பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை வரும் 9-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவையில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த துறையின் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதில் குழப்பம் நிலவுகிறது. கூட்டணி கட்சிகள் தங்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கச் சொல்லி கேட்டு வருகிறார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் இன்று காலை நடந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்களும், புதிய எம்பிக்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற தலைவர் மற்றும் மக்களவைத் தலைவராக நரேந்திர மோடியின் பெயரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிமொழிந்தார். இதன்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பேசி பிரதமராக மோடியை தேர்வு செய்வதற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
பிரதமராக நரேந்திர மோடி வரும் 9-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த முறை பாஜகவுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணி கட்சிகள் முக்கிய பதவிகளை எதிர்ப்பார்ப்பதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயக் கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்த பெரிய கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளது. அக்ட்சிக்கு 16 எம்பிக்கள் உள்ளனர். சபாநாயகர் பதவியுடன், மத்திய அரசில் 5 அமைச்சர் பதவிகளையும் அக்கட்சி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. கடந்த 1998-ம் ஆண்டுமுதல் 2002-ம் ஆண்டுவரை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பாலயோகி மக்களவை சபாநாயகராக இருந்தார். அதேபோல் இப்போதும் தங்களுக்கு சபாநாயகர் பதவியை வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
சபாநாயகர் பதவியைத் தவிர நகர்புற மேம்பாடு, சாலைப் போக்குவரத்து, ஜல் சக்தி, கிராமப்புற மேற்பாடு உள்ளிட்ட பதவிகளையும், நிதித்துறையில் இணை அமைச்சர் பதவியையும் தெலுங்கு தேசம் கட்சி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தங்களுக்கும் 2 கேபினட் அமைச்சர்கள் உள்ளிட்ட 5 அமைச்சர் பதவிகளை தர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். துறைகளைப் பொறுத்தவரை, ரயில்வே துறையைப் பெறுவதில் ஐக்கிய ஜனதா தளம் குறிப்பாக உள்ளது. அக்கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் ஏற்கெனவே ரயில்வே அமைச்சராக இருந்தவர் என்பதால் அப்பதவியை தனது கட்சிக்கு வாங்கிக் கொடுக்க விரும்புகிறார். அதைத்தவிர கிராமப்புற மேம்பாடு, ஜல்சக்தி துறைகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கோரிக்கையாக உள்ளது. இந்த துறைகளை ஒதுக்க முடியாவிட்டால் விவசாயம், சாலை போக்குவரத்து ஆகிய துறைகளில் ஏதாவது ஒன்றை அவர்கள் கேட்கிறார்கள்.
ஐக்கிய ஜனதா தளத்தை போலவே மதச்சார்பற்ற ஜனதா தளமும் விவசாயத் துறை அமைச்சர் பதவியை தங்களுக்கு ஒதுக்கச் சொல்லி கேட்கிறது. சிராக் பாஸ்வானின் கட்சியும், சிவசேனாவும்கூட முக்கிய துறைகளை கேட்டு வருகின்றன.
முக்கிய துறைகளின் அமைச்சர் பதவிகளைக் கேட்டு கூட்டணி கட்சிகள் நச்சரிப்பதால் பாஜக மேலிடம் டென்ஷனில் இருக்கிறது. நிதி, பாதுகாப்பு, உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை ஆகிய 4 துறைகளை எந்தக் கட்சிக்கும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இதைக் கூட்டணி கட்சிகளிடமும் தெரிவித்துள்ளது.