No menu items!

சன்ஷேடில் தொங்கிய குழந்தை – பெற்றோர் மீது தப்பா?

சன்ஷேடில் தொங்கிய குழந்தை – பெற்றோர் மீது தப்பா?

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் சன்ஷேடில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த குழந்தை மீட்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குழந்தையை மீட்டது எப்படி என்று அதைக் காப்பாற்றிய இளைஞர் விளக்கியுள்ளார்.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வெங்கடேஷ் –ரம்யா என்ற இளம் தம்பதியின் 8 மாதக் கைக்குழந்தை கிரண்மயி. நேற்று காலை குடியிருப்பின் 4-வது மாடியில் கிரண்மயிக்கு ரம்யா சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருந்தார். அப்போது அம்மாவின் கையில் இருந்து நழுவிய குழந்தை கிரண்மயி கீழே விழுந்த்து. அதிர்ஷ்டவசமாக கீழே விழாமல் 2-வது மாடியில் அமைக்கப்பட்டிருந்த சன்ஷேடில் குழந்தை விழுந்தது.

கிரண்மயி கீழே விழுந்ததும் ரம்யா அச்சத்தில் அலறினார். அம்மாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், 2-வது மாடியின் சன்ஷேடில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தை 2-வது மாடியில் இருந்து தரையில் விழுவதைத் தடுக்கும் முயற்சியாக கீழே சிலர் போர்வைகளை விரித்து நின்றனர். இன்னும் சிலர் பால்கனி வழியாக ஏறி, குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டாவது மாடியின் பால்கனியில் ஏறிய சிலர் ஒருவரை ஒருவர் பத்திரமாக பிடித்து கொள்ள, ஹரி என்ற இளைஞர் துணிச்சலுடன் ஏறி குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தார். அதைப் பார்த்து சுற்றி இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பினர். துணிச்சலாக பால்கனியின் மீது ஏறி குழந்தையை மீட்ட ஹரியைப் பாராட்டினர்.

மீட்கப்பட்ட குழந்தைக்கு பெரிய அளவில் காயம் ஏதும் இல்லை. நெற்றியில் மட்டும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தது. அந்த காயத்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தையை மீட்டது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஹரி, “நான் எனது வீட்டு பால்கனியில் போனில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது கீழே சத்தம் கேட்டது. நான் போய் பார்த்தபோது குழந்தை சன்ஷேடில் தொங்கிக்கொண்டு இருந்தது. நான் 3-வது மாடிக்கு சென்று சன்ஷேடில் ஏற முயன்றேன். ஆனால் 3-வது மாடியில் உள்ள வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதனால் இரண்டாவது மாடிக்கு வந்து, அதன் பால்கனியில் ஏறி குழந்தையின் கையைப் பிடித்து இழுத்து மீட்டேன். அந்த குழந்தையை உயிருடன் காப்பாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இந்த சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லும்போது, “இது பெற்றோரின் கவனக்குறைவால் நடந்ததுனு சொல்ல முடியாது. அந்தக் குழந்தையை அவங்க பொத்தி பொத்தி வளர்ப்பாங்க. நாங்களே பார்த்திருக்கிறோம். குழந்தை விஷயத்துல அவங்க ரொம்ப கவனமா இருப்பாங்க. குழந்தை தவறுதலாக விழுந்துடுச்சு. எல்லோரும் சேர்ந்து காப்பத்திட்டோம். இதுக்காக அப்பா – அம்மாவை குறை சொல்ல வேண்டாம்” என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...