’விடாமுயற்சி’ படத்திற்கு கொடுத்த கால்ஷீட் வீணாக வேண்டாம் என்று சொன்ன அஜித், அதே நாட்களில் ‘குட் பேட் அக்லி’ன் பட ஷூட்டிங்கை வைக்க சொல்லிவிட்டார். இதனால் விடாமுயற்சிக்கு திட்டமிட்டு இருந்த சண்டைக்காட்சிகான கால்ஷீட்டை இப்போது குட் பேட் அக்லி பட சண்டைக்காட்சிகளுக்காக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பமே ஆக்ஷன் என தொடங்கியிருக்கும் இப்படத்தின் வியாபாரம் செம சூடாக இருப்பதாக கூறுகிறார்கள்.
‘துணிவு’ படத்தின் வெற்றி அஜித்தின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது. இதன் மூலமான வியாபார மதிப்பை அறுவடை செய்ய வேண்டிய ‘விடாமுயற்சி’ படம் எப்போது ஷூட்டிங் என தெரியாமல் இழுத்து கொண்டே போக, இப்போது ‘குட் பேட் அக்லி’ படம் அதன் பலனை அடைந்திருப்பதாக தெரிகிறது.
’குட் பேட் அக்லி’ ஷூட்டிங் நடக்க ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள்ளாகவே அப்படத்தின் டிஜிட்டல் வியாபாரம் பெரும் விலைக்கு போய் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிப்படுகிறது.
இதுவரையில் இல்லாத வகையில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டிஜிட்டல் உரிமை மட்டும் சுமார் 95 கோடிக்கு விலை போயிருக்கிறதாம். அதேபோல் திரையரங்கில் வெளியான பிறகு ஒடிடி-யில் ஸ்ட்ரீமிங் செய்யும் உரிமையைக் கைப்பற்ற நெட்ஃப்ளிக்ஸ் மும்முரமாக இருக்கிறதாம். அநேகமாக ஒடிடி உரிமையை வாங்குவதில் அமேசானை நெட்ஃப்ளிக்ஸ் பின்னுக்குத் தள்ளிவிடும் என்கிறார்கள்.
ஷூட்டிங் ஆரம்பிப்பதற்குள்ளாகவே இப்படி வியாபாரம் சூடுப்பிடித்திருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறது ’குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனம்.
மலையாள சினிமாவுக்கு அடுத்த ஹிட்!
2024 அநேகமாக மலையாள சினிமாவுக்கான ஆண்டாகதான் இருக்கும் போல. தமிழில் ரீ-ரிலீஸ் செய்தே திரையரங்குகளை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். புதுப்படங்கள் எதுவும் சுவாரஸ்யமாக இருப்பதாக தெரியவில்லை. பாலிவுட்டிலும் ஒரு நல்ல கதையை படமாக எடுங்கள் என ரசிகர்கள் கமெண்ட அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தெலுங்கு சினிமாவிலும் இந்த வருடம் பெரிய தலைகளின் படங்கள் இன்னும் வெளியாகவில்லை. கன்னட சினிமாவும் அடுத்த பாய்ச்சலுக்கு இன்னும் தயாராகவில்லை.
ஆனால் மலையாள சினிமா அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து, ஒடிடி- தளங்களின் மூலம் தென்னிந்தியாவையும், பாலிவுட்டையும் அதிர வைத்து கொண்டிருக்கிறது.
2018, மஞ்ஜூம் மேல் பாய்ஸ், ப்ரேமலு, ஆடு ஜீவிதம், என அடுத்தடுத்து ஹிட்களுடன் கணக்கை தொடங்கியிருக்கும் கேரளாவில் மீண்டுமொரு ஹிட் படம். ப்ரித்விராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ‘குருவாயூர் அம்பலநடயில்’ பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
பக்காவான கமர்ஷியல் படங்களுக்கான சமாச்சாரங்களுடன் பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியாகி இருக்கிறது ‘குருவாயூர் அம்பலநடயில்’. ’ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படப்புகழ் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியாகி இப்படம் ஒட்டுமொத்தமாக 50 கோடி வசூலை பட்டென கடந்திருக்கிறது. படம் வெளியான முதல் திங்கள் கிழமை 3 கோடி வசூலித்திருப்பதுதான் வியாபார வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் மட்டும் 20 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.
மம்மூட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் டர்போ படத்திற்கு திரையரங்குகள் அதிகம் ஒதுக்கப்பட்டால், இப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டாலும், வசூலில் 100 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசில் ஜோசப், நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், சிஜு சன்னி, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.