டியிருக்கலாம், ”என்று கூறியுள்ளார்.
தீ விபத்தில் ஐந்து தமிழர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள தமிழ் சங்கங்கள் மூலமாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று அயலகத் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தெரிவித்துள்ளார். “அதிகாரபூர்வமாக வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமிருந்து தகவல்கள் தமிழக அரசுக்கு கிடைக்கவில்லை. தமிழ் சங்கங்கள் மூலமாக கிடைத்த தகவல் படி, ராம கருப்பண்ணன், வீராசாமி மாரியப்பன், ரிச்சர்ட் ராய், முகமது ஷெரிஃப், சின்னதுரை கிருஷ்ணன் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
உயிரிழந்துள்ள ராம கருப்பண்ணன் ராமநாதபுரம் அடுத்த தென்னவனூர் பகுதியை சேர்ந்தவர். குவைத்தில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
முகமது ஷெரிஃப், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம், தியாகி இப்ராஹீம் தெருவை சேர்ந்தவர், இவர் கடந்த 14 வருடமாக மெட்டீரியல் ஸ்டீல்சில்வர் கம்பெனியில் போர்மேனாக பணியாற்றி வந்துள்ளார். தீ விபத்து குறித்த தகவல் தெரிந்தது முதல் முகமது ஷெரிப்பை தொடர்புகொள்ள அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் முயன்றுள்ளனர். ஆனால், அவரிடமிருந்து பதில் ஏதும் கிடைக்காததால், அவரது நிலை என்னவென்று தெரியாமல், குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில், தற்போது பேரடியாக அவர் மரணச் செய்தி வந்துள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.
குவைத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த உமருதீன் ஷமீர் (வயது 29) தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர். குவைத்தில் இந்தியருக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து வந்துள்ளார். ஒன்பது மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. அதற்காக கேரளா வந்து திரும்பியவர் இப்போது உயிரோடு இல்லை. தகவலறிந்து உமருதீன் ஷமீரின் மனைவி, பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
குவைத் சென்ற மத்திய அமைச்சர்
விபத்து குறித்து இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.” என்று கூறியுள்ளார்.
விபத்து குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” குவைத் நிதி அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யாவிடம் தீ விபத்து குறித்து பேசினேன். குவைத் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொண்டேன். தீ விபத்து குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு, இதற்கு பொறுப்பு யார் என்பது கண்டறியப்படும் என உறுதி அளித்தார். உயிர் இழந்தவர்களின் உடல்களை விரைவாக அனுப்பி வைக்க கோரினேன். காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சென்ற பிறகு நிலைமை குறித்து மீண்டும் விசாரிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இன்று காலை டெல்லியிலிருந்து குவைத் புறப்பட்டு செல்லும் வழியில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நிறுவனத்துக்கு பேட்டியளித்த, மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், “உயிரிழந்தவர்கள் பலரது உடல்கள் முழுவதும் கருகியுள்ளன. எனவே, டிஎன்ஏ சோதனை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்கள் அடையாளம் காணப்பட்ட உடன், உடல்களை இந்தியா கொண்டு வர இந்திய விமானப்படை தயாராக இருக்கிறது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 42 அல்லது 43 பேர் இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்துள்ளவர்கள் குவைத்தின் அல்-அதான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குவைத்துக்கான இந்தியத் தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, மருத்துவமனைகளுக்குச் சென்று காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான ஹெல்ப்லைன் எண்ணையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. +965-65505246 என்ற எண்ணை, பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், உதவிக்காகவும் மக்கள் அழைக்கலாம். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
எச்சரித்தும் கண்டுகொள்ளாத குவைத்
குவைத் உள்துறை அமைச்சர் ஃபஹத் யூசுப் அல் சபா சம்பவ இடத்தை பார்வையிட்டார். விபத்துக்கான காரணம் குறித்து, “கட்டிட உரிமையாளர்களின் பேராசையே இந்த சம்பவத்திற்கு காரணம்” என்று அவர் கூறியுள்ளார். குவைத் ஊடகங்கள் தெரிவித்துள்ளபடி, இந்த கட்டடத்தில் அளவுக்கு அதிகமான மக்கள், கடும் நெருக்கடியில் வசித்து வந்துள்ளனர். குடியிருப்பில் உள்ள சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குவைத் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான். குறிப்பாக கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்புத் துறைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையே குவைத் சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், குவைத்தில் புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் தரம் மிக மோசமாக இருப்பதையே இந்த விபத்து காட்டுகிறது. குவைத் தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்து மனித உரிமை அமைப்புகள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.