நோபல் பரிசு பெற்ற கனடா எழுத்தாளர் அலிஸ் மன்றோ இன்று காலமானார்.
அலிஸ் மன்றோ மறைவுக்கு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதியுள்ள இரங்கல் குறிப்பில், ‘பல வருடங்களுக்கு முன், அதிகாலை ஐந்து மணிக்கு எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. அப்போது செல்பேசி இல்லை. சந்தைக்காரர்களாக இருப்பார்கள். நான் எரிச்சலுடன் ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டேன். ‘நான் அலிஸ் மன்றோ’ என்றார். நான் பதறிப்போய் மன்னிப்பு கேட்டேன். நான் கேட்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் சிரித்துவிட்டு பதில் சொன்னார்; அல்லது சொல்லிவிட்டு சிரித்தார். ஒரு பதின் வயதுப் பெண்ணிடம் பேசுவது போலவே இருந்தது.
சிறுகதை தொகுப்புக்கு நோபல் பரிசு இல்லை. ஆனால், சிறுகதைக்கு முதல் முறையாக நோபல் பரிசு பெற்றவர் இவர். அவர் இறந்து போனார் என்ற துயரச் செய்தி இன்று கிடைத்திருக்கி்றது.
அவர் தன் குடும்பத்தினர் பற்றி எழுதினார். ஆனால், மகள்கள் பற்றி எழுதியதே இல்லை. ஏன் என்று பத்திரிகைக்காரர் கேட்டார். அவர் சொன்னார், ‘ வயதாகிப்போன சமயம் என்னை முதியோர் காப்பகத்தில் அவர்கள்தான் சேர்த்து பார்ப்பார்கள். அவர்களைப் பற்றி ஒன்றும் மோசமாக எழுதமாட்டேன்.’
இரண்டு விசயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. ஒரு முறை இலக்கிய விருது நடுவராக பணியாற்றினார். உங்களுக்கு எங்கே நேரம் கிடைக்கும் என்றேன். அவர் இது திரும்பக் கொடுக்கும் நேரம் என்றார். தான் 98 புத்தகங்களை படித்ததாகச் சொன்னார். ‘முன் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரைக்குமா?’ என்று கேட்டேன். சிரித்தார்.
80 வயதை நெருங்கும் சமயம் தான் ரோல்ஸ்ரோயை இன்னொருமுறை படிக்கப் போவதாகச் சொன்னார். 1400 பக்கங்கள். படித்தாரா தெரியவில்லை.
100 பேர் சூழ்ந்திருக்க, பட்டுப்போன்ற தன் கையை என்னிடம் தந்து ‘உங்களை அழைப்பேன்’ என்றார். பத்து மாதம் கழிந்துவிட்டது. மறந்துவிட்டார் என நினைத்தேன். ஞாபகமாக என்னை அழைத்தார். சிரித்தபடி பேசினார்.
சென்று வாருங்கள், சிறுகதை அரசி” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், ‘நம் காலத்தின் மிக முக்கிய சிறுகதை ஆசிரியர் அலிஸ் மன்றோ. அவரது சில சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.