அஜித் தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டு பைக் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவரது போட்டியாளர் விஜய், தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ரசிகர் மன்றங்களை ஒரு ராணுவப் படையைப் போல் கட்டமைத்து கொடுத்ததை இன்று அரசியல் கட்சியாக களம் மாற்றி இருக்கிறார்.
இப்படியொரு சூழல் இருக்கும் நிலையில்தான், சூர்யா தனது ரசிகர் மன்றங்களை கட்டமைக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தமிழ் நாடு முழுவதிலும் வார்டுகள் அடிப்படையில் நிர்வாகிகளை நியமிப்பது, எதிர்கால திட்டங்களை முன்னெடுக்க மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது என ஒரு அரசியல் கட்சிக்கான அடித்தளத்தை அமைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.
இந்த செய்தியே சூர்யா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற யூகத்தை கிளப்பி இருக்கிறது. உண்மையில் சூர்யா அரசியலுக்கு வரப்போகிறாரா?
இப்போதைக்கு இல்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ரசிகர் மன்றங்களை ஒரு அரசியல் கட்சியைப் போல் நடத்தும் போது, ரசிகர்களுக்கு தனக்கும் இடையில் ஒரு தொடர்பு உருவாகும். ஒவ்வொரு வார்டிலும் என்ன நடக்கிறது, ரசிகர்களின் நற்பணி எப்படி நிகழ்கிறது. யார் யாருக்கு பலன் கிடைத்திருக்கிறது, அடுத்து என்ன செய்யலாம், கல்வி மற்றும் விவசாயம் போன்றவற்றில் மாற்றங்களை கொண்டு வர என்ன செய்யலாம் என்பது போன்றவற்றை நிகழ்த்தவே இந்த முயற்சியாம்.
இப்படியொரு யுக்திரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கும் போது, ரசிகர் மன்றங்களும் சமூக அக்கறையுடன் நல்ல காரியங்களை செய்ய முடியும். அடுத்து மக்களிடையே சூர்யாவின் நல்லெண்ண முயற்சிகளுக்கும் வரவேற்பை கிடைக்க செய்ய முடியும். மக்கள் ரசிகர்களாகவோ அல்லது நலம் விரும்பிகளோகவோ அவர்களை மாற்ற முடியும். இதனால் அவரது படங்கள் வெளியாகும் போது, அதற்கான பார்வையாளர்களை எதிர்காலத்தில் உருவாக்க முடியும். இப்படி பல கணக்குகளை வைத்துதான் இப்படியொரு முயற்சியாக இதை திட்டமிட்டு உள்ளார்களாம்.
விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டால், அடுத்து களத்தில் யார் என்ற இடத்தை நிரப்பவும், அரசியலில் நேரடியாக களமிறங்காமல், ஒரு மக்கள் இயக்கத்தைப் போல் செயல்படவும்தான் இந்த கட்டமைக்கும் பணிகள் என்கிறார்கள்.
இந்த பணிகள் அனைத்தும் ஆறு மாதங்களில் முடிவடையும் வகையில் திட்டமிடப்ட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.