2024 நாடாளுமன்ற தேர்தல் பாஜகவின் கையை விட்டுப் போகிறது. பாஜக தலைவர்கள் சொல்வதைப்போல் அக்கட்சியால் இந்த தேர்தலில் 400 சீட்களுக்கு மேல் வேல்ல முடியாது. மெஜாரிட்டிக்கு தேவையான 272 இடங்களைப் பிடிக்கவே கடுமையாக போராட வேண்டி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளரான ராஜ்தீப் சர்தேசாய். நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்த நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பிரபல இணையதளமான இந்தியா டுடேவில் அவர் கட்டுரையும் எழுதி இருக்கிறார்.
பாஜகவின் கையில் இருந்து இந்த தேர்தல் சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு அவர் கூறும் சில காரணங்கள்…
அலை இல்லாத தேர்தல்:
இந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த விதமான அலையையும் பார்க்க முடியவில்லை. 2014-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஒரு மாற்றம் வேண்டும் என்ற விருப்பத்தை பொதுவாக மக்களிடையே பார்க்க முடிந்தது. 2019-ல் நடந்த தேர்தலில் புல்வாமா தாக்குதல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. மத்தியில் வலிமையான அரசு வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் அப்படி எந்த அலையும் இல்லை. இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்ற பாஜகவின் பிரச்சாரமும், ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் பிரச்சாரமும் பெரிய அளவில் எடுபடவில்லை.
ஒரே வீட்டில் இருக்கும் அம்மா, மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பெருமை உலக அளவில் உயர்ந்திருப்பதாக கூறுகிறார். ஆனால் மகள், இந்த ஆட்சியில் வேலை வாய்ப்புகள் குறைந்திருப்பதாக வருத்தப்படுகிறார். அதனால் மக்களின் சிந்தனை ஒரே விதமாக இல்லை என்பதைப் பார்க்க முடிகிறது.
மகாராஷ்டிரா, கர்நாடகாவில் புதிய சூழல்:
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்த மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இப்போது அக்கட்சிக்கு சாதகமான சூழல் இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட வலிமையாக இருக்கிறது. அதேபோல் மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் வலிமையாக இல்லை. ஆனால் எதிர்க்கட்சி கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது. அதனால் அந்த 2 மாநிலங்களிலும் பாஜகவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு இருக்கும்.
மெகா வெற்றிகள் கிடைக்காது:
2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் ஹரியானாவில் 10 சீட்களிலும் வென்றது. பீஹாரில் மொத்தமுள்ள 40 சீட்களில் 39 சீட்களை கைப்பற்றியது. ஆனால் அப்போது இருந்த நிலை இப்போது இல்லை. இந்த மாநிலங்களில் முன்பு இருந்த்தைவிட இப்போது எதிர்க்கட்சிகள் வலிமையாக உள்ளன. இந்த மாநிலங்களில் மொத்தமாக 10 சீட்களையாவது பாஜக இழக்கும் சூழல் உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில்கூட சில சீட்களை இழக்கும் சூழலில் பாஜக உள்ளது.
ராமர் கோயில் ஓட்டுகளை தராது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதால் இம்முறை இந்துக்களின் வாக்குகளை அதிக அளவில் பெறலாம் என்பது பாஜகவின் கணக்கு. ஆனால் பெருவாரியான மாநிலங்களில் ராமர் கோயில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ராமர் கோயிலைவிட அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை மக்கள் முக்கியமாக கருதுகிறார்கள். முக்கியமாக பெண்கள் இம்முறை அடிப்படை பிரச்சினைகளுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள்.
மொத்தமாக பார்க்கும்போது 400 சீட்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பாஜக தலைவர்கள் கூறினாலும், உண்மையில் அவர்கள் மத்தியில் இம்முறை 272 சீட்களையாவது பெற்று தனிப் பெரும்பான்மை பெற வேண்டுமே என்ற கவலை இருப்பதை பார்க்க முடிகிறது.