’கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வந்துதானே ஆகவேண்டும்’ என்ற பழமொழி தமிழில் உண்டு. இதற்கு சமீபத்திய உதாரணம் சித்தார்த்த – அதிதி ராவ் ஜோடியின் காதல்.
இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஒன்றாக தென்பட்டனர். எங்கு சென்றாலும் ஜோடியாக சென்றனர். காபி குடிக்க வேண்டுமென்றால் கூட சித்தார்த்திற்கு கூடவே போனவர் அதிதிராவ்.
இதையெல்லாம் பார்த்து, இதோ இவர்களுக்கு காதல் பற்றிக்கொண்டது என ஊடகங்களில் எல்லோரும் கூற ஆரம்பித்தும் கூட, இவர்கள் இருவரும் வாயைத் திறக்கவே இல்லை. ஆனால் இப்போது எழுதிய கிசுகிசுக்கள் எல்லாம் போதும், நாங்கள் திருமணம் பண்ணிக்கொள்கிறோம் என்ற முடிவுக்கு இந்த ஜோடி வந்திருக்கிறது.
சித்தார்த்திற்கும், அதிதிராவுக்கும் திருமணம் நடந்துவிட்டது என்ற செய்தி சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை. இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் மட்டுமே நடந்து முடிந்திருக்கிறது.
தெலங்கானாவில் இருக்கும் வனபதி மாவட்டத்தில் உள்ள புராதன கோயிலில்தான் இவர்களுக்கு நிச்சயத்தார்த்தம் நடந்திருக்கிறது. இந்த கோயில் அதிதிராவின் முன்னோர்கள் காலத்திலிருந்தே அவர்களது கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோயில். அதனால் அங்கே வைத்து தமிழ் முறைப்படி நிச்சயத்தார்த்தம் முடிந்திருக்கிறது.
இப்போது திருமணத்திற்கு சித்தார்த் பெற்றோர்களும், அதிதிராவின் உறவினர்களும் நல்ல நாள் பார்த்து வருகிறார்களாம். இதில் சித்தார்த் பெற்றோர் தமிழ் பிராமண பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இங்கே பின்பற்றப்படும் முறைப்படிதான் திருமண சடங்குகள் இருக்கவேண்டும் என கறாராக கூறியிருக்கிறார்களாம். மேலும் நல்ல நாளில்தான் முகூர்த்தம் இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்களாம்.
அதிதிராவின் உறவினர்கள் எல்லோரும் ஹைதராபாத்தில்தான் இருக்கிறார்களாம். இதனால் திருமணம் அநேகமாக ஹைதராபாத்தில் வைத்துதான் நடக்கும் என்கிறார்கள்.
பூஜா ஹெக்டேவின் 45 கோடி ரூபாய் வீடு
தமிழில் ‘முகமூடி’ படம் மூலம் அறிமுகமாகி, பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் நீண்ட நாளைக்குப் பிறகு ‘பீஸ்ட்’ படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்த பூஜா ஹெக்டேக்கு மும்பையில்தான் வீடு. ஒரு மத்திய வர்க்க குடியிருக்கும் வீடு அவ்வளவுதான்,
தமிழில் எடுப்படாத போதிலும், ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்த பூஜா ஹெக்டேக்கு என ஒரு மார்கெட் இருந்தது. 4 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகையாகதான் இருந்துவந்தார். ஆனால் கடந்த இரண்டுவருடமாக ஒரு ஹிட் கூட கொடுக்கமுடியாமல் தடுமாறி வருகிறார் பூஜா ஹெக்டே.
இதனால் முன்னணி ஹீரோக்களும் கூட பூஜாவா என்று கண்டுகொள்ளாமல் போகவே, சல்மான் கானை ரொம்பவே நம்பியிருந்தார் பூஜா. ஆனால் அவரும் கைவிட்டுவிடவே… இப்போது மீண்டும் சம்பளத்தை குறைத்து வாய்ப்புகளைப் பிடிக்க முயன்று வருகிறார்.
இந்த போராட்டம் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தான் இதுவரை சம்பாத்தித்த பணத்தில் ஒரு வீடு வாங்கியிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் சிலர் பூஜா ஹெக்டே வாடகைக்குதான் குடிப்பெயர்ந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். மும்பை பந்தராவில் கடலைப் பார்த்தபடி இருக்கும் இந்த வீட்டின் விலை சுமார் 45 கோடி என்று கிசுகிசுக்கிறார்கள். 4,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக இருக்கிறதாம் பூஜா ஹெக்டேவின் வீடு.
இந்த புதிய வீடாவது பூஜா ஹெக்டேவுக்கு வெற்றிப்படங்களைக் கொடுக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்
விஜயின் ’கோட்’ பட பஞ்சாயத்து
விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில், ஏஜிஎஸ் தயாரிக்கும் ‘க்ரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ அதாவது ‘கோட்’ படத்தின் ஷூட்டிங் இப்போது ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கிறது,
இதனால், அரசியல் களம் காண காத்திருக்கும் விஜய், இந்த தேர்தலில் ஓட்டு போடாமால் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
தேர்தலின் போது ரஷ்யாவில் ஷூட்டிங் வைத்திருப்பது வேண்டுமென்ற எடுத்த முடிவா என்ற கேள்வி விஜயை நோக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பதில் சொல்வதற்கு விஜய் இங்கில்லை.
இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி இருக்கிறது.
அதேபோல் படத்தின் வியாபார வேலைகளையும் தொடங்கிவிட்டார்கள். இங்கேதான் ஒரு பஞ்சாயத்து என கூறுகிறார்கள். ஒடிடி உரிமைக்கு அதிக விலை எதிர்பார்ப்பதால் அந்த வியாபாராம் இன்னும் முடியவில்லை. ஆனால் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்குவதாக முடிவாகி இருந்ததாம்.
தொலைக்காட்சி உரிமை மட்டும் சுமார் 52 கோடிக்கு பேசப்பட்டதாம். இந்த விலையை முன் வைத்ததே சன் டிவிதான் என்கிறார்கள். ஏறக்குறைய வியாபாரம் முடிந்த நிலையில் இப்போது சன் டிவி பின் வாங்கிவிட்டதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது.
இதற்கு காரணம் விஜய் ஏற்கனவே சன் டிவிக்கு கால்ஷீட் கொடுத்திருந்தாராம். அதாவது பீஸ்ட் படம் சுமாராக போனதும், அதை ஈடுகட்டுகிற மாதிரி மீண்டுமொரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தாராம்.
ஆனால் இடையில் விஜய், தெலுங்கு படத்தயாரிப்பாளரும், ஆர்,ஆர்,ஆர், படத்தை எடுத்தவருமான தனய்யாவின் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வந்தது, சன் டிவி தரப்பிற்கு கடுப்பை கிளப்பிவிட்டதாம்.
விஜயின் கால்ஷீட் ஏற்கனவே இருக்கும்போது, இப்படியொரு பேச்சு கிளம்புகிறது என்றால் அதில் ஏதோ இருக்கிறது. அதையும் பார்த்துவிடலாம் என்று சன் பிக்சர்ஸ் தரப்பில் நினைத்திருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும், சன் டிவிக்கும் இடையேதான் புரிதல் இல்லாமல் போயிருக்கிறது. அதுதான் இந்த வியாபார பின்னடைவுக்கு காரணம் என்றும் கூறுகிறார்கள்.