No menu items!

அண்ணாமலைக்கு நோ சொன்ன பிரதமர்! – மிஸ் ரகசியா

அண்ணாமலைக்கு நோ சொன்ன பிரதமர்! – மிஸ் ரகசியா

“பேசினாலும் செய்தியாகுது, பேசாம தியானம் பண்ணாலும் தலைப்புச் செய்தியாகுது. பிரதமருக்கு நல்ல ராசி” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“பிரதமரோட கன்னியாகுமரி தியானத்தைப் பத்தி சொல்றியா. தமிழக பாஜக தலைவர்கள் யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம்னு பிரதமர் சொல்லிட்டாராமே.”

”ஆமாம். போட்டோகிராஃபர்கள், வீடியோ கிராஃபர்கள் மட்டும் வந்தா போதும்னு சொல்லிட்டாராம்” சிரித்தாள் ரகசியா.

”பிரதமரை வச்சே ஜோக்கடிக்கிறியா? விஷயத்தை சொல்லு”

“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், மத்திய அமைச்சர் எல்.முருகனும் பிரதமரை சந்திக்கறதுக்காக கன்னியாகுமரியில ரூம் போட்டிருந்தாங்க. ஆனா தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்னு பிரதமர் உறுதியா சொல்லிட்டதால அவங்க ரூமை கேன்சல் பண்ணிட்டாங்க. பிரதமர் பார்க்க வேணாம்னு சொன்னதால அண்ணாமலை அமித் ஷாவை பார்க்க திருமயத்துக்கு போயிட்டார். உள்ளூர் பிரமுகரான பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் எப்படியாவது பிரதமரைப் பார்த்திடலாம்னு சுற்றுலா மாளிகைக்கு போயிருக்கார். ஆனால் பிரதமரோட பாதுகாப்பு அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பி இருக்காங்க.”

“பொன்னாருக்கே இந்த நிலைன்னா பிரதமர் வருகையால கன்னியாகுமரில பொதுமக்களுக்கு கெடுபிடிகள் அதிகமா இருந்திருக்குமே?”

‘’ பிரதமர் வரார்னு கடைகளை மூடச் சொல்லி இருந்தாங்க. ஆனா கடைகள் மூடப்பட்டிருந்ததை பார்த்த பிரதமர், தனக்காக கடைகள் மூடப்பட்டிருந்தா.. அதை திறக்கணும்னு உத்தரவு போட்டிருக்கார்”

“இது நம்புற மாதிரியா இருக்கு. செட்டப் மாதிரில தெரியுது? அங்கருந்து வரும்போதே அங்க கடைகளையெல்லாம் மூடக் கூடாதுனு சொல்லியிருக்க வேண்டியதுதானே?

“அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். பிரதமர் சொன்னதால அடுத்த நாள் கடைகளை திறக்க அனுமதிச்சிருக்காங்க. விவேகானந்தர் பாறைக்குகூட சில கட்டுப்பாடுகளோட சுற்றுலா பயணிகளை அனுமதிச்சாங்க. இருந்தாலும் பிரதமர் வருகையால கெடுபிடிகள் இருக்கும்னு சுற்றுலாப் பயணிகள் பலரும் தங்கள் பயணத்தை தள்ளி வச்சதால கன்னியாகுமரியில அவ்வளவா கூட்டம் இல்லை.”

“பிரதமர் எப்படி தியானம் பண்றாராம்?”

“மொத்தம் 45 மணி நேர தியானம். அஞ்சு மணி நேரத்துக்கு ஒரு முறை ரெஸ்ட்னு நியூஸ் வருது. வெறும் பழச்சாறு, இளநீர் மட்டும் குடிக்கிறாராம். வேறு எதுவும் சாப்பிடலையாம்?”

“சூரிய நமஸ்காரம் செஞ்சாரு போல”

”ஆமா. அந்த போட்டோவை போட்டு உதயசூரியனை வணங்கிய மோடினு உடன்பிறப்புகள் சோஷியல் மீடியாவும் ட்ரெண்ட் பண்ணிட்டாங்க”

“ஆரம்பத்துல பிரதமரோட தியானத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்பு காட்டின திமுக, பிறகு அமைதியாகிடுச்சே?”

“இதுக்கு எதிரா வழக்கு போட்டா நிக்காது. அதோட மோடிக்கு நாமளே விளம்பரம் கொடுக்கற மாதிரி இருக்கும்னு திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பா கட்சித் தலைமைக்கு அட்வைஸ் கொடுத்திருக்காங்க. அதனாலதான் திமுக சைட்ல இருந்து பிரதமரோட தியானத்துக்கு பெரிய அளவுல எதிர்ப்பு இல்லை.”

“அண்ணாமலை கூட்டின பாஜக நிர்வாகிகள் கூட்டம் பத்தி ஏதாவது நியூஸ் இருக்கா?”

“அந்த கூட்டத்துக்கு வராம பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் போன்ற மூத்த பாஜக தலைவர்கள் புறக்கணிச்சிருக்காங்க. கூட்டத்தில் பணப்பட்டுவாடா விஷயம் பெரிய சர்ச்சையா வெடிக்கும்னு அண்ணாமலை கணக்கு போட்டிருந்தார். அதனால அதைப்பத்தியெல்லாம் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு பேசலாம்னு சொல்லி இருக்கார். ஒவ்வொரு மாவட்டமா கூப்பிட்டு இதைப் பத்தி விவாதிக்கலாம்னும் அண்ணாமலை சொல்லி இருக்கார். கூட்டத்தில் கலந்துகிட்ட நிர்வாகிகள் இதை ரசிக்கல. எல்லா விஷயத்தையும் ஓப்பனா பேசற மாதிரி இதையும் பேசிட வேண்டியதுதானேன்னு அவங்களுக்குள்ள பேசி இருக்காங்க.”

“தேர்தல் பிரச்சாரத்துல பெருசா கலந்துக்காம இருந்த மன்மோகன் சிங், கடைசி நாள்ல களத்துல குதிச்சிருக்காரே?”

“கடைசி கட்ட தேர்தல்ல, பஞ்சாப் மாநிலத்துல 12 தொகுதிகளில் தேர்தல் நடக்குது. தன்னோட சொந்த மாநிலத்துல தேர்தல் நடக்கறதால மன்மோகன் சிங் களத்தில் குதிச்சிருக்கார். தன்னோட எக்ஸ் பக்கத்தில் மோடிக்கு எதிரா கடுமையான வார்த்தைகள்ல அறிக்கை வெளியிட்டிருக்கார். குறிப்பா பிரதமர் பதவிக்குரிய மாண்பை நரேந்திர மோடி குறைத்து விட்டார். குறிப்பிட்ட சமுதாயத்தை தரம் தாழ்த்தி பேசுகிறார்னு அந்த அறிக்கையில மன்மோகன் சிங் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் கட்சி இதை பெரிய அளவில் மீடியாவில் சுற்றுக்கு விட்டிருக்கு. பஞ்சாப் சீக்கிய மக்களோட வாக்குகளை கவரை கடைசி அஸ்திரமா காங்கிரஸ் கட்சி இதை பயன்படுத்தி இருக்கு.”

“ஏ.சி.சண்முகம் ரொம்ப கோபமா இருக்கறதா கேள்விப்பட்டேனே?”

“தேர்தல் செலவுக்காக தான் கொடுத்த பணத்தை சிலர் பதுக்கிட்டதா அவர் சந்தேகப்படறாரு. அதனால, ‘நான் ஜெயிச்சுட்டேன்னா அந்த பணம் போனா போகட்டும்னு விட்டுடுவேன். ஆனா தோத்தா இதை பெரிய விஷயமாக்குவேன். என்னிடம் எத்தனை லட்சம் பணம் வாங்கிட்டு எனக்கு எதிராவே செயல்பட்டாங்கன்னு பாஜக மேலிடத்துல சொல்லுவேன். அதோட இது தொடர்பா செய்தியாளர்கள் கிட்டயும் பேசுவேன்’னு அவர் மிரட்டிட்டு இருக்காராம்.”

“தமிழக காங்கிரஸ்லயும் ஏதோ புகைச்சல்னு கேள்விப்பட்டேனே?”

“அங்க என்னைக்குதான் புகைச்சல் இல்லாம இருந்திருக்கு? தமிழக காங்கிரஸ் தலைவரா யார் இருந்தாலும் அவருக்கு எதிரா ஒரு கோஷ்டி செயல்படும். கே.எஸ்.அழகிரி தலைவரா இருந்தப்ப தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் போன்ற தலைவர்கள் அவரை புறக்கணிச்சாங்க.. சத்யமூர்த்தி பவனுக்கே வராம இருந்தாங்க. இப்ப அதே ரூட்ல செல்வப் பெருந்தகையை மாணிக்கம் தாகூர் புறக்கணிக்கறாராம். அவர் சத்யமூர்த்தி பவனுக்கே வர்றது இல்லையாம். தேர்தல் முடிவுக்குப் பிறகு செல்வப் பெருந்தகையை தலைவர் பதவியில் இருந்து மாத்திட்டுதான் சத்தியமூர்த்தி பவனுக்கு வருவேன்னு சபதம் எடுத்திருக்காராம்.”

“அப்படி நடக்க வாய்ப்பு இருக்கா?”

“ஆள் இல்லாத கடைல யார் டீ ஆத்துனா என்ன?” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...