ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ‘கோவா’ படமெடுத்தார். அடுத்து தனது அப்பாவை வைத்தே ‘கோச்சடையான்’ படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களாலும் செளந்தர்யாவுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். இதனால் ரஜினிக்கும் தேவையில்லாத பஞ்சாயத்துகள்.
இந்த பஞ்சாயத்துகள் எல்லாம் ஓரளவிற்கு ஓய்ந்த இருக்கையில்தான், செளந்தர்யா மீண்டும் வெப் சிரீஸ் விஷயத்தில் களமிறங்கினார்.
அமேசான் ப்ரைம் ஒடிடி-காக ‘கேங்ஸ் குருதிப்புனல்’ என்னும் வெப் சிரீஸை தயாரிக்கிறார். இது குறித்து மார்ச்சில் மும்பையில் நடைபெற்ற புதிய வெப் சீரிஸ் குறித்த அறிமுக விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1970-களின் பின்னணியில் நடக்கும் கதை. இரண்டு கேங்களுக்கு இடையே நடக்கும் யார் டாப் என்று முடிவு செய்வதில் நடக்கும் அடிதடி பஞ்சாயத்துதான் திரைக்கதை. சத்யராஜ், அசோக் செல்வன், ஈஸ்வரி ராவ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நோவா இயக்குகிறார்.
இந்த நோவாவுக்கும், செளந்தர்யாவுக்கும் இடையில் ஏதோ மனஸ்தாபம் உண்டாகி இருப்பதாகவும், அதனால் இந்த வெப் சிரீஸின் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த ஆண்டே அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரிமிங் செய்ய வேண்டுமென்பதால், படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்த நிலையில், ஷூட்டிங் அப்படியே நிற்கிறதாம்.
இந்த வெப் சிரீஸை தயாரிக்க ஒதுக்கப்பட்ட நிதி மொத்தமும் காலி. ஆனால் எடுக்கப்பட்டதோ அறுபது சதவீதம் மட்டும்தானா. இன்னும் மீதமுள்ள 40 சதவீதத்தை எடுக்க பட்ஜெட் இல்லையாம்.
ஷூட்டிங் ஆரம்பமான சில வாரங்களிலேயே பட்ஜெட் எகிறுகிறது என்று சுதாரித்து கொண்ட செளந்தர்யா, ஷெட்யூல், ப்ரொடக்ஷன் செலவு என எல்லாவற்றிலும் இறங்கியிருக்கிறார். இது இயக்குநருக்கு பிடிக்க வில்லையாம். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.
தாமதமாக மதியம் 2 மணிக்கு ஷூட்டிங்கை தொடங்குவது, நட்சத்திரங்களின் கால்ஷீட்டை தேவையில்லாமல் வீணடிப்பது என இயக்குநர் இருப்பதால்தான் பட்ஜெட் எகிறிவிட்டது என செளந்தர்யா தரப்பில் கூறப்படுகிறதாம்.
வெப் சிரீஸ் நன்றாக வரவேண்டுமென்பதால்தான் இப்படி திட்டமிட்டு இருக்கிறோம் என்று பாண்டிச்சேரியில் ஷூட்டிங்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் செளந்தர்யா பேக் அப் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். பாண்டிச்சேரியில் இருந்த நட்சத்திரங்களுக்கு ஒன்றும் புரியாமல் போகவே, ஷூட்டிங் கேன்சலாகி இருக்கிறது.