சென்னை பெருமழையின் போது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திர பதிப்பக புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் வெள்ளத்தில் மூழ்கியது. அதில் சேதமடைந்த நூல்களில் உலர வைத்து மீட்கப்பட்ட நூல்களை பெரும் தள்ளுபடியில் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திரைப்பட இயக்குநரும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் நண்பருமான வசந்த பாலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடைய தேசாந்திரி பதிப்பகம் பதிப்பித்த புத்தம்புது புத்தகங்கள் கடந்த வருடம் டிசம்பரில் நிகழ்ந்த பெரு மழை வெள்ளத்தில் மிதந்து நனைந்தன. பல லட்சம் பெறுமதியான புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட புத்தகங்கள் நனைய வைத்து உலர வைக்கப்பட்டன. ஆனாலும் ஜனவரியில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு மறுபடியும் புத்தகங்கள் புதியதாக அச்சடிக்கப்பட்டன.
“ஏன் சார் நனைந்த புத்தகங்களையும் விற்கலாமே? பெருவாரியான வாசகர்கள் வாங்குவார்களே!” என்றேன்.
“எல்லா பதிப்பகத்திலும் புதிய புத்தகங்கள் கிடைக்கும் போது நம் பதிப்பகத்தில் மழையில் நனைந்த புத்தகங்களை வாங்க வாசகர்களுக்கு ஒரு மனத்தடை உருவாகும். எனக்கு நஷ்டமானாலும் சரி புத்தகக் கண்காட்சியில் புதிய புத்தகங்களை மட்டுமே விற்கவேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன் பாலன்” என்றார்
“தேர்தல் முடிந்தபிறகு மழையில் நனைந்த புத்தகங்களை மிகக் குறைந்த விலையில் விற்க ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யலாம்” என்றார்.
அதன் தொடர்ச்சியாக மே 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் மழையில் நனைந்த புத்தகங்களின் விற்பனை துவங்கவுள்ளது.
நிகழ்வில் எஸ்ராவின் சிறுகதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்த எழுத்தாளர் தன் அனுபவங்களை பகிர உள்ளார்.
கூடுதலாக எஸ்.ராவின் சிறப்பான உரையும் உள்ளது.
40 ஆண்டுகளாக தமிழில் எழுதிக் கொண்டும், தொடர்ந்து இந்த சமூகத்தோடு உரையாடியபடியிருக்கும் ஒரு எழுத்தாளனுக்காக, எழுத்தே தன் வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளனுக்காக பெரும் திரளாக வாசகர்கள் திரண்டு வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எஸ். ராமகிருஷ்ணன் தனது இணையதளத்தில் எழுதியுள்ள பதிவில், “சென்னை வெள்ளத்தில் தேசாந்திரி பதிப்பகத்தின் குடோனில் வைக்கப்பட்டிருந்த எனது புத்தகங்கள் நிறையச் சேதமடைந்தன. நெருக்கடியான அந்தச் சூழ்நிலையின் போது நிறைய வாசகர்கள், அன்பர்கள் ஆதரவுக் கரம் நீட்டினார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.
ஈரத்தில் நனைந்து போன புத்தகங்களை உலர வைத்து மீட்டிருக்கிறோம். இந்தப் புத்தகங்களை மிகக் குறைவான விலையில் விற்பதற்காகச் சிறப்பு விற்பனை ஒன்றினை மே 3 வெள்ளிக்கிழமை மாலை மேற்கொள்கிறோம்
நனைந்த புத்தகங்களை விலையில்லாமல் வாசகர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால், அச்சிட்ட பணமாவது கிடைத்தால் மட்டுமே நஷ்டத்தைச் சரி செய்ய முடியும். ஆகவே ரூபாய் நூறு, ரூபாய் இருநூறு என இரண்டு விலை வைத்துள்ளோம். எந்த நூலையும் இந்த விலையில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.