நம் எல்லோருக்கும் தல தோனியைத் தெரியும். அவர் வாங்கிய கோப்பைகளையும், அவர் அடித்த சிக்சர்களையும் தெரியும். இன்னும் கொஞ்சம் நெருக்கமான ரசிகர்களுக்கு அவரது மனைவி சாக்ஷியையும், மகளையும் தெரியும். ஆனால் தோனியின் மாமியாரைப் பற்றியும், அவர் குவித்து வைத்துள்ள 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பற்றியும் பலருக்கு தெரியாது.
தோனியின் மாமியார் பெயர் ஷீலா சிங். இவர் சாக்ஷி சிங்கின் தாயார் மட்டுமல்ல. பலகோடி ரூபாய் மதிப்புள்ள தோனி என்டர்டெயின்மென்ட் லிமிடட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார். ஆரம்பத்தில் தோனியின் மனைவி சாக்ஷியால் தோனி என்டர்டெயின்மென்ட் லிமிடட் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால் அவரால் அதைச் சரியாக நிர்வாகம் செய்ய முடியாமல் போக, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக 2020-ம் ஆண்டில் ஷீலா சிங்கை தோனி நியமித்தார்.
கிரிக்கெட்டில் எந்த நேரத்தில் யாரை பயன்படுத்த வேண்டும்? யாருக்கு எப்போது வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதை சரியாக புரிந்துகொண்டவர் தல தோனி. பிசினஸ் வாழ்க்கையிலும் அந்த புரிதல் அவருக்கு இருந்தது என்பதற்கு ஷீலா சிங்கின் நியமனமே சாட்சி.
சாதாரண குடும்பத் தலைவியாக இருந்த ஷீலா சிங், மாப்பிள்ளை தனக்காக ஒரு நிறுவனத்தையே கொடுத்ததும், அதன் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கத் தொடங்கினார். தனது கணவர் ஆர்.கே.சிங்கின் தேயிலை நிறுவனத்தின் நிர்வாகத்தை சில காலம் ஷீலா சிங் கவனித்துள்ளார். அந்த அனுபவத்தில் புகுந்து விளையாடிய ஷீலா சிங், திரைப்படங்களை தயாரிப்பது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துவது என்று அடுத்தடுத்து பிசினஸில் சிக்சர்களை விளாசினார்.
ஷீலா சிங்கின் இந்த செயல்பாட்டால் தோனியின் நிறுவனத்தின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்தது. இதில் ஷீலா தோனியின் பங்கு மதிப்பு மட்டும் 800 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.