No menu items!

டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா?

டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா?

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததை மறைப்பதற்காக பணம் கொடுத்த வழக்கில், குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. டிரம்ப் தேர்தலில் போட்டியிட முடியுமா?

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், கடந்த 2006ஆம் ஆண்டு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுடன் இவ்வழக்கில் மொத்தமாக 34 புகார்களை டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டு வந்தார்.

ஆனால், இதுதொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் மறுத்து வந்தார். ஸ்டார்மி டேனியல்ஸுடன் உடலுறவு கொண்டதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்தார்.

இந்த வழக்கின் மையமாக உள்ள ஸ்டார்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சியங்களை ஆறு வாரங்களாக நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கின் 12 நடுவர்கள் இரண்டு நாட்கள் விவாதித்து ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில் டிரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றவாளி என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குற்ற வழக்கு ஒன்றில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறை.

தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 11 அன்று அறிவிக்கப்பட இருக்கிறது. டிரம்புக்கு சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்றும், அபராதமே விதிக்கப்படும் எனவும் இருவிதமாக அமெரிக்க சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு அவமானகரமானது என்றும் மோசடியானது என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரம், ‘யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல’ எனக்கூறி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரச்சார குழு இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த தீர்ப்பு வந்துள்ளதால், டொனால்ட் டிரம்ப் தேர்தலில் போட்டியிட முடியுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க சட்ட நிபுணர்கள், ‘குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டாலும், டிரம்ப் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக நீடிக்க முடியும். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளையே அமெரிக்க அரசியலமைப்பு வரையறுத்துள்ளது. அதன்படி போட்டியிடுபவர் குறைந்தபட்சம் 35 வயதுடையவராகவும் அமெரிக்க குடிமகனாகவும் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராகவும் இருக்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை. சிறையில் உள்ள நபர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்” என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...